Saturday, February 9, 2013

தமிழகத்தில் ஷத்திரிய அரிதாரம் பூசிய சாதிகளும் நூல்களும்


20-ஆம் நூற்றாண்டில் ஷத்திரிய அரிதாரம் பூசிய சாதிகளும் நூல்களும்


பிரிட்டிஷார் வருகைக்கு முன் தொழில் முரண்பாடுகள், சாதிப் பிரச்சனைகள் அனைத்தும் சாதி பஞ்சாயத்துக்கள் வழியே ஒழுங்கு படுத்தப்பட்டன. காலப்போக்கில் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சாதியத்தை அவற்றால் ஒழிக்க முடியவில்லை. சாதிய உறவுகளில் மட்டும் சில மாற்றங்களை அவை ஏற்படுத்தின. அன்றைய காலனிய கால தமிழ்ச் சமூகத்தில் சாதியம் வலுவானதாக இல்லையென்றாலும் அதன் பழந்தன்மை யைக் கட்டிக்காக்க பலர் முயன்றனர். இந்தப் பின்புலத்தினூடாக சாதி நூல்கள் பல எழுதப்பட்டன. இவை அனைத்தும் மனுவின் வழி நூல்களாகவே உருவாக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டுக்கு முன் சாதி வரலாற்றைக் கூறும் சுவடிகள் பல எழுதப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சுவடி இடங்கை, வலங்கை சாதிகளைப் பற்றி கூறுகிறது. இது 1995 இல் எஸ். சௌந்தரபாண்டியன் அவர்களால் `இடங்கை வலங்கையார் வரலாறு என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டது.
இந்நூலில்,
1. இடங்கை வலங்கை புராணம்
2. வலங்கை சரித்திரம் (1792)
3. இடங்கை வலங்கைச் சாதி வரலாறு
4. புதுவை இடங்கை வலங்கைச் சாதியர் வரலாறு (1776)
முதலான சுவடிகளின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.
இடங்கை, வலங்கை சாதிகள் குறித்த விரிவான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. இதுபோல் பல சுவடிகள் இன்று பதிப்பிக்கப்படாமல் உள்ளன. அவை பதிப்பிக்கப்பட்டால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சாதிக்கும் சமூகத்திற்குமான உறவை அறிந்துகொள்ள முடியும். அவை சாதிய வரலாற்றை எழுதுவதற்கு உதவியாகவும் அமையும்.
ஐரோப்பியர்களும் சாதிய ஆய்வுகளும்
இந்திய நாட்டில் நிலவுகின்ற சாதிய முறைகளை அறிந்து கொள்வதற்காக ஐரோப்பியர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்தியாவைப் புரிந்து கொண்டால் தான் அதனை நிர்வகிக்க முடியும் என்ற காரணத்தினாலேயே இதுபோன்ற ஆய்வுகளை அவர்கள் முன்னெடுத்தனர். குறிப்பாக பண்பாட்டு ஆய்வுகளில் இவர்கள் அதிகம் கவனம் செலுத்தினர். தமிழகத்தில் மொழி குறித்த ஆய்வை எல்லீஸ், கால்டுவெல் ஆகியோர் முன்னெடுத்தனர். இவர்கள் முன்வைத்த திராவிடர் என்ற கருத்தியல் தமிழனுக்கு புதிய பெயர் அடையாளத்தைக் கொடுத்தது. தமிழ் : மொழி – இனம் என்ற அடிப்படையில் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட இவ்வடையாளம் ஆரிய மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இனம் தமிழ் இனம் என்பதை அடையாளப்படுத்தியது.
