சேதுபதிகளின் சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இராமநாதபுரம் இராமலிங்க விலாச உட்புறத்தில் சேதுபதி காலத்தில் இராமாயணம், பாகவதம், திருமால் அவதாரங்கள், தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும் இடையே நடைபெற்ற போர்க் காட்சிகள், சேதுபதி மன்னரின் பள்ளியறைக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமர் பீட மண்டப மேல் வளைவுகளில் சேதுபதி மன்னர் உருவங்கள் பல்வேறு நிலைகளில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இதில் இரகுநாத சேதுபதி தமது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மையிடமிருந்து செங்கோல் பெறும் நிகழ்வும் காணப்படுகிறது. ஆனால் தொல்லியல் குறிப்பு மீனாக்ஷியிடமிருந்து செங்கோலை சேதுபதி தனது இருகரங்களையும் ஏந்தி பெற்றுக்கொண்டாதாக பதிவு செய்துள்ளது.
இவ்வோவியத்தில் இராஜராஜேஸ்வரி அம்மன் அமர்ந்த கோலத்திலிருந்து செங்கோலை முத்து
விஜய ரகுநாத சேதுபதிக்கு வழங்க, அவர் இரு கையை நீட்டிப் பெறுகிறார். அருகில் அரசியும் இளவரசரும் சாமரம் வீசும் பெண்டீரும் காட்டப்பட்டுள்ளனர். மன்னரும் இளவரசரும் ராஜபுத்திர பாணியில் ஆடை அணிகலன்களை அணிந்துள்ளனர். சேதுபதி மன்னர் முடிசூட்டுவிழாவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல மன்னர்கள் -72 பாளையக்காரர்கள்-மதுரை நாயக்கர் முதலானோர் கலந்துகொண்ட குறிப்புகளைக்காண்கிறோம். மதுரை, தஞ்சை அரசர்கள் சரியாசனத்திலும்,பாளையக்காரர்களில் சில்லவார், மறவர்கள் முதலானோர்கள் அதற்கடுத்த வரிசையிலும், தொட்டியர் கம்பளத்தார் அதற்கடுத்து பணிவுடன் நின்ற நிலையிலும் அவரது பேரவையில் இருந்தமையை வரலாறு சொல்கிறது. முடிசூடல் வைபவத்திற்கு தனுஷ்கோடியிலிருந்து தீர்த்தம் வரவழைக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தினாலானமணிமுடியை அணிந்தபின் பாரம்பரிய வாளைத்தாங்கியபடி போகலூரிலுள்ள மறவர்தலைவரிடம் ஆசிபெறுதலோடு முடிசூட்டு வைபவம் நிறைவு பெறுகிறது.
ராமலிங்கவிலாஸம்
- - - - - - - - - - - - - - - - - -
சேதுபதி மன்னர்கள் இராமேசுவரத்தில் உள்ள சிவபெருமான் மேல் அதீத பக்தி கொண்டவர்கள். அதன் பொருட்டு தாங்கள் உருவாக்கிய பிரமாண்டமான அரண்மனைக்கு “இராமலிங்க விலாசம்” என்று பெயர் சூட்டினர். தமிழகத்தில் எண்ணற்ற அரண்மனைகள் கட்டப்பட்டிருந்தன போர் மற்றும் பிற காரணங்களால் பல முற்றிலும் அழிந்து விட்டன. இன்று தமிழகத்தில் காணப்படும் ஒரு சில அரண்மனைகளில் நல்ல நிலையில் உள்ள அரண்மனைகளில் இவ்வரண்மனை குறிப்பிட்த்தக்கது. மேலும் மற்ற அரண்மனைகளில் இல்லாத அளவிற்கு எழில் மிகு ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கோயில் கட்டுமானத்தைப் போல கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்று மூன்று மண்டபங்களுடன் கிழவன் சேதுபதியால் சுண்ணாம்பு, செங்கல், கருங்கல் கொண்டு கி.பி. 1690 – 1710 வாக்கில் கட்டப்பட்டது.
