Tuesday, April 8, 2014

ஒரு நாட்டுபுற பாடல் காட்டும்(விரையாச்சிலை வகைப்பாட்டு)

                                                                                                           
கோனாட்டு மறவர் வகைப்பாடல் வரலாற்று செய்திகள் ஒரு பார்வை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் விரையாச்சிலை என்றொரு ஊர் உள்ளது.விரையாச்சிலை ஊரைச்சுற்றிப் பல கோவில்கள் இருந்தாலும் விரையாச்சிலையின் சிறப்புக்கும் பெருமைக்கும் காரணமாக விளங்குவது விரையாச்சிலை ஊரின் நடுவில் அமைந்துள்ள ஸ்ரீ மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் எனலாம், மேற்படி அடைக்கலம் காத்த அம்மன் கோவிலில் வருடம்தோரும் வைகாசி மாதத்தில் வரும் திருவிழாவிற்கு காப்புகட்டி 10 நாட்கள் திருவிழா நடத்தபடுகின்றது. 9 ஆம் நாள் திருநாளன்று மது எடுப்பு விழா விரையாச்சிலை செவ்வாய் திருவிழாவில் முக்கியமான திருவிழாவாகும் அம்து எடுப்பு விரையாச்சிலை 10 கரை(வகை) மறவர்களின் பெண்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது. இந்த மது எடுப்பு விரையாச்சிலை செவ்வாய் திருவிழாவில் முக்கியமான திருவிழாவாகும். மது எடுப்பு சங்ககாலத்தில் கொற்றவை வழிபாட்டின் அடியொற்றியதாகும். 10 ஆம் நாள் மஞ்சள் நீராட்டம் மற்றும் சந்தாதர்ணத்தோடு திருவிழா நிறைவு பெறும். இந்த அடைக்கலம் காத்த அம்மன் கோவில் நிர்வாகம் திருவிழா செய்தல் அனைத்தும் விரையாச்சிலை மறவர்களை சார்ந்ததே.

விரையாச்சிலை அடைக்கலம் காத்த அம்மனுக்கு திருவிழா செய்வதற்கு முடிவு செய்ததும் திருவிழாவிற்கு நெல் வசூலிப்பதற்கு மேற்படி கோவிலுக்கு காப்புக் கட்டுமுன் விரையாச்சிலை மறவர்கள் விரையாச்சிலை தெருக்களில் குழுவாக சென்று கோலாட்ட முறையில் வளந்தான அடிப்பது திருவிழாவிற்கு முளை போட்டு பாலிகை வளர்ப்பதும் முக்கிய நிகழ்ச்சியாகும். முளைப்போட்ட நாளிலிருந்து முளைப்பாரி பிரிக்கும் வரையுள்ள ஏழு நாட்களும் முளைப்போடபட்டுள்ள செவ்வாய் வீட்டின் முன் ஒவ்வொரு நாள் இரவிலும் விரையாச்சிலை மறவர்கள் குழுவாக சென்று காலில் சலங்கை கட்டிக்கொண்டு கையில் துனியை பிடித்து ஒயிலாட்ட முறையில் 10 வகை மறவர்களின் வீரதீரச் செயல்களைப் பாடி ஆடப்படும் பாடலே விரையாச்சிலை வகைப்பாட்டாகும். இனத வளந்தானப் பாட்டு,வகைப்பாட்டு ஆகிய நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் வரலாற்று செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விரையாச்சிலை வளந்தானை பாட்டு வகைப்பாட்டு வராலாற்று செய்திகளை அறிவதற்கு முன் அப்பாடலில் கண்டுள்ள மறவர்கலின் தொன்மையை தெரிந்து கொண்டால்தான் விரையாச்சிலை மறவர்களின் சிறப்புகளைப் புரிந்து கொள்ள முடியும். மறவர் என்போர் மதுரை,இராமநாதபுரம்,திருநெல்வேலி,விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களேயாவர்.

மெக்கன்சி என்ற ஆங்கிலேயர் தொகுத்த மறவர் ஜாதி வர்னனை பற்றிய ஏட்டுப் பிரதி ஒன்றில்,மறவர்களில் செம்பிய நாட்டு மறவர்,கொண்டையன் கோட்டை மறவர், ஆப்பநாட்டு மறவர், உப்புக்கோட்டை மறவர்,குறிச்சிக்கட்டு மறவர்,அகத்தா மறவர்,ஒரூர் நாட்டு மறவர் என ஏழு பெரும் பிரிவுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேவநேயப்பாவனர் அவர்களது தமிழர் வரலாறு என்ற நூலில் 38 பிரிவுகள் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. பாவனர் அவர்களது நூலை ஆராய்ந்தால் மறவர்களிடத்தில் கிளை,நாடு,கோட்டை,தாலி என்ற பாகுபாட்டில் 55 பிரிவுகள் உள்ளதாக தெரிகின்றது.