ஐரோப்பியரின் சுரண்டல், ஐரோப்பியரின் சுரண்டலால் உருவான பஞ்சம், பட்டினிச் சாவுகள் இவை ஒருபுறம் நிகழ்ந்து வந்த நிலையில் திராவிட இனம் பற்றியும், திராவிட மொழிக் குடும்பம் பற்றியும் ஐரோப்பிய பிஷப்புக்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர். இக்கால கட்டத்தில் தான் தென் இந்திய இன ஆய்வை தஸ்டன் செய்து முடித்தார். தஸ்டன் செய்த ஆய்வு தென்னகச் சமூகத்தை ஐரோப்பிய ஆட்சியாளர்கள், பாதிரிமார்கள் புரிந்துகொள்ள உதவியது. இதன் மூலம் அவர்கள் தங்கள் நிர்வாகத்தையும் மதப் பரப்புரையையும் ஒழுங்குபடுத்திக் கொண்டனர். அபே துபுவா தொடங்கி தஸ்டன் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் பண்பாட்டி யல் ஆய்வுகளாக மட்டுமே இருந்தன. அவை காலனியச் சுரண்டலுக்கு துணைபோயின. சாதி முறையால் மக்கள் படும் துன்பங்களைப் பேசும் இவர்களது ஆய்வுகள் காலனியச் சுரண்டலால் சமூகம் நெருக்கடிக்குள்ளான நிலையை மறைத்துவிட்டன.* ஐரோப்பியர்கள் கொடுத்த கல்வியும் நிர்வாகக் கல்வியாகவே இருந்தது. ஐரோப்பியர்களால் மேற்கொள்ளப்பட்ட சாதி குறித்த ஆய்வுகளில் பல குறைபாடுகள் இருந்தன. இதனால் தமிழகத்தில் இருந்த சிலர் சாதி அமைப்புகளை ஏற்படுத்தி தத்தம் சாதி வரலாறுகளை ஐரோப்பியர்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினர். இந்தப் பின்புலத்தின் ஊடாகத்தான் அயோத்திதாசரின் ஆய்வுகள் உருப் பெற்றன என்பது வரலாறு.
19 ஆம் நூற்றாண்டில் சாதி நூல்கள்
19 ஆம் நூற்றாண்டில் பல சாதி சங்கங்கள் தோன்றின. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் (1852), ஆதிதிராவிடர் மகாசன சபை (1857), வன்னியகுல சத்திரியர் சங்கம் (1888), திராவிடர் கழகம் (1890), அத்வைத சபை(1893), சத்திரிய மகாஜன சங்கம் (1895), சத்திரிய நாடார் மகாஜன சங்கம் (1895), வேளாளக் கவுண்டர் சங்கம் (1898), தென்னிந்திய சாக்கைய புத்த சங்கம் (1898) என பல சாதிச் சங்கங்கள் அன்று இருந்தன. அன்றைக்கு தமிழ்ச் சமூகத்தில் சாதிப் பிரச்சனைகளுக்கு நீதிகளைப் பெற்றுத் தந்த மடம், ஊர் பஞ்சாயத்து முறைகளில் மாற்றம் ஏற்பட்டதால், சாதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வேலையை சாதிச் சங்கங்கள் செய்தன. அன்றைய மக்கள் சாதிச் சங்கங்கள் வழி ஐரோப்பிய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைப்பது, மனுகொடுப்பது என்ற நடைமுறைகள் உருவாயின. சாதிச் சங்கங்களில் படித்தவர்கள் பலரும் இருந்தனர். அவர்கள் அதனை வழி நடத்தினர். பலர் தங்களது சாதி வரலாற்றை நூலாக எழுத ஆரம்பித்தனர். இவ்வாறு எழுதுகையில் பிற சாதிகள் குறித்து அவர்கள் குறிப்பிடும் செய்திகள் சாதி மோதலுக்கு வழிவகுத்தன. இதனால் ஒவ்வொரு சாதிச் சங்கத்தவர்களும் வேறு சாதிச் சங்க நூல்களையும் அவர்கள் கருத்துக்களையும் எதிர்க்கும் நிலை வளர்ந்தது. சாதி ஆதரவு நூல்கள், சாதி எதிர்ப்பு நூல்கள், தன் சாதி வரலாற்று நூல்கள் என்ற வகைகளில் சாதி நூல்கள் எழுதப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இந்த சாதிக்காரர் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று மனுவை ஆதரித்தும் ஐரோப்பியர்களுக்கு சாதி குறித்த அறிமுகத்தை தரும் நூல்களையும் சிலர் எழுதினர்.
