-முத்தாலங்குறிச்சி காமராசு
ஜமீன் கோயில்கள்
கொல்லங் கொண்டான், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்திருந்த ஜமீன். இயற்கை வனப்புடன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூர். தற்போதும் காணப்படும் பிரமாண்டமான அரண்மனை, சிறந்து விளங்கிய ஜமீனுக்குச் சான்றாக நிற்கிறது. மேற்குகடற்கரைப் பகுதியில் பிரசித்திபெற்ற நகரம் கொல்லம். இவ்விடத்தினை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் கேரள சிற்றரசன் மாறவர்மன். இவன் போர்புரிந்து பல பகுதிகளில் தன் ஆட்சியை விஸ்தரித்தான்.
இவனால் பாதிக்கப்பட்டவர்கள், ராஜபாளையத்தின் அடுத்தப் பகுதியை ஆண்ட வாண்டையத்தேவன் என்ற சிற்றரசனிடம் வந்து முறையிட்டார்கள். வாண்ைடயத்தேவன் பெரும் படை திரட்டி கொல்லத்துக்கு சென்று போரிட்டு வென்றான்; இதனால் ‘கொல்லங்கொண்டான்’ என்றழைக்கப்பட்டான். கொல்லத்து அரசனிடமிருந்து மீட்ட நிலங்களை, அந்தந்த சிற்றரசர்களிடமே ஒப்படைத்தான்.
நாயக்கர் மன்னர் காலத்தில் பாளையக்காரர்களாக இருந்த கொல்லங்கொண்டான் ஜமீன்தாராக விளங்கிய வாண்டையத்தேவன் திருமலை நாயக்கருக்கு எதிராகப் போரிடவேண்டிய சூழல் வந்தது. தனக்குப் பாளையக்காரராக பணிபுரிந்துகொண்டு தன்னையே எதிர்ப்பதைக் கண்டு கொதித்த திருமலை நாயக்கர் தேவனின் அரண்மனையை இடித்து நாசமாக்கினார். அப்போது வாண்டையத்தேவன் வீரமாகப் போராடினார். அவருடைய வீரத்தை மெச்சிய நாயக்கர், பாளையத்தை அவரிடமே ஒப்படைத்து விட்டுத் திரும்பினார்.
அதன்பின் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நல்லெண்ணத்தின் விளைவாக தங்களுடைய வாரிசுகளின் பெயருக்குப் பின்னால் திருமலை என்ற பெயரையும் சூட்டினார் வாண்டையத்தேவன். சங்கரபாண்டி திருமலை வாண்டையத் தேவர், பொன்னையா திருமலை வாண்டையத் தேவர், ஹரிஹரபுத்ர திருமலை வாண்ைடயத் தேவர் என்ற அவரது வாரிசுகளின் பெயர்கள் சில உதாரணங்கள்.
திருமலைநாயக்கரால் தரைமட்டமான அரண்மனையை அப்படியே விட்டுவிட்டு புதிதாக அரண்மனை கட்ட ஆரம்பித்தனர். அதற்கான வேலையில் இறங்கியபோதெல்லாம் பிரச்னை ஏற்பட்டது. சங்கரபாண்டிய திருமலை வாண்டையத் தேவர், தனது அரண்மனை ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டார். ‘முதலில் ஒரு பிள்ளையார் கோயிலை கட்டி வணங்குங்கள்; அதன்பிறகு அரண்மனை வேலை தானாகவே நடைபெறும்’ என்றார் அவர். அதன்படி கோயிலைக் கட்டி, ‘ஆதி விநாயகர்’ என்று பெயரிட்டனர்.
அந்த விநாயகர் கோயில் தற்போதும் அரண்மனை முகப்பில் காணப்படுகிறார். ஆதி விநாயகர் கோயில் கட்டி முடித்தவுடன் அரண்மனை வேலை தங்கு தடையின்றி நடந்தது. அரண்மனை முன்பு பிரமாண்டமான நுழைவாயில் கட்டப்பட்டது. தற்போதைய ஜமீன்தார் வாரிசு லிங்க சுந்தரராஜ் தினமும் பிள்ளையாருக்கு பூஜை செய்தபின்பே தினசரிப் பணிகளை மேற்கொள்கிறார். அரண்மனை மட்டுமல்ல, ஊரில் திருமணம் முதலான எந்த சுபவிசேஷம் என்றாலும் இவருக்குதான் முதல் அழைப்பு!
இவர்களது குலதெய்வம் ராஜபாளையம் நீர் காத்த அய்யனார். ராஜபாளையத்துக்கே குடிதண்ணீர் தரும் நீர்தேக்கத்தினை காத்தருளும் தெய்வமாக, நீர் காத்த அய்யனார் அருளாட்சி புரிகிறார். ராஜபாளையம் பஸ் நிலையத்தில் இறங்கி, அய்யனார் கோயில் என்று கேட்டால் யாரும் வழிகாட்டுவர். பங்குனி உத்திரம், சித்திரை விஷு இங்கு சிறப்பாக நடைபெறும். பல்லாயிரம் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். புதன்கிழமையும், சனிக்கிழமையும் இவருக்கு உகந்த நாட்களாதலால், அந்நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
இந்த ஆலயத்தில் கொல்லங்கொண்டான் ஜமீன்தாரின் முன்னோர்களான பெரியபூமி ஆண்டவர், சின்னபூமி ஆண்டவர் ஆகியோருக்கு தனிச் சந்நதி காணப்படுகிறது. சிலசமயம் அய்யனார் ஆற்றில் திடீரென்று வெள்ளம் வந்துவிடும். நடுக்காட்டில் உள்ள இந்த அய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றை தாண்டுவது கடினம். அவர்களுக்குரிய பாதுகாப்பு கொடுத்து காத்தனர் இவ்விருவரும்.
ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரையுமே வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. ஆனாலும் அவர்கள் தெய்வமாக நிலைபெற்று மக்களைக் காத்துவருகிறார்கள் என்பது ஐதீகம். ஜமீன் வாரிசுகள் இந்தத் தம் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்து தொழுது வருகிறார்கள். தம் குடும்பத்து காது குத்துதல் உள்பட பல விழாக்களை அவர்கள் இங்குதான் நடத்துகிறார்கள்.
சித்திரை விஷு திருவிழாவில் இந்த வாரிசுகள், வித்தியாசமான பானம் தயாரித்து, அய்யனாருக்குப் படைத்துவிட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவார்கள். புளி, கருப்பட்டி கலந்த இந்த பானத்துக்கு ‘பானக்காரம்’ என்று பெயர். திருவிழாவின்போது அய்யனாரை வணங்க வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஜமீனுக்குச் சொந்தமான தோட்டத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
50 வருடங்களுக்கு முன்புவரை நீர்காத்த அய்யனாரை தினமும் ராஜபாளையம் சென்று வணங்குவதை வழக்கமாக வைத்திருந்திருந்தனர் ஜமீன்தார்கள். நாளாவட்டத்தில் அவ்வாறு செய்ய இயலாததால், ஹரிஹரி வாண்டையத் தேவர் காலத்தில் அய்யனார் கோயில் பிடிமண் எடுத்துவந்து கொல்லங்கொண்டான் அரண்மனைக்கு அருகில் பிரதிஷ்டை செய்து அய்யனாருக்கு கோயில் கட்டினார். தினமும் அய்யனாருக்கு பூஜை நடைபெற ஏற்பாடு செய்தார். தான் பணிக்குச் செல்லும்போதெல்லாம் அய்யனாரை வணங்கிவிட்டே சென்றார்.
தற்போதும்கூட அவரது வாரிசுகள் அய்யனார் கோயிலை மிகச்சிறப்பாகப் பராமரித்து வருகிறார்கள். ஒருசமயம் கான்சாகிப்புக்கும் பூலித்தேவன் தலைமையான மறவர் பாளையத்துக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் வடக்கு அரணாக இருந்து பூலித்தேவனை பாதுகாத்தது கொல்லங்கொண்டான் ஜமீன்தார்தான். முதல் சண்டையில் கான்சாகிபை புறமுதுகிட்டு ஓடும்படி விரட்டினார் ஜமீன்தார். இரண்டாவது சண்டையில் ஜமீன்தார் இறந்து விட்டார். அவரது இளம் கர்ப்பிணி மனைவி தப்பி ஓடினார்.
அவரையும் அவரது வயிற்றில் வளரும் வாரிசையும் அழித்துவிடும் நோக்கத்தில் கான்சாகிப் படை விரட்டியது. ராணி பஞ்சம்பட்டி என்னும் கிராமத்திற்கு வந்தார். அங்கு ஒரு வீட்டு மாட்டு தொழுவத்தில் மறைந்து கொண்டார். அந்த ஊர் மக்கள் அவரைக் காவல் காத்தனர். பல இடங்களில் ராணியைத் தேடிய கான்சாகிப் வீரர்கள் பஞ்சம்பட்டிக்கும் வந்து மக்களை மிரட்டினர். ஆனால், அவர்கள் ராணியைக் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்தனர். காலங்கள் கடந்தன.
ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி பெரியவனாக்கி அவனுக்கு போர்ப் பயிற்சி கொடுத்து போர்படை தளபதியாக்கினர். பின் அவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மீண்டும் கொல்லங்கொண்டான் அரண்மனையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கொல்லங்கொண்டான் ஜமீன்தாரின் சிறப்பைக் கருதி, அவருக்கு ஒரு சிறப்பான மண்டகப்படி சேத்தூர் ஜமீன்தார் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஆலயத்தில் வழங்கப்படுகிறது.
தேவதானம் அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் சேத்தூர் ஜமீன்தார்தான் இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர். இங்கு வைகாசி விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். 5வது நாள் திருவிழாவில் கொல்லங்கொண்டான் ஜமீன்தாருக்கு இரவு மண்டகப்படி வழங்கப்படுகிறது. இதை வருடந்தோறும், அழைப்பிதழிலேயே தெரிவித்து கொல்லங்கொண்டான் ஜமீன்தாரை பெருமைபடுத்துகிறார்கள்.
அன்றைய தினம் பகலில் சுவாமி-அம்பாள் ஒருசேர வெள்ளி ரிஷப வாகனத்திலும், இரவு இந்திர வாகனத்திலும் காட்சி தருவார்கள். தற்போது வாரிசுகள் லிங்க சுந்தர்ராஜ் மற்றும் அவரது சகோதர்கள் இந்த மண்டகப்படியில் கலந்துகொண்டு மரியாதை பெறுகிறார்கள். ஒருகாலத்தில் மனநோயாளிகளை குணமாக்கும் இயற்கை இலவச மருத்துவமனையை அரண்மனை வளாகத்திலேயே நடத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல், ராஜபாளையம் சேர்மனாக இருந்த ஜமீன்தார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதற்காக இவ்வூரை சேர்ந்த பெரிய தனக்காரரிடம் இடத்தினையும் இலவசமாக பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
ஜமீண்கள்
=======
நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்
முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்
திரையன் தேவர்கள்
ஊர்க்காடு ஜமீன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி ஜமீன்
ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்
குருக்கள்பட்டியின் மறைந்த ஜமீன்
சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை
கொல்லங் கொண்டான் ஜமீன்
ஊத்துமலை ஜமீன்
சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சேத்துர் ஜமீன்
கடம்பூர் ஜமீன்
மணியாச்சி ஜமீன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.