சங்க காலத்தில் மலையமாநாடு ஆண்ட தெய்வீகராஜன் ஆட்சி பற்றிய குறிப்புகள் ஔவையாரின் பாடல்கள் வழியாகவும் செப்பு பட்டயங்கள் மூலமும் தெளிவாகவே காணக்கிடைக்கின்றன.
இவற்றின் மூலம் தெய்வீகராஜனது வீர வரலாறு, ஆளுமை, ஈகைத்திறன்,மணஉறவு ஆகியன பற்றியும் அறிய முடிகின்றது.
சிதம்பரத்தில் திருப்பாற்கடல்,நந்தவனமடம்,சது ர்முடி விநாயகர் கோவில் ஆகியவற்றைக் கட்டி தர்மங்களுக்கு வேண்டிய வழிமுறைகளையும் ஏற்படுத்தி மடத்தை நடத்தி வருமாறு சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த பட்டயத்தின் மூலம் தெய்வீகனின் வீரம்,வெற்றி,பிறப்பு,வளர்ப்பு ஆகியவற்றை அறிய முடிகிறது.
தெய்வீகன் அளித்த பட்டயத்தில் சிதம்பரம் நடராஜர் பற்றிய வர்ணனைகளும்,மடம் கட்ட வேண்டி கொடுத்த கொடைகள் பற்றிய விசயங்களும் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன.
மேலும் தெய்வீகராஜன் மூவேந்தர்களுடன் போரிட்டு வெற்றி கொண்டதையும்,மூவேந்தர்களின் மகள்களை மணந்ததையும் மட்டுமின்றி அவருடைய இயல்மணத்தை பற்றியும் செப்பேடு கூறுகிறது.
பாரி மகளிரை திருமணம் செய்த காலத்தில் திருமணம் நடந்த இடத்திற்கு மணம்பூண்டி என்று பெயர் உண்டானதையும்,பந்தல் அமைந்த இடத்திற்கு திருப்பாலைப் பந்தல் என்று பெயர் உண்டானதையும் பூமாரி பெய்த இடத்திற்கு பூமாரி என்றும் தண்ணீர் வந்த இடத்திற்கு குடமுருட்டி என்றும் காரணப்பெயர்களை அறிய முடிகிறது.
அவ்வையின் பாடலும் திருமண சம்பந்தமான இவ்விஷயங்களை தெளிவாக விளக்குவதாக அமைகின்றது.
தெய்வீகன் ஆட்சி செய்த பகுதிகள் மங்களூர் சீமை,திருக்கோவிலூர் சீமை,கள்ளக்குறிச்சி சீமை,சேலம் சீமை,மாமண்டூர் சீமை, தஞ்சை,சேரநாடு,சோழ மண்டலம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
தெய்வீக ராஜனின் மனைவியான சோழர் குல அரசி தன் மாங்கல்யம் நிலைக்க வேண்டி 108 காணி 32 குறிச்சிகளைத் தர்மமாக அளித்ததைப் பற்றி வேறொரு செய்தி தெரிவிக்கிறது.
தெய்வீகன் பிரம்மகத்தி தோஷத்தை நீக்குவதற்காக தேவாலயம், பிரம்மாலயம் ஆகியவற்றிற்கு செய்த தர்மம் பற்றி ஒரு குறிப்பு கிடைக்கின்றது.
திருப்பாலை மடம் என்று அழைக்கப்படும் மடத்தை சொக்கலிங்க தம்பிரான் என்பவரின் வழிவந்தவர்கள் தற்போது நிர்வாகம் செய்து வருகின்றனர்.
பட்டய சாசன ஆதாரங்களின் படி தெய்வீகனின் வாரிசுகளான பார்க்கவ குலத்தார் மடத்தை கைக்கொண்டு தர்மகாரியங்கள் செய்ய வேண்டிய கடமையுள்ளது.
சிதம்பரம் கோவிலின் வடக்குப் பகுதியில் வடக்கு கோபுர வீதியில் 500குழி நிலமும் பொன்50 மன்னன் கொடுத்திருக்கின்றான்.மேலும் 108காணியும்,நாடும்,32 குறிச்சியும் தர்ம சேவைக்காக தானம் கொடுத்துள்ளான்.என்பதையும் பட்டயத்தின் மூலம் அறிகின்றோம்.
சிவஞான குரு என்பவர் வைத்திருந்த செப்புப்பட்டயத்தின் காலம் கி.பி.1234 என்று கூறப்படுகின்றது.இதன் மூலம் தெய்வீக ராஜனின் வம்சாவழி வந்த மலையமான் மன்னர்கள் தெய்வீகமன்னனின் பெயரால் இந்த தர்மங்களை தொடங்கியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.பட்டயத்தில் குதிரை மீது அமர்ந்துள்ள தெய்வீக மன்னனின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
திருக்கைவேலூர் பெயர்க்காரணம் பற்றிய குறிப்பும் உள்ளது.
இந்த பட்டயத்தில் காணப்பட்ட தெய்வீக ராஜனது வரலாற்றுக் குறிப்புகள் போன்றே, பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ணாபுரம் செப்பேட்டிலும் தெய்வீக ராஜனின் வரலாறு காணக்கிடைக்கின்றது. தெய்வீக ராஜனின் பார்க்கவ குல சந்ததியினர் பற்றிய குறிப்பும் அவர்களால் கொடுக்கப்பட்ட கொடையும் கூட இவற்றில் காணப்படுகிறது.