1875 இல் வெளிவந்த `சாதி நூல் என்ற நூல் முக்கியமான ஒன்றாகும். இதன் ஆசிரியர் இந்நூல் குறித்து கூறுகையில் `திருவாரூரி லெழுந்தருளியிருந்த ஞானப்பிரகாச சுவாமிகள் ஆரிய பாஷையில் உள்ள ஆகம புராண இதிகாச நூலாரின் ஆதாரங்களைக் கொண்டு இயற்றியது என நூலின் மேல் அட்டையில் குறிப்பிடுகிறார். சென்னை மயிலாப்பூரில் இருந்து இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் `சந்திர சேகர நாட்டாரவர்களாலும், திருவல்லிக்கேணி சண்முக கிராமணியாரவர்களாலும் பரிசோதிக்கப்பட்டது, என்ற குறிப்பு நூலின் அட்டை முகப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நூலைப் படிக்கும் போது அதன் நோக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது. அவை வருமாறு: – மூவேந்தர்களையும் ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிக்குள் இணைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. – வெள்ளையர்களுக்கு சாதி பற்றித் தெரியவில்லை. அவர்கள் சாதிக் கணக்கெடுப்பில் பிழை செய்கின்றனர். அவர்கள் இந்நூலைப் படித்து அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.
- சாதிகள் அப்படியே இருக்க வேண்டும், அது குலைந்தால் தொழில் முறைகள் பாதிக்கும்
மேற்கண்ட நோக்கங்களுக்காகவே இந்நூல் எழுதப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. இதுபோன்ற நோக்கங்கள் இந்த நூலில் மட்டுமல்லாமல் அன்று வெளிவந்த பல சாதி நூல்களிலும் இடம்பெற்றது. இந்நூல் குறிப்பிட்ட சாதியை மட்டும் எடுத்துப் பேசாமல் அனைத்துச் சாதிகளுக்குமான கடமைகளைப் பற்றிப் பேசுகிறது. சுவடியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனுநீதிக் காதல் என்ற நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் தெய்வச் சிலையா பிள்ளை. இந்நூலும் மனுதர்மத்தை ஆதரித்தே எழுதப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களும் தங்கள் சாதி வரலாற்றை தனித் தனி நூல்களாக எழுதும் முறை வளர்ந்தது. நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பற்றி ` தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம் என்ற நூல் 1894 இல் சுப்பிரமணிய ஐயரால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரத்தைக் கூறுவதுடன் அவர்களது ` சாதிமுறை நியாயங்களையும் கூறுகிறது.
பிராமணிய மேலாண்மையை ஏற்றுக் கொண்டு தங்கள் சாதி முறை ஒழுக்கங்களுக்கு ஏற்ப தங்கள் சமூகத்தவர்கள் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிற சாதிகளைப் பற்றியும் அவர்களுக்கும் தங்களுக்குமான வேறுபாடுகள் குறித்து எதுவும் இந்நூலில் பேசப்படவில்லை. தன் சாதிக்கான சட்ட திட்டங்களை மட்டுமே இந்நூல் பதிவு செய்கிறது. பரதவர்கள் பற்றிய சாதி நூல்களும் இக்காலக்கட்டத்தில் வெளிவந்துள்ளன. பரதவர்கள் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியத் தில் பல உள்ளன. அன்று இனக்குழுவாக இருந்த பரதவர்கள் தங்களை இன்று தனி சாதியாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இனக்குழுக்கள் பிற்காலத்தில் தங்களை சாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்வது பற்றி வேறு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம். ஐரோப்பியர்கள் வருகைக்குப் பின் கடற்கரை பகுதிகளில் கிறித்துவம் பரப்பப்பட்டது. கிறித்துவத்தை