Monday, October 15, 2018

திருமலை நாயக்கருகும் சடையக்க சேதுபதிக்கும் நடந்த மறவர் நாட்டு யுத்தம்(பகுதி -3)


முதல் பகுதி:



http://thevar-mukkulator.blogspot.com/2018/08/1.html )

இரண்டாம்  பகுதி: 2

https://thevar-mukkulator.blogspot.com/2018/09/2.html


"மற்றொரு நாள் தானும் மன்னன் புலிராமன்
அரியாண்டிபுரக்கோட்டை அடுத்து வளைத்து கொண்டான்
கோட்டைக்குள்ளிருந்து குறும்படித்த மறவனுந்தான்
இனியிருந்தால் மோசமென்று யெல்லோரும் கிலேசமுற்று
போராது புகுந்தாற்போல் போகவென்று தான் துணிந்து
கச்சை கட்டி யெல்லோரும் கனத்தவெடி தானெடுத்து
காடந்தக் குடியிடையே கடுகியே ஓடிவந்தான்" -ரா.அ

இராமபய்யன் படையினர் மறுநாள் அரியாண்டிபுரம் கோட்டையை வளைத்து கொண்டனர்.கோட்டையில் இருந்த மறவர்
நிலைமை மோசமானதை உணர்ந்து அங்கிருந்து பொழுது சாயும் போது காரடர்ந்தகுடிக்கு சென்று விட்டனர்.

"வண்ட மறக்கொடுக்கை வளைத்து பிடிக்க வென்று
தொடர்ந்து பிடிக்க வென்று சொல்லிரிய மன்னரெல்லாம்
கூடாரத் தானெடுத்து கொலுவிட்டுத் தானடந்தான்"
" வாழை படர்ந்திருக்கும் வைகை நதிகடந்து
ஆற்றங்கரை தனிலே அடித்தானே கூடாரம்" -ரா.அ

தொடர்ந்து பிடிக்க இராமப்பய்யன் படையினர் காரடர்ந்தாகுடிதை கடந்து வைகை நதிக்கரையில் கூடாரம் அடித்தனர்.

அந்தியுத்தி கோட்டை போர்

"மற்றநாள் சென்று மன்னன் புலிராமன் மடைபடை
அந்தியுத்தி கோட்டையிலே அவனிருப்ப தறியாமல்
பாம்பாற்றங் கரைதனிலே பாங்காய்ப் போயிறங்கி
கூடாரந்தாண்டிதான் கோலாகல ராமன்படை
அந்த விசயம் அறிந்த சடையக்கனுந்தான்
கடவை மறித்து கலந்து போர்செய்தான்காண்
பாதை மறித்து பாங்காகக் கொள்ளையிட்டான்
இருவர் படை மூண்டு எரித்துப் புடைத்தார்கள்
அப்போது சடையக்கன் ஆர்பரித்து கொக்கரித்து
நாடுகலக்கியெனும் நல்லதொரு வான் பரிமேல்
ஏறிச் சடையக்கன் எல்லையற்ற சேனை முன்னே
ஊடுருவிச்சென்றான் உலகங்கிடுகிடென" -ரா.அ







அடுத்த நாள் அந்தியுத்தி கோட்டையில் சேதுபதி சடையக்க தேவர் இருப்பதை அறியாமல் இராமபய்யர் படையினர் பாம்பாற்றங்கரையிலே இறங்கினர். செய்தி அறிந்த சேதுபதி சடையக்க தேவர் நாடுகலக்கி என்னும் குதிரை மேல் ஏறி அவர்கள் பாதையை மறித்து ராமபய்யர் படை மேலே ஊடுருவித்தாக்கினார்.