மறவர்களில் செம்பியன் நாட்டு மறவரை நாட்டு வழக்கில் செம்மநாட்டு மறவர் என்று கூறுவர்.இந்த செம்பியன் நாடு என்றழைக்கப்பட்டதை பல வரலாற்று மத்திய காலக் கல்வெட்டுகள் மூலம் தெரிவிக்கின்றன.

செம்பி நாட்டு மறவர்கள்:

செம்பியன் நாட்டு மறவர்கள் இராமர் சிதையை மீட்பதற்கு இலங்கை செல்வதற்கு கட்டிய திருவணையை(சேதுவை) காப்பதற்க்கு நியமிக்க பட்ட ஒரு தலைவனின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இன்னோர் அதாரமாக சோழ மன்னன் இராஜராஜ சோழன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவையும் பாண்டிய நாட்டையும் காக்க தன்னுடைய தளபதிகளில் ஒருவனை இப்பூமியின் காவலனாய் நியமித்ததாக ஒரு வரலாறு கூறுகின்றது. செம்பிய நாடு மறவர்களில் சேதுபதிகள் முக்கியமானவர்கள். செம்பிநாட்டு மறவர்கள் சேது அனையைக் காப்பதற்கு வந்தவர்களாதலால் சேதுகாவலர்கள் என்றும் சேதுபதிகள் என்றும் அழைக்கபட்டனர். செம்பிய நாட்டு மறவர்களில் சேதுபதிகள் முடிதரிக்கும் மன்னர்களாதலால் செம்பியநாட்டு மறவர்களுக்கு மறமன்னர் என்றும் கரந்தையர்கோன் என்ற பட்டம் உண்டு. செம்பி நாடு மறவர்களுக்கு பிச்சாகிளை,மரிக்கார் கிளை,கற்பகத்தார் கிளை,தனிச்சான்(துனிஞ்சான்) கிளை,பிச்சாகிளை,குடுதனார் கிளை,தொண்டமான் கிளை என பல உட்பிரிவுகள் உண்டு. செம்பிநாட்டு மறவர்களில் ஒரு பகுதியினர் இராமநாதபுரம் திருவாடனைக்கு என்ற ஊரின் நாரை பறக்காத 48 மடைப்பாசணத்தினுள்ள ஒருமடைப் போக்கிலிருந்தவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக புதுக்கோட்டை பகுதிக்கு வந்ததாக பொது வரலாறு கூறுகின்றது. இராசசிங்க மங்கலம் கம்மாயில் 48 மடைகள் இருந்ததை 18 ஆம் நூற்றாண்டு நூலான மதிலைப்பட்டி அழகிய சிற்றம்பல கவிராயரின் சுசிலவள்ளல் அம்மானை என்ற நூல் பேசுகின்றது.

அவ்வாறு புதுக்கோட்டை வந்து தங்கிய மறவர்களது ஊர்களில் விரையாச்சிலையும் ஒன்று.கி.பி.12-ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக நடந்து இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றது.புதுக்கோட்டைபகுதி மறவர்களின் குடியேற்றத்தின் காலத்தை அறிவதற்கு புதுக்கோட்டை கல்வெட்டு நமக்கு உதவுகிறது. புதுக்கோட்டை பகுதிக்கு மறவர்கள் கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.கல்வெட்டுகளில் மறவர்களை கி.பி.10. ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கிறது.விரையாச்சிலை வந்து தங்கிய மறவர்கள் விரையாச்சிலையினை பல விதங்களில் மேம்படுத்தியதோடு விரையாச்சிலையை ஒரு படைப்பற்று ஊராகவும் தங்களை பாண்டிய படைப்பற்றின் ஊரவையராகவும் உயர்த்திக் கொண்டு விரையாச்சிலை கோவில்கலையும் நிர்வாகித்து வந்தனர்.