ஏற்று பரதவர்கள் பலர் மதம் மாறினர். தூத்துக்குடி பகுதி பரதவர்களிடையே மேசைக் காரர்கள் என்ற புதிய பிரிவு ஒன்று தோன்றியது. இது பின்னாளில் மேசைக்கார சாதியாக மாறியது. (விவரங்களுக்குப் பார்க்க. நாவாவின் ஆராய்ச்சி, 1999:பக்.1,16,) மேசைக்காரர்களுக்கும் பரதவர் களுக்கும் சாதிய உள்முரண்பாடு இருந்தது. இவர்கள் இருவரையும் பிற சாதியினர் கீழாகவே பார்த்தனர். இந்நிலையில் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்ள இவர்கள் சாதி நூல்களை எழுதினர். 1892 இல் `பரதகுல பாண்டியர் பழமை என்ற நூல் எழுதப்பட்டது. பின்னர் இதன் தொடர்ச்சியாக 1902 இல் `பரதவர் புராணம் என்ற சாதி நூலும் பின்னர் `பாண்டியர் பரதவரான இலம்பகம் என்ற சாதி நூலும் எழுதப்பட்டது. பாண்டியர்களுடன் தங்கள் வரலாற்றை இணைத்து எழுதுவதன் மூலம் தங்களை மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சாதியினர் என்று காட்டிக் கொள்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாடார் சமூகத்தினர் எழுச்சி பெற்றனர். கிறித்துவத்தின் ஊடாகப் பெற்ற மாற்றுச் சிந்தனைகள் இவர்களை விழிப்படையச் செய்தன. தோள் சீலைப் போராட்டம் , 1870 களில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டங்கள் என நாடார்கள் போராட்டங்கள் மூலம் தங்களுக்கான பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க முயன்றனர். நாடார் சமூகத்தின் எழுச்சி நூற்றாண்டாக பத்தொன்பதாம் நூற்றாண்டு விளங்கியது. இதனால் இக்காலகட்டத்தில் நாடார் சாதி குறித்து பல நூல்கள் எழுதப்பட்டன. நாடார்கள் குறித்த வரலாற்றை 1849 இல் கால்டுவெல் தான் முதலில் நூலாகப் பதிவு செய்கிறார். திருநெல்வேலி நாடார்கள் - சமூகம், மதம், அறம், குணநலன்கள் ஆகியவை பற்றிய சுருக்கம் என்பது அந்நூலின் பெயர். இதன் தொடர்ச்சியாக 1871 இல் வெளிவந்த சான்றோர் மரபு என்ற நூலும் நாடார்களின் சாதி வரலாற்றைப் பேசுகிறது. இதன் ஆசிரியர் எச். மார்ட்டின் வின்பிரட். இந்நூலும் மிஷினரியைச் சேர்ந்தவராலேயே எழுதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1883 இல் திருநெல்வேலி நாடார்கள் என்ற நூலை சாமுவேல் சர்க்குணர், கால்டுவெல் ஆகியோர் சேர்ந்து எழுதினர். இவ்வாறாக ஐரோப்பியர்களால் எழுதப்பட்ட நாடார்கள் குறித்த சாதி நூல்கள் முக்கியமான வரலாற்று ஆவணங்களாக உள்ளன. 1924 இல் நாடார்கள் சத்திரியரா? என்ற நூல் இயற்றப் பட்டது. இதன் ஆசிரியர் பூபதி சின்ன லட்சுமணராஜா. சாதிய உயர்வுக்கான அங்கீகாரத்தைக் கேட்பதாக இந்நூல் தலைப்பு அமைந்துள்ளது. 1874 இல் அப்பாவு முதலியார் எழுதி வெளிவந்த வேளாளர் இயல்பு என்ற நூல் வேளாளர்களின் உயர்வை பற்றிப் பேசுகிறது. ஏரெழுபது என்ற நூலுக்குப்பின் வெளிவந்த வேளாளர் சாதி வரலாற்று நூலாக இதனைச் சொல்லலாம். இதுபோன்றே தனித்தனியாக தம் சாதி வரலாற்றைப் பேசும் நூல்கள் பல வெளிவந்தன. பா. இராகவ மூர்த்தி பிள்ளை 1894 இல் எழுதிய பறையர் உற்பத்தி விளக்கம் என்ற நூலும்,


இரு ஜாதியினரிடையே நிலைவிய ஷத்திரிய போட்டிகள்

1890 இல் சி. எம். மாரிமுத்துப் பிள்ளை எழுதிய பள்ளிப்பாட்டு, கா. ஆறுமுக நாயக்கர் 1891 இல் எழுதிய வன்னிய குல விளக்கம் முதலான நூல்களும் சாதி உயர்வையும், சாதியின் தேவையையும் நியாயப்படுத்தும் நூல்களாக வெளிவந்துள்ளன.