"மன்னன் புலிராமன் மட்டில்லாச்சேனையின்மேல்
கோலாக்கொண்டையன் கூட்டப்புரவிகளும்
ஆயிரம் புரவி ஆர்பரித்து தான் பெருத்தனர்"-ரா.அ

"பட்டாணி வாளெடுத்து பருந்து போல பறந்து
ஊடுழக்க வெட்டினான் உலகங்கிடுகிடென
தீரன் சடையக்கனையும் திரமாக வெட்டலுற்றார்"-ரா.அ





இருவர் படைகளும் பலமாக மோதினர். இராமப்பய்யர் வீரர்கள் சடையக்கதேவனை குறிவைத்து சூழ்ந்து கொண்டனர். பட்டாண் (இசுலாமியன்) ஒருவன் வாளோடு சடையக்கனை வெட்டினான்.

" காயமது பட்டுக் கலங்கியே சடையக்கனுந்தான்
என்மருகா வன்னி யினிவந்து கூடுமென்றன்"
"அப்போது வன்னி அவ்வசனந் தான் கேட்டு"
"வெட்டின பட்டாணியை விருதுசொல்லி தான் பிளந்தான்
பெட்டியுமூடியுமாய் பிளந்தெடுத்தான் வன்னியுந்தான்
இடதுசாரி வலதுசாரி எதிர்த்து பொருதலுற்றர்
முன்னூறு பட்டாணி முழுதுமங்கே தான்மடிந்தார்
ஐயாயிரம் பேர் அக்களத்தில் தான்மடிந்தார்" -ரா.அ
"மன்னன் புலிராமன் மட்டில்லாச்சேனை வெள்ளம்
தட்டழிந்து கெட்டுத் தறுகாமல் ஓடிவிட்டனர்"- ரா.அ

காயமடைந்த சடையக்கன் வன்னியரை உதவிக்கு அழைக்க விரைந்து வந்த வன்னியதேவர் வெட்டிய பட்டாணை இரண்டாக பிளந்தார். இடது பக்கம் வலது பக்கம் என தாக்கினார். முன்னூறு பட்டாண்கள் மடிந்தனர். அத்தோடு நாயக்கர் படையில் ஐயாயிரம் பேர் மடிந்தனர். மற்றும் ஒரு பெருந்தோல்வியுடன் திரும்பினர் ராமபய்யர் படையினர்.

" மற்றநாள் தானும் மதச்சடையக்கன் வன்னியுந்தான்
அம்மான் முகம்பார்த்து அழுதமுகமும் கலங்கி
காயமது கட்டிகலங்கி முகம்பார்த்து"
"புலம்பி வன்னி எழுந்திருந்து போகலுற்றர்
மற்றநாள் தானும் மதச்சடையக்கன் வன்னியுந்தான்
இராமநாத சுவாமி நல்லதுணை யென்றுசொல்லி
அம்மானே நீருப்போது ஆனைபரி யேறுமென்றர்
அத்திக்கோட்டைவிட்டு ஆன பெருந்தளந்தான்"
"படைத்தலைவரெல்லோரும் படகிலே ஏறுமென்றர்
தண்டிகை பல்லாக்கு சகலமும் ஏற்றலுற்றர்
ஆனை குதிரை அடங்கலும் ஏத்துமென்றர்
எல்லோரையுமனுப்பி எதிரில்லா வன்னியுந்தான்
பொண்டுனச்சியெனும் பெரியதொரு வான்பரியும்
நாடு கலக்கியெனும் நல்லதொரு வான்பரியும்"
"கப்பலிலே தானேறி கார்த்தச் சடைக்கனுந்தான்
இராமநாத சுவாமி நல்லதுணை என்று சொல்லி
உன்பாதம் நம்பிவந்தேன் உலகளந்த மாயவனே
மன்னன் புலுவன்னி மாதுக்கப்பட்டு நின்று
என்னசெய்யவோ மென்று வன்னி இருந்து கிலேசமுடன்"-ரா.அ








