Sunday, March 10, 2013

அகத்தா மறவர்தலைவன் அகுதை நடுகள் கண்டுபிடிப்பு

அகத்தா மறவர்தலைவன் அகுதை நடுகள் கண்டுபிடிப்பு



சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி என்ற பொருண்மைக்கும் நடுகல் வழிபாட்டை அரசு என்ற நிறுவனம் சுவீகரித்துத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பது போன்ற சமூக அரசியல் வரலாறு குறித்த ஆய்வுப் பொருண்மைகளுக்கும் இக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு துணை செய்கின்றது. இந்நடுகற்களுள் முதலாவது நடுகல்லில் "வேள் ஊர் அவ்வன் பதவன்" என்றும், அடுத்த நடுகல்லில் "அன் ஊர் அதன்.. அன் கல்" என்றும், மூன்றாவது நடுகல்லில் "கல் பேடு அந்தவன் கூடல் ஊர் ஆகோள்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று நடுகற்களும் இறந்து போன வீரர்களின் நினைவுச் சின்னங்களாக எழுப்பப்பட்ட கற்கள் ஆகும். இவற்றில் உருவம் எதுவும் பொறிக்கப்படவில்லை. ஆயினும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டில் கூடலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், மாட்டு மந்தைகளை (ஆனிரையை)க் கவர்ந்து செல்ல முயன்ற போது அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், மறவர் போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் 'மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்' என்ற ஒரு குறிப்பு உள்ளது. இப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல் மேற்குறித்த கூடலூராக இருக்கலாம். மறவருள் ஒரு பிரிவினராகிய அகத மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் 'பொன்புனை திகிரி' (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் ('அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ') கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய ஆனிரை கவரும் மறவர்களின் ஆகோள் மரபினைப் பற்றிச் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் தெளிவான குறிப்புகள் உள்ளன. இத்தகைய கள்வர்-மறவர் மரபினரால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளைக் காத்து மடிந்த வீரனைப் பற்றியதே இந்த நடுகல் என்பது புலனாகிறது. இந்நடுகல் எந்த அரசரின் ஆதரவுடன் எழுப்பப்பட்டது என்ற விவரம் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் பெருவேந்தர்களின் ஆதரவுடன்தான் இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது எளிது.

இக் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராமி எழுத்து முறை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகப் பெருவேந்தனால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகும்.

பிண்குறிப்பு:
அகத்தா மறவர்களின் மண்டபம் திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ளது.அகத்தா மறவர்கள் திருப்பரங்க்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திரயிருப்பு,அருப்புக்கோட்டை பகுதியில் கானப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.