இருவேறு சாதியினர் ஒருவரை ஒருவர் குறைத்துப் பேசி நூல்களை எழுதி வெளியிடும் போக்கும் இக்காலகட்டத்தில் நிலவியது. குறிப்பாக கிராமணிகள், பள்ளிகள் இவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல்கள் நூல்களிலும் வெளிப்பட்டது. இம்மோதல் போக்கு 20 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. பள்ளிகள், கிராமணிகள் குறித்து ஏதோ ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளனர். (அது என்ன நூல் என்று அறியமுடியவில்லை, எனினும் 1891 இல் எம். துரைசாமி நாயகரால் எழுதி வெளியிடப் பட்ட சாணார் விகற்ப வினாவிடை என்ற நூலாக அது இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.) அந்நூலுக்கு எதிர் வினையாக 1892 இல் பள்ளிகள் வாயாப்பு என்ற நூலை கடலூர் சண்முக கிராமணி என்பவர் எழுதி வெளியிட்டார் என்பதை அறிய முடிகிறது. . ஐரோப்பியர்கள் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பும் தமிழில் பல சாதி நூல்களை உருவாக்கியது. மேலும் ஆய்வாளர் எட்கர் தஸ்டன் செய்த `தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலுக்கு எதிரான எதிர்ப்புகளும் இருந்தது. (இது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்.) யார் யாரை எந்த சாதியில் சேர்க்க வேண்டும் என்று பல தரப்பினரும் எழுதியும் பேசியும் வந்தனர். இதன் பொருட்டு உருவான சாதி நூல்களும் அதற்கு எதிரான நூல்களுமே 19 ஆம் நூற்றாண்டின் சாதி நூல்களின் வரலாறாக அமைகிறது. 20 ஆம் நூற்றாண்டு சாதி நூல்கள் 20 ஆம் நூற்றாண்டில் சாதி நூல்களின் வரலாறு வேறு தளத்திற்குச் செல்கிறது. இக்காலகட்டத்தில் சாதிச் சங்கங்கள் அதிகரித்திருந்தன. அவை அரசியல் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டன.
திராவிட இயக்க அரசியலோடு சேர்ந்து ஒடுக்கப்பட்ட அமைப்பினரும், பிற சாதி அமைப்பினரும் செயல்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பெரியார் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மாநாடுகள் நடத்தினார். அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். இது ஒரு புறம் இருக்கையில் மகாத்மா காந்தியின் போதனைகளை அடிப் படையாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட சாதியினரின் அமைப்புகள் சில செயல்பட்டன. அவை காந்தியின் ஹரிஜனர் கருத்தியலை சாதிய விடுதலைக்கான வழியாகக் கருதின. `ஹரிஜன் என்ற பெயரில் நூல்களை எழுதி அவர்கள் வெளியிட்டனர். தீண்டாமை விலக்கு (1928, காந்தியின் சொற்பொழிவுகள்), ஹரிஜன சேவாகீதம் (1934), அரிஜன ஸேவை- ஜி. எஸ். அழகர் சாமி,(1932) முதலான தலைப்பு களில் 20 ஆம் நூற்றாண்டில் காந்திய கருத்துக்களின் அடிப்படையி லான சாதி எதிர்ப்பு நூல்கள் வெளிவந்தன. இதுபோல் சுயமரியாதை கருத்துக்கள் அடிப்படை யிலும் சாதி எதிர்ப்பு நூல்கள் வெளிவந்தன. அவற்றில் சில வருமாறு : சுயமரியாதை கீதம் (1930), தீண்டாமை விலக்குப் பாடல்கள் – வி. பரமசிவம் (1920). வன்னியர்கள், வேளாளர்கள், முதலியார்கள், சாணார்கள், நாடார்கள் முதலியோர் தங்களுக்கான சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு அரசியல் இயக்கங்களோடு இணைந்து சாதி உயர்வு தேடினர். இத்தகைய