இங்குள்ள ஓவியங்கள் சேதுபதி மன்னர்களின் ஆன்மீகப்பற்றையும், அகவாழ்க்கையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
இங்குள்ள ஓவியங்களில் இராமாயண, பாகவதக்காட்சிகள், சேதுபதி மன்னர்களின் அரசியல் தொடர்பான காட்சிகள், அன்றாட நடைமுறைகள், பொழுதுபோக்குகள் மற்றும் அவர்களது அந்தப்புற வாழ்வினை விளக்கும் காட்சிகள், முக்கியமான வழிபாட்டுத் தளங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
இங்குள்ள ஓவியங்கள் யாவும் முத்துவிஜயரெகுநாத சேதுபதி காலத்தில் (கி.பி. 1713-1725) வரையப்பட்டன மேலும் இவரது உருவங்கள் ஓவியங்களாக சில இடங்களில் உள்ளன.
முகமண்டபத்துச் சுவற்றில் சேதுபதிகள் தஞ்சை மராத்தியர்களுடன் செய்த போர், மைசூர் மூக்கறுப்பு போர், ஆங்கிலேய வர்த்தகர்களுடன் பேசுவது, கிறித்துவ பாதிரியார் மாண்டிஸ் அவர்களின் வருகை போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் மூலம் அக்காலகட்டங்களில் நடந்த போர் முறை மற்றும் போர் கருவிகள் பற்றிய விவரங்கள் தெரிய வருகிறது. மேலும் சைவ, வைணவ கடவுள்களின் திருவுருவங்களும் தீட்டப்பட்டுள்ளன.
பாகவத புராணக் காட்சிகள், முக மண்டபத்துக்கு அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வரையப்பட்டுள்ளது. அதில் கண்ணனுடைய லீலைகளை நீண்ட காட்சித் தொடராக வரைந்து விளக்கம் எழுதப்பட்டுள்ளது.
உள் மண்டப சுவர்களில் இராமயணக் காட்சிகள் உரிய விளக்கங்களுடன் மிக விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இராமனின் பிறப்பு, விசுவாமித்திரரின் வருகை, அகலிகை சாபவிமோசனம், வில் ஒடித்தல், இராம, லட்சுமண, பரதன் மற்றும் சத்ருக்கணனின் திருமணங்கள் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
அரண்மனையின் முதல் மாடியில் அரசனின் அந்தப்புர வாழ்க்கையும், இசை மற்றும் நடனம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், அரசனின் அன்றாட வாழ்க்கை முறையும் விளக்கமாகவும் நேர்த்தியாகவும் காட்டப்பட்டுள்ளன. மேலும் சேதுபதி மன்னர் இராஜராஜேஸ்வரி அம்மனிடம் செங்கோல் பெறுவது, சேதுபதிக்கு இரத்தின பட்டாபிஷெகம் செய்வது போன்ற காட்சிகள்
குறிப்பிடத்தக்கவையாகும்.
ஓவியங்களின் காலம்
- - - - - - - - - - - - - - - - - - - -
இங்குள்ள ஓவியங்கள் யாவும் ஒரே சமயத்தில் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் காலத்தில் (கி.பி. 1706 –1730) வரையப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
அதற்கு சாட்சியாக, அந்த ஓவியத்துக்கு கீழே இதன் விவரம் எழுதப்பட்டுள்ளது. மேலும், சேதுபதி, தஞ்சை மராட்டியர்களுக்குமிடையே கி.பி.1700 – 1710 வாக்கில் நடந்த போர் காட்சிகளும் காணப்படுவதால், இவ்வோவியங்கள் யாவும் 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வரையப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது.
இங்குள்ள ஓவியங்களில் எண்ணற்ற ஆபரணங்களும், வேலைப்பாடு அதிகம் உள்ள உடைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இவை சமூக படி நிலைக்கேற்ப பயன்பாட்டில் இருந்துள்ளது என இவ்வோவியங்கள் மூலம் தெரியவருகிறது. அதுபோல, சேதுபதி மன்னர்கள், இறைத் தொண்டு மட்டுமல்லாமல் பல்வேறு கலையினையும், கலைஞர்களையும் ஆதரித்துள்ளனர் என்பதற்கு இங்குள்ள ஓவியங்களே சாட்சியாக உள்ளன.