மலையமானின் வம்சத்தோர் தமது பார்க்கவ குல முதல்வரான தெய்வீக மன்னனின் திருப்பெயரிலேயே அநேகமான நற்காரியங்களை செய்துள்ளனர்.
அங்கவை சங்கவையை மலையமானாகிய தெய்வீகன் திருமணம் செய்தது பற்றிய கல்வெட்டுகள் ஆதாரமாக காணப்பட்டாலும் இலக்கிய ஆதாரமாக திருமணத்தைப் பற்றி ஔவையார் பாடிய பாடல்களும் ஆதாரமாக உண்டு.
ஔவையார் அங்கவை சங்கவை தெய்வீகன் திருமணம் பற்றிப் பாடிய பாடல்கள்
- ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்
- கரியுரிவைக் கங்காளன் காளாப் – பரிவுடனே
- கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்
- தன்னாண்மை தீர்ப்பன் சபித்து. 23
- ஆனைமுகா! உன் தந்தங்களில் ஒன்றை முரித்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டுள்ளாய் என்பர். அங்கவை சங்கவை கண்ணாலத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுதவேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்.
அடுத்துவரும் பாடல்களை ஔவை சொல்ல ஆனைமுகன் ஒழுதினான் என்பர். 22
- சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோலால்
- ஊரளவும் தான்வருக உட்காதே – பாரிமகள்
- அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
- சங்கவை யுங்கூடத் தான். 24
- பாரிமகள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் மணந்துகொள்ள அரசன் (மலையன்) இசைந்துள்ளான். சேர மன்னா! கூச்சப்படாமல் திருமணத்துக்கு வருக.
- புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்
- தமாதென்று தானங் கிருந்து – நகாதே
- கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு
- விடியப் பதினெட்டாம் நாள். 25
- இன்று விடியப் பதினெட்டாம் நாள் கோவலூரில் திருமணம். சோழ மன்ன! ஏளனம் செய்யாமல், நீ நடத்திவைக்கும் திருமணம் என்று எண்ணி உடனே வருக.
- வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
- செய்யத் தகாதென்று தேம்பாதே – தையலர்க்கு
- வேண்டுவன கொண்டு விடியவீ ரொன்பானாள்
- ஈண்டு வருக இசைந்து. 26
- இன்று விடியப் பதினட்டாம் நாள் திருமணம். தென்னவனே! தகுதிக்குத் தகாது என்று எண்ணாமல் சீர்வரிசையுடன் திருமணத்துக்கு வருக.
- கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
- வருணனே மாமலையன் கோவல் – திருமணத்து
- முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்
- பொன்மாரி யாகப் பொழி. 27
- மழைத்தெய்வமே! மலையன் திருக்கோவலூரில் உன் மழை பொன்மாரியாக இருக்க வேண்டும்.
- முத்தெறியும் பெண்ணை முதிர்நீர் அதுதவிர்த்து
- தத்திய நெய்ப்பால் தனைப்பெய்து – குத்திச்
- செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
- வருமளவும் கொண்டோடி வா 28
- திருக்கோவலூர் தெய்வீகனுக்கும் பாரிமகளிர் அங்கவை சங்கவைக்கும் திருமணம் நடக்கிறது. தென்னைமரமே! நீ இளநீர் தருவதை விட்டுவிட்டுத் திருமணத்திற்கு நெய்யும் பாலும் கொண்டுவா.
- பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி யாடையாம்
- அந்நாள் வயலரிசி ஆகுமூர் – எந்நாளும்
- தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
- ஓங்கும் திருக்கோவ லூர். 29
- சேதிமா நாட்டின் ஊர் திருக்கோவலூர். அங்கு பொன்மாரி பெய்யும். பருத்தியும் நெல்லும் செழிக்கும்.
- சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர்
- சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
- குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
- பலாமாவைப் பாதிரியைப் பார். 30
- சொல்லாமல் உதவி செய்பவர்கள் பூக்காலே காய்க்கும் பலாமரம் போன்றவர்கள். சொல்லிவிட்டு உதவி செய்பவர்கள் பூத்துக் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். உதவுவதாகச் சொல்லிவிட்டுச் செய்யாதவர்கள் பூத்துவிட்டுக் காய்க்காத பாதிரிமரம் போன்றவர்கள்.
- ஆயன் பதியில் ஆன்பதிவந் துற்றளகம்
- மாயனூ துங்கருவி யால்நாளும் – தூயமணிக்
- குன்றுபோல் வீறு குவிமுலையாள் தன்னுடன்நீ
- இன்றுபோல் என்றும் இரு. 32
- திருமண வாழ்த்து. பசுக்களுக்குக் காளைபோல் அமைந்துள்ள மணவாழ்க்கை மாயன் ஊதும் குழலோசை போல் இனிப்பதாய், இன்று போல் என்றென்றும் இருக்கட்டும்.
- சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னை
- சுரப்பாடி யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
- இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
- தாமறிவர் தன்கொடையின் சீர். 33
- நான் ஒரு சுரம்(பா) பாடினேன். தலையில் முடி சூடிய சேரமான் பொன் விளையும் நாடு ஒன்றைப் பரிசிலாகத் தந்தான். இரப்பவர் எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வர். எனினும் கொடுப்பவர் தம் தகுதி அறிந்து நல்குவர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.