மறுநாள் வன்னியத்தேவன் காயம் பட்ட சடையக்கன் முகம் பார்த்து புலம்பினான். அடுத்த நாள் ராமநாத சுவாமி நல்ல துணை என்று சொல்லி சேதுபதியை ஆனைமேல் ஏற்றி அந்தியுந்தி கோட்டையிலிருந்து ஆனை, குதிரை , மறவர் படையுடன் , படைத்தலைவர்களுடன், பொக்கிஷங்களுடன் ராமேஸ்வரம் தீவுக்கு பின் வாங்னினார் வன்னியதேவர். பொண்டு நாச்சி, நாடு கலக்கி என்னும் குதிரைகளை கப்பலில் ஏற்ற முடியாமல் போக ஒரு படைத்தலைவர் சொன்னபடி
கண்கள் கட்டப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டன.சேனைகள் ராமேஸ்வரம் தீவில் வந்து இறங்கினர். வன்னியத்தேவர் மிகவும் கவலையுற்றார்.

"போனான் மறவனென்று பொருமி மிகச்சினந்து
எங்கேதான் போனலும் இனிவிடப்போறோமோ
கடலேறி போனேமென்று கனவிருது கூறினன்"
"அந்திபுத்திக் கோட்டை அவனிருந்த போனதல்லோ
பள்ளியறை மாளிகையும் மொத்த உண்டாம்
படைத்தலைவர் திறத்திருக்கும் பண்ணக சாலையுண்டாம்
என்று படைத்தலைவர் எல்லோரும் தாமுறைத்தார்"
"இருந்தானே ராமய்யனும் இருபதுநாள ரமனையில்
கோலாகல ராமன் கொலுவி லிருக்கையிலே
மதுரைதனிலிருந்து வந்தானே ஒட்டனுந்தான்" -ரா.அ

மறவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டதை அறிந்து பொருமி இனி கடல் தாண்டி போனாலும் விடப்போவதில்லை என சினந்து கூறினார் ராமபய்யர். அங்கிருந்த படைத்தலைவர் அந்தியுத்தி கோட்டையில் தங்கி ஓய்வு எடுக்கும் படி கூறினர். இருபது நாள் கோட்டையில் உள்ள அரண்மனையில் தங்கினார் ராமப்பய்யர். இருபதாம் நாள் திருமலை நாயக்கரிடம் இருந்து ஓலையுடன் ஒற்றன் ஒருவன் வருகிறான்.

"இராயரிட காயிதமும் நலமுடனே தானெழுதி
முகிலருடன் பாட்சா முப்பதின யிரங்குதிரை
கனவாயை வந்து கட்டிக் கொண்டா ரென்றுசொல்லி
கோலக்கொண்டா யாம்குதிரை கூட்டப்பெருதளமும்
இராயரிட சீமையெல்லாம் நாலுதிகுங்க் கொள்ளையிட்டு
விசையபுரமும் வேலூருங் கொள்ளையிட்டு
கணவாய்க் கோட்டையெல்லாம் கட்டிக்கொண்டானென்று
இங்குவர பயணமாயிருக்கிற பெற்றுசொல்லி
மன்னன் புலிராமனையும் வரவழைக்க வேன்றுமென்று
கர்த்தனிட காயிதமும் கடுகியே தான் கொடுத்து"-ரா.அ

மதுரையில் இருந்த வந்த ஒற்றன் திருமலை நாயக்கரின் ஓலையை கொடுத்தான். முகிலர்களுடைய பாச்சா (இசுலாமியர்) முப்பதாயிரம் குதிரை வீரர்கள் உடன் வந்து ராயருடைய சீமையையான கோல்கொண்டா, வேலூர், விஜயபுரம் ஆகிய இடங்களை கொள்ளையிட்டு உள்ளனர். அடுத்து மதுரைவர ஆயத்தமாக உள்ளனர் அதனால் உடனே மதுரைக்கு வருமாறு ஓலையில் எழுதப்பட்டு இருந்தாது.
(பீஜப்பூர் சுல்தான் 1639 ஆண்டு விஜய நகர அரசர் பெட வெங்கட ராயர் காலத்தில் ஒரு பெரும் படை எடுப்பு நடத்தினார். நாயக்க மன்னர் துணை கொண்டு விஜயநகர ராயர் அதை தடுத்தார் என்ற விஜயநகர அரசின் ஆவணம் ஒன்று அதை உறுதி செய்கிறது)