கிழவன் சேதுபதி
- - - - - - - - - - - - - - - -
கி.பி.1700 வாக்கில் சேதுபதிகளிலேயே திறமை மிக்கவரும் நீண்ட காலம் ஆட்சி செய்தவருமான கிழவன் சேதுபதி தனது தலைநகரைப் போகலூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றி இப்பெரும் மாளிகையைக் கட்டினார். அதில் தலையாய இடமான அரசவை நடக்கும் இடத்திற்கு, தானும் தனது மன்னோரும் வழிபட்டுவரும், இராமேச்வரம் உறையும் இறைவனது பெயரைக் குறிக்கும் வகையில் “இராமலிங்க விலாசம்” எனப் பெயரிட்டு அழைத்தார். இவ்வரண்மனையின் தலைவாயிலாகத் தற்பொழுது காட்சி அளிக்கும் நுழைவாயில் இராஜா பாஸ்கர சேதுபதி (1873 – 1903) அவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
ஒவியங்கள் - வரலாற்று நிகழ்ச்சிகள்
கிழவன் சேதுபதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மைந்தர் விசய ரகுநாத சேதுபதி இவ்வரண்மனையைக் காண்போர் வியக்கும் வண்ணம் அழகிய ஓவியங்களைத் தீட்டி அழகுக்கு அழகு சேர்த்தார். இவ்வழகிய சுவர் ஓவியங்களே இவ்வரண்மனையின் சிறப்பை உயர்த்துவதாகும்.
இவ்வரண்மனை ஒவியங்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முகமண்டபப் பகுதியிலுள்ள சுவர் ஓவியங்கள் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவை. அவ்வோவியங்கள் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்த மராத்தியப் போர், மைசூர் மூக்கறுப்புப் போர், ஆங்கிலேயர் வியாபார நிமித்தமாகச் சேதுபதியைக் காணுதல் மற்றும் கிறித்துவ பாதிரியார் மாண்டிஸ் அவர்களின் வருகை ஆகிய நிகழ்ச்சிகளை விளக்குகின்றன.
இராமலிங்க விலாசம் சுவர் ஓவியங்களில் உள்ள போர்க் காட்சிகள் மூலம் 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆயுதங்களைக் கொண்டு எப்படி போர் செய்தனர் என்பதை அறிய முடிகிறது. பீரங்கிகள், துப்பாக்கிகள் போன்றவைகள் பயன் படுத்தப்பட்ட விதத்தைக் கண்டுணர முடிகிறது. அவ்வாறு ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போலவே நமது அகழ்வைப்பகத்திற்கு ஒரு பீரங்கி சேகரிக்கப்பட்டு அவ்வோவியத்தின் அருகிலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இங்கு ஒவியத்தையும், உண்மையையும் நம்மால் ஒப்பு நோக்க முடியும்.
இவ்வோவியத்திற்கு அருகிலேயே தமிழக நெறியில் நடைபெறும் போர்க் காட்சி ஒன்றும் தீட்டப்பட்டுள்ளது. வீரர்கள் வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்விரு ஓவியங்களும் அருகருகே தீட்டப்பெற்றிருப்பதால், நாம் ஐரோப்பிய, தமிழகப் போர்க் கருவிகளை ஒப்பிட்டு அறியவும், அன்று இரு முறையிலும் போர்கள் நடந்தன என்பதையறியவும் முடிகின்றது. .
சமயச் சார்பான ஒவியங்கள்
அதனையடுத்து சைவ சமயக் காட்சிகள் உள்ளன. இச்சுவருக்கு நேர் எதிர்புறம் வைணவத் தெய்வங்களின் திருவுருவங்களும், திருமாலின் அவதாரங்களும் வரையப்பட்டுள்ளன. சைவத்தையும் வைணவத்தையும் சேதுபதிகள் சமமாகப் பேணினர் என்பதற்கு இச்சுவர் ஒவியங்கள் நல்ல சான்றாகும்.
பாகவத இராமாயணக் காட்சிகள்
முகமண்டபத்தினை அடுத்துள்ள சிறிய மண்டபப் பகுதியில் கண்ணனுடைய லீலைகளும் அவனது குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளும் வரையப்பட்டுள்ளன. உள்மண்டபத்தின் சுவர்களில் இராமாயணக் காட்சிகள் காணப்படுகின்றன. உள்மண்டபத்தின் விதானத்தில் மீண்டும் சேதுபதிகளின் வாழ்க்கை நடைமுறைகள் அழகுறத் தீட்டப்பட்டுள்ளன. இக்காட்சிகளில் உள்ள இராமர், வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலியவற்றைப் பயிலும் காட்சி சிறுவர்களும் கண்டு ரசிக்கும் வண்ணம் அழகாகத் தீட்டப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை ஓவியங்கள். கண்டுகளிக்க அழைக்கிறேன்!