சாதிச் சங்கங்கள் பெரியார் வழிகாட்டுதலில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற தளத்தில் நின்று தங்கள் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டன. இருப்பினும் அவை தங்களுக்குள் உயர்வைத் தேடிக் கொண்டே, யார் மேலாண்மைச் செலுத்துவது என்ற நோக்கில் வளர்ந்தன. இதற்காக தங்கள் சாதியை சோழர்கள், பாண்டியர்களுடன் இணைத்து ஒவ்வொரு சாதி நூலாசிரியரும் எழுதுகின்றனர். இதற்கு ஆதரவாக சாதியின் பல்வேறு அலகுகள் அவர்களுக்குத் துணைசெய்தன. 1930களுக்குப் பிறகு நடைபெற்ற கோயில் நுழைவு போராட்டங் களை எதிர்த்துப் பிராமணர்கள் சில நூல்களை எழுதினர். இந்திய விடுதலைக்குப் பின்னும் சாதி நூல்கள் பல எழுதப்பட்டன. அவை 19ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககால சாதி நூல்களை இணைத்து, சோழர்கள், பாண்டியர் வரலாற்றைச் சேர்த்து முன்னோர் பெருமை பேசும் நூல்களாக இருந்தன. 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சாதி நூல்கள் வருமாறு : 1922 இல் பெருமாள் பிள்ளை ஆதிதிராவிடர் வரலாறு என்ற நூலை எழுதினார். இதன் தொடர்ச்சியாக டி. கோபால செட்டியார் ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம் என்ற நூலை 1925 இல் எழுதினார். ஆதிதிராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வீக குடிகள் என்ற கருத்தை மையப்படுத்தி இந்நூல்கள் எழுதப்பட்டிருந்தன. இது போல் பி. ஜே. எம். குலசேகர ராஜ் என்பவரால் 1918 இல் எழுதப்பட்டு நாடார் மகாஜன சங்கத்தால் வெளியிடப்பட்ட நாடார் குல வரலாறு, 1905 இல் கி. சைவ. வீரப்பிள்ளை எழுதிய வன்னியர் புராணம், சாந்தலிங்கக் கவிராயர் 1918 இல் எழுதிய பள்ளி பத்து முதலான நூல்கள் சாதியப்பெருமை பேசும் அரசியலின் ஊடாக எழுதப்பட்டவையாகும். 19 ஆம் நூற்றாண்டைப் போல் 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத் தில் நாடார்கள், வன்னியர்களிடையே யார் உயர்ந்தவர்கள்? என்ற கருத்து யுத்தமே நிகழ்ந்தது. இவர்கள் அவர்களை விமர்சித்து நூல் எழுதுவதும், இதழ் நடத்துவதும் அவர்கள் அதற்கு மறுப்பு எழுதுவதுமாக இப்போக்குகள் தொடர்ந்தன. இதற்கு நல்ல உதாரணம் பள்ளி பத்து என்ற சாதி நூலாகும். இதில் இந்நூலாசிரியர் பள்ளர்கள் தான் பள்ளியர் என்றும் அவர்கள் தாழ்ந்தவர்கள் எனவும் எழுதியிருந்தார். இந்நூல் வன்னியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. தங்களை தாழ்ந்தவர்கள் என்று நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறாரே என கோபமுற்றனர். இந்நூல் வன்னியர் களை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் 1919 களில் வழக்கு தொடுத்தனர். பள்ளிபத்து நூல் ஆசிரியர் நீதி மன்றத்திற்கு வந்து மன்னிப்பும் கேட்டார், என்ற செய்தியை க்ஷத்திரியன் இதழ் தொகுப்பு வழி அறிய முடிகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் பிராமணர்களால் எழுதப் பட்ட நூலாக, 1932 இல் மா. நீலகண்ட சித்தாந்தியார் எழுதிய தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் (தடை) என்ற நூலைக் குறிப்பிடலாம். இந்நூல் அத்வைத சபையோர்களால் எழுதப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சாதியை