"எல்லோரையும் தானழைத்து இதமாய் புத்திசொல்லி
இன்று முதலோடே யிங்கே வருவானென்று
ஆற்றங்கரையும் ஆன துறைமுகமும்
புகழ் பெரிய போகலூர் கோட்டையும் பதமென்று"
"திருபுவணங் கடந்து மதுரை தெரு வீதியிலே வந்தார்கள் ராமய்யனும்"
"மற்றநாள் தானும் மன்னன் புலிராமய்யனும்
மன்னன் திருமலேந்திரனை வந்து கண்டு சந்தித்து
ஆண்டவனே யிப்போது அழைந்து பணிவிடை யென" -ரா.அ

திருமலை நாயக்கரின் ஓலையை படித்த ராமபய்யர் தன்னுடைய படைத்தலைவர் அனைவரையும் அழைத்து ஆற்றங்கரையையும்,துறைமுகத்தையும், புகழ் வாய்ந்த போகலூர் கோட்டையையும் பத்திரமாக பார்த்து கொள்ளும் படி அறிவுரை சொல்லிவிட்டு. திருப்புவனம் தாண்டி மதுரையை அடைகிறார். அடுத்த நாள் திருமலை நாயக்கரை சந்திக்கிறார்.
"என் வார்த்தைதனை யினிகேளும் ராமாநீ
கோலக் கொண்டையனும் குதிரை பெருந்தளமும்
கணவாயின் கோட்டையெலாம் கட்டிகொண்டாரென்று"
"விசயபுரமும் வேலுருங் கொள்ளையிட்டு
யிங்குவரப்பயனமாயிருக்கிற னென்றுசொல்லி
இயாதாத்து நமக்கொழுதி வந்துதுகாண்
அது கண்டு நாமள் படித்தோம் ராமய்யனே"
"வெட்டி துரத்தி வேலுரைக் கைப்பிடித்து
ஆயிரம் குதிரை அன்பாகத் தான் சேர்த்து
வாரேனைய்யா யென்றுசொல்லுனன் மன்னன் புலிராமய்யனும்" - ரா.அ

மன்னர் திருமலை நாயக்கரிடன் விடை பெற்ற ராமப்பய்யர் எதிரிகளை வெட்டி துரத்தி வேலூரை மீட்டு வருவேன் ஆயிரம் குதிரைகள் உடம் விஜய நகர ராயரை காண செல்கிறார்.

"வடமதுரை தன்னில் வளமுடன் சென்றிறங்கி
திண்டுக்கல் கடந்து தேக்கமலை தன்னில்வந்து"
"மணப்பாறை தன்னில் மன்னவனும் சென்றிறங்கி"
"திருச்சிராப்பள்ளி கடந்து சீரங்கம் தன்னில் வந்து"
"சமயபுரம் கண்ணனூர் தன்னிலே வந்திரங்கி"
"ஊட்டத்தூர் தன்னிலொரு நொடியில் போயிறங்கி"
"வலிகண்டபுரத்தில் வந்திருந்த ரெல்லோரும்"
"ஆயினையான் வீரதிவக்கும் ஆரணியுந்தான் கடங்கி"
"வெங்களூர் தன்னில் விரையவே சென்றிறங்கி"
"இராயனுட சமூகந்தனை நன்றாக வந்து கண்டு
ஆண்டவனே யிப்போ அழைத்த பணிவிடை" -ரா.அ

திருமலை நாயக்கரிடம் விடைபெற்ற ராமப்பய்யர் வடமதுரை,திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி,ஸ்ரீரங்கம்,சமையபுரம்,கண்ணனூர்,ஊட்டதூர், வாலிகண்டபுரம், ஆரணி, வேலூர் ஆகிய ஊர்களை கடந்து வெங்களூரில் ராயரை காண்கிறார்.




