சென்னை : ஜூலை 12, 2008.
விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் செப்பேடு, திருச்செங்கோட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் புலித்தேவன்.
வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755ம் ஆண்டு புலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த முதல் போர். புலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்துள்ளார்.
பூலி தேவர் வம்சம் குடும்பர்களுக்கு வழங்கிய கல்வெட்டு
அச்செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்பேட்டை ஆய்வு செய்த ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் செ.ராசு பின்வரும் தகவல்களைக் கூறினார்.
சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர், பூலித்தேவன் என அழைக்கப்பட்டது என்றும், அவரது முழுப்பெயர் “காத்தப்ப பூலித்தேவன்’ எனவும் ஆய்வாளர் நா.ராசையா கூறியுள்ளார்.
ஆனால், 1748ம் ஆண்டு எழுதப்பட்ட இச்செப்பேட்டில், “ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்’ என்று எழுதப்பட்டுள்ளது.
நெற்கட்டுஞ் செவ்வல்: கடந்த 1755ம் ஆண்டு வரி வசூலிக்க வந்த “அலெக்சாண்டர் கெரானிடம், ஒரு நெல்மணி கூட வரியாகக் கட்ட மாட்டேன்’ எனக் கூறியதால் ஊர்ப்பெயர், “நெற்கட்டான் செவ்வல்’ என அழைக்கப்பட்டதாகவும், மக்கள் ஆங்கிலேயர்களுக்குப் பயந்து, “நெற்கட்டுஞ் செவ்வல்’ என அழைத்ததாகவும் ராசையா கூறியுள்ளார். ஆனால், 1748ம் ஆண்டு வெட்டப்பட்ட இச்செப்பேட்டில், “கசுப்பா நெற்கட்டுஞ் செவ்வல்’ என்றே எழுதப்பட்டுள்ளது.
செப்பேட்டுச் செய்தி: தன் முன்னோர் தலைநகரான ஆவுடையார்புரம் தலைநகரை மாற்றி, நெற்கட்டுஞ் செவ்வலில் கோட்டைக் கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் புலித்தேவன்.
நெற்கட்டுஞ் செவ்வலில் ராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது.
தலைநகர்ப் பகுதி வளம் பெற அக்குளத்தைப் புதுக்குளமாகக் கட்டிப் பாசனம் செய்து பயிரிட புலித்தேவன் கேட்டுக்கொண்டதனால், நெற்கட்டுஞ் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர், தன் செலவில் ராமகோவிந்தப்பேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார்.
விப வருடம் ஆடி மாதம் 25ம் நாள் புலித்தேவன், பிறக்குடையாக் குடும்பனுக்கு மானிய பூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
குளம் பராமரிப்பு: குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயிலிருந்து குளம் பராமரிப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றுக்குக் கணக்கெழுதி ஒப்பிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.
நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டிருந்தது. 85, 86, 87, 88ம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. நெல் கோட்டை, பாட்டம் என்ற அளவில் குறிக்கப்பட்டுள்ளது.
விதை நெல் விரை என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாகப் பயின்று வரும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித் தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது.
குளம், மடை விருத்திக்குத் தனி மானியமும் விடப்பட்டிருந்தது. புலித்தேவன் “நம்மிட மனோ ராசியில்’ இச்செப்பேட்டை எழுதிக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு புலவர் ராசு கூறினார்.
தினமலர், ஜூலை 12, 2008.
….
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.