Wednesday, July 31, 2013

இது 'வம்சம்' திருவிழா!



''கற்பூர நாயகியே... கனகவள்ளி. காளி... மகமாயி... கருமாரியம்மா!'' மரத்துக்கு மரம் கட்டப்பட்டு இருக்கும் லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டு இருந்தார். மரங்களைக் கடந்தால், கேரள செண்டை மேளச் சத்தம் காதைக் கிழிக்கிறது. அம்மனைத் தோளில் சுமந்து சிலர் ஊர்வலம் வர... ஊரே திருவிழாக் கோலம்கொண்டு இருக்கிறது!
 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் உள்ள விராச்சிலையில்தான் இந்தக் கொண்டாட்டம். ஊரின் காவல் தெய்வமான 'ஸ்ரீ மது அடைக்கலம் காத்த அம்பாள்’ திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும்  பிரமாண்டமாகத் திருவிழா நடத்துகிறார் கள். 'செவ்வாய் திருவிழா’ எனப்படும் இந்த விழாவில், கிட்டத்தட்ட 3,000 ஆடு களை நேர்ந்துகொண்டு வெட்டி, ஊர் முழுக்க விருந்துவைக்கிறார்கள்.
விராச்சிலையை வலம்வந்தோம். வரிசையாகப் பெண்கள் பொங்கல் வைத்துக்கொண்டு இருக் கிறார்கள். ஒரு தெருவில் குடும்பத்தினருடன் இயக்குநர் பாண்டிராஜ் பொங்கல்வைத்துக்கொண்டு இருந்தார். ''உங்க ஊர் திருவிழாவைப் பத்திச் சொல்லுங்களேன்'' என்றதும் உற்சாகமாகி விட்டார். ''கல்யாணம் ஆன ஒவ்வொரு ஆணும் ஒரு கிடா வெட்டுறது இந்தத் திருவிழாவில் வழக்கம். ஒவ்வொரு வீட்டுலயும் தனியாப் பொங்கல்வைக்காம பங்காளி வகையறாக் கள் ஒண்ணுசேர்ந்து பொங்கல்வைக்க ணும். சரியா 3 மணிக்கு சாமி தேர்லஊர் வலம் வரும். அப்படி ஊருக்குள்ள சாமி ஊர்வலம் வர்றப்ப, அந்தந்தத் தெருவுல கிடாய் வெட்டுவோம்.
இந்தக் கோயில் பதினெட்டுப்பட்டிக் கும் சொந்தம். அதனால, சித்திரை மாசமே பதினெட்டுப்பட்டிக்கும் பாட்டுப் பாடி திருவிழா அறிவிப்பு சொல்லுறது வழக்கம். அதுக்கு 'வளந்தானை’னு பேரு. அப்படித் திருவிழா அறிவிப்பு சொன்னதுமே பதினெட்டுப் பட்டியில் உள்ள மக்களும்மத்த ஊருல இருக்குற அவங்கவங்க சொந்தங்களுக்குத் தகவல் சொல்லிடுவாங்க. எல்லோரும் வந்து திருவிழாவுல கலந்துக்குவாங்க. அப்படிப் பேரு பெற்ற திருவிழா இது.  
பத்து வகையறாக்களுக்கு இந்தக் கோயில்ல முக்கியத்துவம் தருவாங்க. ஐநூற்றிப் புரையர், கானாட்டுப் புரையர், ஓயாமரி அம்பலம், தொண்டைமான் புரையர்,  மேலே வணங்கின தேவர், கீழே வணங்கின தேவர், வானாதிவிராயர்,     நஞ்சுண்டா ம.ஓ.சி, மணிக்கட்டி பல்லவ ராயர், எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்னு இந்த வகையறாக்களைப் பிரிச்சுவெச்சிருக்காங்க.
ஒவ்வொரு வகையறாவும் பத்து வயசுக்குக் கீழ உள்ள அவர்களின் உறவுக்காரப் பெண் குழந்தையைச் சீட்டுக் குலுக்கல் முறையில தலைமைக்குத்  தேர்ந்தெடுப்பாங்க. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டக் குழந்தையை  ஊருக்கு நடுவுல இருக்குற பெரிய வீட்டுல தங்கவைப்பாங்க. அந்தப் பெரிய வீட்டுக்கு 'மது’னு பேரு. இந்தக் கோயில் அம்மன், ஸ்ரீ மது அடைக்கலம் காத்த அம்பாள் வாழும் வீடுன்னு அர்த்தம். அதுக்கு அப்புறம்தான் காப்புக்கட்டி திருவிழாவே ஆரம்பிப்பாங்க. அந்தப் பெண் குழந்தை திருவிழா முடியும் வரை அவங்க வீட்டுப் பக்கமே போகக் கூடாது. காலை, மாலை ரெண்டு வேளையும் கோயிலுக்குப்போய் சாமி கும்பிடணும். அடுத்தடுத்த நாட்கள்ல மத்த வகையறாக்களின் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும் பெரிய வீட்டுல தங்கவைப்பாங்க. நவதானியத்தை முளைக்கவெச்சு, அதை எடுத்து இடிச்சி சாறு எடுப்பாங்க. அதுக்கு பேருதான் மது. அதை ஒரு புது மண் கலயத்துல வெச்சி, அந்தச் சிறுமிங்க ரொம்ப பயபக்தியோட கொண்டுபோகணும். அப்புறம்தான் இந்தச் செவ்வாய் திருவிழா நடக்கும். இதைஎல்லாம் தான் நான் என்னுடைய 'வம்சம்’ படத்துல காட்சிகளா வெச்சிருந்தேன்'' என்று சிரிக்கிறார் பாண்டிராஜ்!
- வீ.மாணிக்கவாசகம், பெ.தேவராஜ்
படங்கள்: பா.காளிமுத்து

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.