"குதிரை தளத்தை வென்று குஞ்சரமும் கொள்ளைகொண்டு
வெட்டி விரட்டி விருதுகளும் தான் பறித்து
வெற்றி கொண்டு வாரேனென்று வண்ணபஞ்சொல்லலுற்றான்
அடைகாயும் வெற்றிலையும் அன்பாகத் தான் கொடுத்து
வெற்றிகொண்டு வாவென்று விருதுகள் கொடுத்து
போய்வாருமென்று பொருத்தி மனமகிழ்ந்தார்" -ரா.அ

போர் நிலையை அறிந்த ராமபய்யர் துலுக்கர் படையை வெட்டி சூரையிட்டு வருவதாக உறுதிபட செல்கிறார்.ராயர் அடைக்காயும் வெற்றிலையும் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.



"இக்கரை வெங்கடகிருஷ்னனுக்கு எழுதினர் ஓலைதன்னை
ஓலைதனை வாங்கி ஓடினான் ஒட்டனுந்தான்"
"வாசித்து பார்த்து மனமகிழ்ந்து கொண்டாட"
"துலுக்கர் பெரும்படையும் தோறத வான்படையும்
கணவாயை வந்து கட்டிகொண்டா ரென்றுசொல்லி
இராயரதற்க்கு நமக்கோலை வர விடுத்தார்
துலுக்கர் பெரும்படையை தூளிபடவே துரத்தி
ஆறு கடக்க ஆலைகுலையத் தான் துரத்தி
யிக்கரை வெங்கடகிருஷ்ணய்யா எழுந்திரு வென்று சொல்லி
யெல்லோரும் போய் எதிர்த்து போர் செய்தார்கள்
இக்கரை வெங்கடகிருஷ்ணய்யன் எதிர்த்து துரத்திவிட்டான்"
"துலுக்கர் பெரும்படையைச் சூறையிட்டுத்தான்விரட்டி
ஆறு கடக்க அலைகுலைய தான் துறத்தி
வெட்டி விருதறுத்தான் வேந்தன் புலிராமய்யனும்
வெற்றிகொண்டு ராமய்யனு வீரியங்கள் பேசிவந்தான்
ஆயிரம் குதிரை அன்பாகத்தான் மடிந்து
அறுறு குஞ்சரமும் ஐம்பது ஒட்டகமும்
ஆயிரங்குதிரையும் அன்பாகத்தான் சேர்த்து
பிடித்து அனுபினர் போர் வீரன் ராமய்யனும்" - ரா.அ

ராமபய்யர் பின் வெங்கட கிருஷ்ணய்யர் உதவி நாடி ஓலை எழுதினார். அவரிடம் இருந்து உதவி வரவே இருவர் படையும் சேர்ந்து துலுக்கர் படையை வெட்டி சூறையிட்டனர். அறுகடந்து ஓடும்படி ஆலையத் துரத்தி வெற்றி பெற்றன. அயிரம் குதிரைகள் போரில் மறைந்தன. ஐம்பது ஒட்டகமும் , ஆயிரம் குதிரைகளும், அறுபது யானையும் எதிரியிடம் கைப்பற்றப்பட்டன.

"இராயரிட சமூகத்தின் நன்மையுடன் வந்து கண்டான்
வந்துகண்ட ராமய்யனை மார்போடு தானணைத்து"
"என்னருகே ராமய்யனே யிரு மென்று தானுரைத்தார்"
"கச்சித்திருமலௌ யேந்திரனை காணாமல் நானிருந்தால்
கண்கள் புகையகுமைய்யா கர்த்தனே யென்றுரைத்தான்"
"எங்கே யிருந்தாலும் எப்போதும் நான் வருவேன்"
"நின்றனுப்பிக்கொண்டு நீதியுடன் கையெழுத்து
நடந்தான் புலிராமன் நல்லபெருஞ்சேனையுடன்"-ரா.அ

வெற்றியுடன் திரும்பிய ராமபய்யனை ராயர் மார்போடனைத்து. இங்கேயே இருக்குமடி சொல்ல.தான் திருமலை நாயக்கருக்கு கட்டுபட்டவர் என சொல்லி எங்கே இருந்தாலும் கட்டளையிட்டால் உடனே வருவதாக சொல்லி எங்கிருந்து விடை பெற்றார் ராமப்பய்யர். தெற்கு நோக்கி மீண்டும் பயணப்பட்டார். வழியில் ஸ்ரீரங்கனாதருக்கு சிறப்பு செய்தார். திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, சோழவந்தான், துவரிமான் ஆகிய ஊர்களை கடந்து பிள்ளையார் பாளையம் வந்து சேர்ந்தார்.

