பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது
களவழி நாற்பது சோழன் மன்னர் பற்றிய போர்க்களம் பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது. போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினால் 'களவழி' என்றும், பாடல் தொகை அளவினால் 'களவழி நாற்பது' என்றும், இந் நூல் வழங்கலாயிற்று. இந் நூற் பாடல்களில் நாலடி அளவியல் வெண்பாக்களும் (22), பஃறொடை வெண்பாக்களும்(19) காணப்படுகின்றன. ஐந்து செய்யுட்களைத் தவிர ஏனையவெல்லாம் 'அட்ட களத்து' என்று முடிகின்றன. மூன்று செய்யுட்கள் (15, 21, 29), 'பொருத களத்து' என்றும், ஒரு செய்யுள் (40), 'கணைமாரி பெய்த களத்து' என்றும், மற்றொரு செய்யுள் (35), 'அரசுஉவா வீழ்ந்த களத்து' என்றும் முடிவு பெற்றுள்ளன. யானை, குதிரை, தேர், தானை, என்ற நால்வகைப் படைப் போரும் குறிக்கப்படினும், யானைப் போரைப் பற்றிய செய்யுட்களே மிகுதியாய் உள்ளன. களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்.
பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து. 16
அரவம் - பாம்பு
வேந்தர் - அரசர்
சோழன் பகை மன்னர்களை வென்ற களத்தில், குதிரை வீரர்கள்
குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை
எழுப்புகின்ரனர். மறவர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.
இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல்
ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள்
ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே-
கூடாரை அட்ட களத்து. 22
மதி - சந்திரன் கட்டாரை - பகைவரை
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், புறங்காட்டி ஓடாத மறவர்கள், கூரிய வாளால் எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் தலையைக் கொண்ட யானைகளின் துதிக்கைகளை வெட்டினர். அவை (துதிக்கை) தரையில்
வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைக்கு அருகே வீழ்ந்து கிடந்தன. அக்காட்சி கதிர்நிறைந்த ஒளிவீசும் நிலவைத் தொட்டுச் சுவைக்கும் பாம்பைப் போன்றிருந்தது.
நெய்த் தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு,
செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றவே-
கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன்
செற்றாரை அட்ட களத்து. 23
நுதல் - நெற்றி
செம்பியன் - சோழன்
வீரம் பொருந்திய செம்பியன் (சோழன்) தன்னோடு பொருந்தாதவர்களை
வென்ற போர்க்களத்தில், வீரர்களின் போர்க்கருவிகள் வீசப்பெற்று, அதனால்
பிளவுபட்ட நெற்றியிலிருந்து ஒழுகிய இரத்த நீரில் குளித்தெழுந்த
யானைகளின் உடம்புகள், மாலை நேரச் சிவந்த வானில் திட்டுத் திட்டாகப்
படர்ந்த மேகம் போல் இருந்தன.
திண் தோள் மறவர் எறிய, திசைதோறும்
பைந் தலை பாரில் புரள்பவை, நன்கு எனைத்தும்
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கற்றே-
கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து. 24
மறவர் - வீரர்
நண்ணாரை - பகைவரை
சோழன் தன்னோடு சேராத பகைவர்களை வென்ற களத்தில்,
மறவர்கள் எல்லாத் திசைகளிலும் வாளை வீசியதால் வெட்டுப்பட்ட புதிய தலைகள் போர்க்களத்தில் நிறைந்து கிடந்தன. அக்காட்சி, புயல் வீச்சால் தாக்கப்பட்டுக் கரிய காய்கள் எல்லாம் சிதறி விழுந்த பனந்தோப்பாகத் தெரிந்தது.
ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி,
பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்,
கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி,
இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும் - புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து. 28
பீடுடை - பெருமை உடைய
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், பெருமிதத்தோடு போரிட்ட போர்க்களத்தில் மறவர்கள் பகைவர்தம் கைகளை ஏந்திய கேடயத்தோடு அறுபட்டு வீழுமாறு வெட்டினர். அக்கைகளை நரிகள் கவ்விக் கொண்டு ஓடின. அந்தத் தோற்றம் தம் முகங்களைக் கண்ணாடியில் கண்டு மகிழும் மனிதர்களைப் போல அந்நரிகள் பக்கத்தில் நிற்பவர்களுக்குக் காட்சி தந்தன.
ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் - புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து. 31
ஒன்னாரை - பகைவரை
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், மறவர்கள் வீசிய வேல்பட்டு யானையின் நெற்றி பிளக்கப்படுகிறது. அதனால் கொல்லப்பட்ட யானையின் மத்தகத்தில் கட்டப்பெற்ற அழகிய ஓடை என்னும் பட்டமானது தெறித்து விழும்போது 'பளிச்' என்ற ஒளியோடு வீழ்கிறது. அக்காட்சி மின்னல் கயிற்றில் பறக்கும் கொடி போல் இருந்தது.
Thanks :
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/kalavazhinarpadhu.html