இக்கல்வெட்டுகள் மூலம் மறவர்கள் ஊரவையர்,அரையர், பேரரையர்,நாடாள்வார்,நாட்டர் போன்ற பட்டங்களை கொண்டவர்களாக வீரதீர செயல்கள் மிக்கவர்களாக விளங்கினர் என தெரியும். இதில் மறவர்களை செம்பியன் நாட்டு பேரரையன்(புரையர்) என்ற பட்டம் வழக்கில் கானப்படுகின்றது. பேரரையன்,அரையன் என்பது அரசமக்கள் எனும் பொருள் படும்.எனவே இங்கு உள்ள பேரரையர் 10 வம்சத்தை வளந்தானை பாட்டு குறிப்பிடுகின்றது.

இந்த வளந்தானை பாடலையும்,வகைப்பாட்டினையும் சுமார் 200 வருடங்கலுக்கு முன்பு விரையாச்சிலையில் வாழ்ந்த கருத்தக் குட்டை தேவர் என்பார் பாடியதாக கூறப்படுகின்றது. அது வாய்மொழிப் பாடலாகவே இன்று வரை இருந்து வருகிறது.

"சீரிலங்கும் கனயோகம் செழுந்தருளும் கானாடாம் தாரிலங்கும்
கானாட்டில் தழைக்கும் ஐந்தூர்ப் படைபத்தாம்(பற்று)"

கானாடு இதற்கு மற்றொரு பெயரும் உண்டு விருதராஜ பயங்கர நாடு கானாடு என்பது வடக்கே புதுக்கோட்டை அன்மையிலுள்ள பேரையூரையும்,மேற்கில் விரையாச்சிலையின் ஒரு பகுதியையும்,காரைக்குடியையும் தெற்கே அரிமளத்திற்கு அடுத்துள்ள நெடுங்குடியையும் எல்லையாக கொண்டது. பாடலில் கண்டுள்ள ஐந்தூர் படைப்பத்து, இதில் தேக்காட்டூர்,கோட்டூர்,லெமலக்குடி,விரையாச்சிலை,புலிவலம் ஆகிய ஐந்து ஊர்களேயாம். இந்த படைப்பற்று ஊர்களே கானாட்டு பேரையூர் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில் இன்றைக்கும் இந்த ஐந்து ஊர்களுக்கும் வரிசைக்கிராமத்தில் கோவில் மரியாதை கொடுக்கப்படுகின்றது குறிப்பிடதக்கதாகும்.


"பெருநகரில் மறமன்னர்கள் பெருகி வளர் வீடுகளாம் பெருகிய பத்துஅம்பலமாம் பேரான பாக்கியமாம் பாக்கியம் சேர் பல்தெருவாம் பனிமுகப்பாம் தோரனமாம்"

மறமன்னர்கள் என்போர் மறவர்களாவர், இவர்கள் சேதுபதியை சேர்ந்தவர்கலாதலால் மறமன்னர் என்றழைக்கப்பட்டனர்,இவர்கள் செம்பியன் நாடு மறவர்களைச் சார்ந்தவர்களான சேதுபதிகளுக்குரிய சேது காவலர் வாள் கோட்டைராயர் போன்ற பட்டங்களின் மூலம் அறியலாம். சேதுபதிகளுக்கு முன்னரே மறவர்கள் தென் தமிழ் நாட்டில் கி.பி.13.ஆம் நூற்றாண்டளவில் 8 இடங்களில் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்ததாக இலங்கை மகாவம்சம் கூறுகிறது ஆதாவது கொண்டையன் கோட்டை,வேம்பக் கோட்டை மறவர்,நாலுக்கோட்டை மறவர், அஞ்சுக்கோட்டை மறவர், அணில் ஏறாக் கோட்டை மறவர் என்ற இவர்களின் பெயர்களே சான்றாகும்.
முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் நிறுவிய மறமானிக்க ஈஸ்வர நாயனார் ஆலையம்




அம்பலம் என்ற சொல் இறைவன் ஆடும் சபை,நடுவூர் மன்றம்,கள்ளர் மறவர்களின் தலைவன் பட்டம், வலையர் சாதிக்குரிய குலப்பட்டம் அதிகாரம் என பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். இங்கு பெருகிய பத்தம்பலமாம் என்றால் விரையாச்சிலை மறவர்களில் 10 கரை அம்பலத் தேவர்களை குறிக்கும்.