" அந்நேரத்தில் அதி வீரமாய் நடந்து
வந்து கண்டு இராமய்யனை வாகாய் மிகத்தழுவி
கர்த்தனென்று மிராசன் கச்சித் திருமாலேந்திரன்
கனகந்தான் சொரியக் கடுக அழைக்கச்சென்றனர்
சொன்ன உடனே தோற்றமுள்ள ராமய்யனும்
என்ன வெற்றிகண்டேன் எனக்கு கனகஞ்சொரிய
சேதுமறவனைத்தான் சென்று பிடித்து வந்தால்
கனகமுடனே அப்போது கருதலாம் தானமெலாம்" - ரா.அ

வெற்றியோடு திரும்பிய ராமப்பயனுக்கு திருமலை நாய்க்கர் கனகபிஷேகம் செய்ய விரும்புவதாக தெரிவிக்கவே. சேது மறவனை பிடித்த பின்
தான் கனகபிஷேகத்துக்கு தகுதியானவன் என சொல்லி மறுக்கிறார் ராமப்பய்யர்.திருபுவனம் தாண்டி போகலூர் வந்தடைகிறார்.
"இத்தனை நாளிக்கோட்டை வாங்காதிருப்லதேனே
நாளை பகல் நாலு நாழிகைக்குள்ளாக
கோட்டைதனை வாங்காவிட்டால் கொன்றிடுவே னுங்களையும்
வைகைக்கரைதீரம் வாகாய் கழுவில் வைப்பேன்
என்று சொல்லி ஓலையெழுதிட்டார் ராணுவத்திற்கு
வாசித்து பார்த்து வயிறேரிந்த மன்னவர்கள்
அங்கேபொய் சாதிறது எங்கே மடிவோமென்று
நாலுதிக்கும் ஏணிவைத்து ராணுவத்தா ரெல்லோரும்
கோட்டையுன் கொத்தளமும் கோம்பையும் மிடித்தார்கள்" - ரா.அ

போகாலூர் கோட்டை அன்று வரை மறவர் கைவிட்டு போகவில்லை என்பதை உணர்ந்து. நாளை பகல் நான்கு நாழிகைக்குள் கோட்டையை பிடிக்காவிட்டால் வைகைக்கரையில் அத்தனை நபரையும் கழுவில் ஏற்றிவிடுவேன் என்று தன் ராணுவத்திற்கு ஓலை அனுப்புகிறார் ராமபய்யர். பாளையக்காரர் அனைவரும் ராமபய்யர் கையால் சாவதைவிட போரிலே சாகலம் என வீரியத்துடன் கோட்டையை தாக்கினர்.

"குஞ்சரத்தை விட்டு கோட்டையை தகர்த்திட்டு
கோட்டைதனைப் பிடித்தார் கொடுங்கோபங்கொண்டு டெழுந்து
கோட்டைக்குள்ளிருந்து குறும்படித்த மறவனுந்தான்
வெட்டி விரட்டி வென்று வீரியங்கள் தான் பேசி
குமார னழகனும் கூட்டப்பெரும் படையும்
குத்தி விரட்டி கொல்லையிட்டு உள்ளியத்தார்"
"குமாரனழகனையும் கூட்டப்படை யத்தனையும்
கைப்பிடியாய்த் தான்பிடித்துகட்டி இறுக்கலுற்றர்"
"மதியானழகனையுன் மன்னன் குமாரனையும்
கொண்டுவந்து விட்டார்கள் கோலாகல ராமன் முன்னே
பெண்ணை சிறை பிடித்து ஆணை அறிந்துவெட்டி
ஐந்நூறு பெண்சிறையும் ஆணை அறிந்து வெட்டி
ஐந்நூறு பெண் சிறையும் அந்நேரம் கூட்டிவந்தனர்
மெய்க்காவலாக விடுதி விட்டு வைக்கசொன்னர்" -ரா.அ

