Monday, May 27, 2013

சேதிராயர் மெய்ப்பொருள் நாயனார்

பார்க்கவ குல சத்ரியர் சேதிராயர் 
மெய்ப்பொருள் நாயனார்(சத்தியபுத்திரர்)
சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.





பொழிப்புரை :
நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

குறிப்புரை :
தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் நடுவில் உள்ள பகுதியை நடு நாடு என்பர். இந்நாட்டின் உட்பகுதியாக விளங்குவது இச்சேதி நாடாகும். இந்நாட்டினைச் சேதிபர் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தமையால் இஃது இப்பெயர் பெற்றது. திரு விசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான சேதிராயர் இம்மரபினராவர். திருக்கோவலூர் - சிவபெருமானின் வீரம் விளங்கும் இடங்கள் எட்டனுள் இதுவும் ஒன்றாகும். அந்தகாசுரனை அழித்த வரலாறு படைத்தது. இந்நகரில் வாழ்ந்தவர் மெய்ப்பொருள் நாயனார். மலாடர் கோமான் - மலையமான் நாட்டிற்குரிய அரசர். மலையமான்+ நாடு=மலாடு எனமருவிற்று. இவ்வரசர் வழியில் வந்தவர்கள் மலையமான், நத்தமான், சுருதிமான் எனும் மூவகைப் பிரிவினராவர். இவர்களுள் மலையமான் வழி வந்தவர் நம் மெய்ப்பொருள் நாயனாராவர். மேன்மை பூண்டு - மறைவழி வந்த ஒழுக்கமாம் மேன்மை பூண்டு. சொல்லிச் செய்தலினும், கருத்தறிந்து ஏவல் செய்தல் மேன்மை உடையதாகும். அந்நெறியில் நின்றவர் இவர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.