நியாயப்படுத்தும் இந் நூல் மனுதர்ம சாஸ்திரக் கருத்துக்களை முன்வைத்து ஒடுக்கப் பட்டவர்கள் தாழ்ந்தவர்களே என வாதிடுகிறது. மேலும் நூலில் பல இடங்களில் சமஸ்கிருத மந்திரங்களும் எடுத்துக்காட்டப்பட்டு தாழ்ந்த சாதி என்பதற்கான நியாயம் கற்பிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர்களை கேவலப்படுத்தி பிராமணர்கள் செய்த நூலுக்கு மறுப்பாக இக்காலகட்டத்திலும் சில நூல்கள் வெளிவந்தன. இதில் குறிப்பிடத்தக்கதாக 1925 இல் வெளிவந்த சிவ. மா. சொக்கலிங்க செட்டியார், இராம பட்டுக்கோட்டை ஆகியோர் எழுதிய சூத்திரர் ஆசாரியாராவதற்கு உரியாரல்லர் என்று உரைத்த ஆரியர் குதர்க்க நிராகரணம் என்ற நூலைக் குறிப்பிடலாம். 1920 களுக்குப் பின் சாதி குறித்து இரண்டு நூல்கள் சித்தார்த்த புத்தக சாலையின் மூலம் வெளிவந்துள்ளன. பௌத்த மரபின் ஊடாக செயல்பட்ட இந்நிறுவனம் ஒடுக்கப்பட்டோர் சாதி குறித்தான நூல்களான பிரம்பை வித்வான் சி. மாணிக்க உபாசகரால் எழுதப்பட்ட ஐதிபேத ஆபாச விளக்கம் என்ற நூலையும் 1926 இல் ம. மாசிலாமணி என்பவரால் எழுதப்பட்ட வருணபேத விளக்கம் என்ற நூலையும் வெளியிட்டுள்ளது. ஜாதி பேத ஆபாச விளக்கம் என்ற நூலின் முகப்பில் `காரணகாரியமின்றி கூறும் பொய் ஜாதிகளை நிராகரித்து மெய் ஜாதிகளை விளக்கி புராணேதிகாச ஆதாரங்களைக் கொண்டு சகல மதஸ்தர்களுமிச்சிக்க வரைந்துள்ள யதார்த்த நூல் என்ற குறிப்பு இந்நூல் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைப் புலப்படுத்துகிறது. (ஸ்டாலின் ராஜாங்கம், 2007: பக். 34, 50-51)
இந்திய விடுதலைக்குப் பின் சாதி குறித்த நூல்கள் பல்வேறு பரிணாமத்தைப் பெற்றன. சாதிச் சங்கங்கள் அரசியல் சங்கங்களாக வளர்ந்தன. சாதி அரசியலும் அதனூடாக உரிமைகளைப் பெறுவது என்ற நிலையும் வளர்ந்தது. சமூகப் பிரச்சனைகளை அரசியல் செயல்பாடுகளாலேயே வென்றெடுக்க முடியும் என்று கருதி பலரும் தத்தம் சாதிச் சங்கங்களை ஏற்படுத்தினர். அதனை தேர்தல்களில் வாக்கு வங்கியாகவும் மாற்றினர். இதன் தொடர்ச்சி யாக சாதி மோதல்கள் மற்றும் சாதிய மேலாண்மைக்கான போட்டியும் வளர்ச்சியுற்றது. வர்க்கப் போராட்டம் சாதியப் போராட்டங்களாக மடை மாற்றம் செய்யப்பட்டன. இன்று வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு, கற்றல் உரிமைகள் முதலானவற்றை ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுத் தரும் அமைப்புகளாக சாதிச் சங்கங்கள் மாறிவிட்டன. சாதி வரலாறுகள், உட்சாதி வரலாறுகள் என இன்று சாதி நூல்கள் எழுதப்படுகின்றன. இதற்குச் சான்றாக மூவேந்தர் யார் (1977) இரா. தேவ ஆசீர்வாதம், வேளாளர் யார் (1981) இரா. தேவ ஆசீர்வாதம், பள்ளர் அல்ல, மள்ளர் ஆம் மன்னர் (1991) இரா. தேவ ஆசீர்வாதம், தமிழ் இலக்கியத்தில் பள்ளர், தேவேந்திரகுல வேளாளர்கள் (1993) டாக்டர் குருசாமி சித்தர், 2001 இல் முனைவர் எஸ்.