கோட்டைச்சுவர் யானையை விட்டு இடித்து தகர்க்கப்பட்டது.போகாலூர் கோட்டை கைப்பற்றபட்டது. குமார அழகனையும், மதியானழகனையும் இறுக்க கட்டி ராமப்பய்யர் முன் வந்து விட்டனர். ஆண்கள் அனைவரையும் வெட்டினர். பெண்கள் அனைவரையும் சிறை படுத்தினர். ஐநூறு பெண்களையும் மெய்கவல் வைக்கச்சொன்னார் ராமப்பய்யர்.

"குமாரனழகனை கூபிட்டு முன்னே விட்டு
என்னோடு நீயும் எதிர்த்துப் போர் செய்வாயாடா
என்று சொல்லு அய்யன் இருகண்ணும் நெருபென்ன"
"தச்சனை அழைக்கச்சொன்னன் தார்வேந்தன் ராமய்யனும்
கூட்டிவந்து விட்டார்கள் கோலாகலன் கொலுவில்
மதியானழகனையும் மன்னன் குமாரனையும்
குப்புரவேதான் கிடத்தி கூறி மன்னர் பார்த்து இறுக்கி
முதுகு தோல்தன்னை முரமுரவே செதுக்கசொன்னன்"
"முட்டு முட்டாக முழுயெழும்பை தான் தரித்தான்"
"மதியானழகன் றேவி மன்னன் குமாரந்தேவி
கூட்டி வரச்சொன்னான் கோலாகல ரானய்யனும்"
"இருவர் தலையிலேயும் எடுத்துவை என்றன் கூடைதனை
பாளையத்தை சுற்றி பறையடித்து வரச்சொன்னன்காண்"- ரா.அ

குமாரழகனை அழைத்து என்னை எதிர்த்து போர் செய்வாயோட என சொல்லி. மதியாரழகன் மற்றும் குமாரழகன் ஆகிய இருவரையும் குப்புற படுக்கவைத்து ஒரு தச்சனை அழைத்து அவர்கள் முதுகுத்தோலை உரிக்கச்செய்தார் ராமபய்யர்.
அவர்கள் எலும்பை முட்டு முட்டாக தறிக்கசெய்தார். தறித்த உறுப்புகளை இரண்டு கூடையில் போட்டு குமாரன் தேவி (மனைவி), மதியாரழகன் தேவி ஆகியோர் தலையில் ஏற்றி பாளையத்தை சுற்றி பறையடித்து பவனிவரச்செய்தார் ராமபய்யர்.

"சடையக்காரரை விட்டு கையை பிடிக்கச்சொன்னன்
மறவன் பிடிபானென்று பார்த்த மென்கொடியாள்
விடுத்தாளவளுயிரை விண்ணுலகம் போய் சேர்ந்தாள்"
"வாய்த்ததொரு பொண்கொடியை மனமகிழ்ந்து கொண்டாடி
பச்சை வடங்கொடுத்து பாங்குடனே அடக்கச்சொன்னான்" - ரா.அ

மேலும் ஒரு கபாடக்காரரை கூப்பிட்டு கையைபிடித்து இழுக்க சொன்னார். மாற்றான் ஒருவன் கையை பிடிக்க வருகிறான் என்பதை உணர்ந்த தேவி தன் உயிரை மாய்த்து கொள்கிறாள். செய்தி கேட்ட ராமப்பய்யர் பச்சைவடங்கொடுத்து மரியாதை உடன் தேவியை அடக்கம் செய்கிறார்.

தொடரும்....
நன்றி:
கட்டுரை வழங்கியவர்,
கார்த்திக் தேவர்