சேதுபதியின் குடும்ப வாழ்க்கை
இவ்வரண்மனையின் முதல் மாடியில் சேதுபதி மன்னர் அரசியுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் தமது ஓய்வுப் பொழுதை எப்படிக் கழித்தார் என்பதை விளக்கும் சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன.
இவ்வோவியத்தில் பெண்களின் உருவங்களினாலேயே ஒர் யானையைப் போலவும் அதன் மீது அரசர் அமர்ந்து கரும்பு வில்லால் மலர்க்கணையினை அரசியை நோக்கித் தொடுப்பது போலவும், அதன் எதிரே பெண்களின் உருவங்களினாலேயே அமைந்த குதிரை உருவம் வரையப்பட்டு அதன் மீது அரசி அமர்ந்து அரசர் மீது மலர்க் கணை தொடுப்பது போலவும் உள்ள ஓவியம் எத்துணை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அழகாக வரையப்பட்டுள்ளது.
அரசர் மது அருந்துவது போலவும், அவரைச் சுற்றி பல்வேறு வடிவங்களில் மதுப்புட்டிகளும், மது அருந்தும் கோப்பைகளும் தீட்டப்பட்டுள்ளன. இவை அந்நாளில் எத்தனை வகையான மதுப்புட்டிகளும் கோப்பைகளும் இருந்தன என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றன.
இவ்வோவியங்களில் உள்ள கழுத்தணிகள், காதணிகள், பெண்களின் கொண்டையை அலங்கரிக்கும் அணிமணிகள், எத்தனை, எத்தனை வகையான அணிகலன்கள் என பகுத்து அறிய முடியாத அளவில் உள்ளன. அன்றைய இசைக்கருவிகளும், இசைக்கும் முறைகளும்கூட நம்மால் இவ்வோவியங்களிலிருந்து அறிய முடிகிறது.
மன்னர் மகளிருடன் நீராடல்
மன்னர் அந்தப்புர பெண்களுடன் நீரில் விளையாடும் காட்சி உயிரோவியமாக இங்கு வரையப்பட்டுள்ளது,
ஆடைச் சிறப்பு
இவ்வோவியங்களில் வரையப்பட்டுள்ள ஆடைகளின் சிறப்பு கண்டு ஆராயத்தக்கது. மன்னர் ராஜபுத்திரப்பாணியிலும், தமிழகப் பாணியிலுமாக உடைகள் அணிந்திருப்பது, தென்னாட்டு ராஜபுத்திரராக மறவர் எண்ணப்பட்ட தாக்கத்தை நமக்கு எடுத்து இயம்புகின்றது. குறிப்பாக இவ்வோவியங்களில் உள்ள சேலைகள் குறிப்பிடத்தக்கவை. மூன்று நூற்றாண்டு களுக்குப் பிறகும் இன்றும் துணிகளில் இராமநாதபுரச் சுவர் ஓவியங்களில் காணப்பெறும் வடிவங்களையே (Designs) 'தங்களின் புதிய தயாரிப்பு’ எனச் சேலைகளை தயாரித்து வெளியிடுகின்றனர் என்றால் அவ்வோவியங்களின் மாட்சியை எவ்வாறு வருணிப்பது? அன்றைய இசைக் கருவிகளையும், இசைக்கும் முறைகளையும் கூட இவ்வோவியங்களில் இருந்து நம்மால் அறிய முடியும். சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்ட அவ்வோவியங்கள், இன்று வரையப்பட்டவைபோல் காட்சி தரும் சிறப்பை எண்ணியெண்ணி வியக்கவேண்டியுள்ளது.
ஓவியச் சிறப்பு
வட இந்தியாவில் இமயமலைச் சாரற் பகுதிகளிலும், இராஜஸ்தானம், பஞ்சாப், கொல்லூர், கோட்டா மற்றும் கார்வால், பசாரி ஆகிய இடங்களிலும் உள்ள ஒவியங் களோடு இராமநாதபுரம் ஓவியங்களும் ஒப்பிடக்கூடிய அளவிலுள்ளன. தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் கிடைக்கும் ஒவியங்கள் சமயத் தொடர்பு உடையவை. ஆனால் இராமநாதபுரம் ஓவியங்கள் சமுதாயச் சூழல் களைச் சித்தரிக்கும் ஒவியங்களாகச் சிறப்புற்றுத் திகழ் கின்றன.