டி. ஜெயபாண்டியன் எழுதிய நாடார் வரலாறு, தூரன் நல். நடராசன் எழுதிய கொங்கு வேளாளர் வரலாறு (2000), கே, சி, லக்ஷ்மி நாராயணன் எழுதிய தமிழக அந்தணர் வரலாறு- தொகுதி 1, 2 (2005), 2006 இல் வெளிவந்த கவிஞர் காவிரி நாடன் அவர்களின் வன்னியப் பெருங்குலம், காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் தொகுப்பு நூலான முக்குலத்தோர் சரித்திரம் (2007) மற்றும் எழில் இளங்கோவன் எழுதிய அருந்ததியர் இயக்க வரலாறு(2008) முதலான நூல்களை இங்கு நாம் குறிப்பிடலாம். இவை எல்லாம் விடுதலைக்குப் பின் வெளிவந்து சாதி சங்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ள சாதி நூல்களாகக் கொள்ளலாம். இன்று பழைய சாதி நூல்கள் பலவும் மறுபதிப்பு செய்யப்படுகின்றன. சாதிச் சங்கங்கள் நூல்கள் மட்டுமல்லாமல் தனி இதழ்களையும் வெளியிடுகின்றன. இந்தியச் சமூக அமைப்பு முழுவதுமான முதலாளித்துவ சமூக அமைப்பாக மாற்றம்பெறாத நிலையில் பழைய மரபான சிந்தனை முறைகளை ஒவ்வொரு மனிதனும் பண்பாட்டு நடவடிக்கை களில் வெளிப்படுத்துகிறான். சுயசாதி அடையாளத்தை தனக்கான பண்பாட்டு நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு மனிதனும் பாதுகாத்துக் கொள்கிறான். இது பிள்ளைப் பிறப்பு சடங்கு முதல் இறப்புச் சடங்கு வரை தொடர்கிறது. எல்லா நவீன உற்பத்தியையும் நுகரும் மனோநிலையில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிய அடையாளத்தை தேடும் மனோபாவம் ஒளிந்திருக்கிறது. இதனையே இன்றைய ஆளும் வர்க்கம் பண்பாட்டுப் புனிதமாக கட்டமைக்கிறது. உற்பத்திக்கும் சமூக இயக்கத்திற்குமான உறவு நிலையிலிருந்து சிந்திக்காமல் நவீனத்தை நுகர்வதில் மட்டும் இன்று ஒவ்வொருவர் மனமும் செலுத்தப்படுகிறது. இந்தப் போக்குகளால்தான் திருமணம் போன்ற செயல்களில் சாதி பிரதான இடத்தைப் பெறுகிறது. இதன் விளைவாக வர்க்கப் போராட்டம் சாதியப் போராட்டங்களாக திசைதிருப்பப்படுகின்றன. இதனை ஆளும்வர்க்கம் தனக்குச் சதாகமாகவே பயன்படுத்திக் கொள்கிறது. இந்தப் பின்புலத்தின் ஊடே நாம் தமிழில் வெளியாகும் சாதி நூல்களின் அரசியலைப் புரிந்து கொள்ளலாம். பார்வை நூல்கள்
1. கோ. கேசவன், சாதியம், 1995. சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
2. தூரன் நல். நடராசன், கொங்கு வேளாளர் வரலாறு, 2000.
3. காவ்யா. சண்முகசுந்தரம், தொகுப்பாசிரியர். முக்குலத்தோர் சரித்திரம், 2007.
4. டி. கோபால செட்டியார், ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்,1925. 5. சி. இளங்கோ, தமிழகப் பண்பாட்டு அமைப்புகள் – வரலாறும் செயல்பாடும் (1850-1950), அச்சில் வராத முனைவர்பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 2007.
6. அ. மார்க்ஸ், காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும், 2007.
7. பொது பதிப்பாசிரியர் நடன. காசிநாதன், இடங்கை வலங்கையர் வரலாறு,1995.
8. நா. வா.வின் ஆராய்ச்சி, ஜனவரி, 1999.
9. தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம், மறுபதிப்பு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 2010.
10. கம்பர், சிலை எழுபது, சீதை பதிப்பகம்,சென்னை, 2007.
11. கம்பர், ஏரெழுபது, சீதை பதிப்பகம்,சென்னை, 2007.
12. ஒட்டக்கூத்தர், ஈட்டி எழுபது, சீதை பதிப்பகம்,சென்னை, 2009.
13. மா. இராசமாணிக்கனார், சோழர் வரலாறு -3 பாகங்கள், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை, 2009.
14. ஸ்டாலின் ராஜாங்கம், தீண்டப்படாத நூல்கள், ஆழி பதிப்பகம், 2007.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.