"ஓங்கி முளை வளர்த்திடவே உருமாப் பெண்கள் காப்பு கட்டி காப்புக் கட்டி பாலிகைக்கு கனமாக நூலைச் சுற்றி"
இதில் முளிப்பாரி ஓடும்பாது பானையை மஞ்சள் கட்டுவதை குறிக்கு.
I

"பாடுவாளாம் விடங்கேசுவரர் உய்யவந்தம்மனும் துய்ய
கருப்பரும் பைரவர் சுவாமி பரிவாரங்களும்
தெய்வமது புதுமையுள்ள தேவி பத்திரகாளி அம்மன்
அடிக்கலாம் காத்த ஆயிதன் மேல் பாடுங்கடி"

விரையாச்சிலை சிவன் கோவில் இறைவன் உலகவிடங்கேசுவராவார். அக்கோவில் அம்மன் உய்யவந்த அம்மன் என்றழைக்கபடுகிறார்.
இந்த முளைப்பாரி பாடலின் தொடர்ச்சியும் அதன் சிறப்புகளையும் பலவகையில் விளக்குகிறது.
வகைப்பாட்டும் வரலாற்றுச் செய்திகளும்:

வகை என்றால் வம்சம்,கரை,கூட்டம் என்று பல பொருள் உண்டு. அதாவது ஒரு தலைவன் வழி வந்தவர்கள் அல்லது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்களின் பங்காளி கூட்டமே வகை(கரை) எனப்படும்.

விரையாச்சிலை மறவர்கள் செம்பி நாட்டு மறவர் பிரிவை சார்ந்தவர்கள்.விரையாச்சிலையில் மறவர்களிடத்திலே 10 வகை பங்காளிக் கூட்டம் உள்ளது இந்த 10 வகை மறவர்களது பெண்களில் வகைக்கு ஒருவர் வீதம் விரையாச்சிலை அடைக்கலம் காத்த அம்மன் கோவில் திருவிழாவிற்கு மது எடுக்கின்றனர். இந்த பத்து வகை மறவர்களின் வீரப் பிரதாபங்களையும் சிறப்புகளையும் பாடும் நாட்டுப் புறப்பாடலே விரையாச்சிலை வகைப்பாட்டாகும். வகைப்பாட்டு ஒவ்வொரு கரையின் தலைவரான அம்லக்காரரை பாடுவதன் மூலம் கதையின் சிறப்புகள் பாடப்படுகின்றன. வகைப்பட்டு தன்னானே நானேனோம் என்ற இசை குறிப்பின் தொடங்கி பல பாடல்கள் பின் இசையாக பாடப்படுகின்றது.

வகைப்பாட்டில் விரையாச்சிலை மறவர்களின் முதல் வகையில் ஆதி பொன்னம்பல அம்பலக்காரரை வகையில் வலஞ்சியரை வெட்டிய தேவனின் உட்கரை ஆவார். இவரை முன் வைத்தே இவ்வகைப்பாட்டு ஆரம்பிக்கின்றது.


"ஆகா ! சேனையும் தானும் படைமுகத்தில் சென்று துணிந்து ரணகளத்தில்
ஆணையைக் குத்தியஐநூற்றுவ புரையராம் ஆண் பிள்ளை என்றுமே பெயரும் கொண்டான்"


யானையின் பலம் தும்பிக்கையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப யானையின் அசுர பலத்தை கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் படைகளத்தில் யானைத் தும்பிக்கை வெட்டி கொண்டதால் இப் பெயர் என்றழைக்கப்பட்டனர் போலும்.

ஐநூற்று புரையர் என்ற பட்டமும் இவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. பனையூரில் வலஞ்சுவெட்டிய தேவனின் வகையும் வயிரமிதிச்சான் என்ற வயிரத்தேவன் கரையும் வகையும் உள்ளனர். இவர்கள் தனிக் கரையனராக இருந்தாலும் மறவர்களின் பெருங்கரையில் ஒரே கரையினர் ஆவர். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு நிலக் கொடையின் காரனமாக இவர்களது முன்னோர்களுக்கு கொடுக்கப் பெற்ற இவர்களது முன்னோர்களுக்கு கொடுக்கப் பெற்ற செப்பு பட்டயத்தில் கலங்காத கண்டன் மறமன்னர் வாள்கோட்டைராயர் அவிராய புரையர் வயிரமிச்சான் உள்ளிட்டாரும் ஆனை வெட்டி மாலை சூடும் ஐநூற்றுப் புரையர் வலஞ்சு வெட்டி தேவரும் கரை ஒன்று எனச் செப்பேடு கூறுவதிலிருந்து மறவர் வலஞ்சு வெட்டி தேவர்கள் யானையை வெட்டி வெற்றி கண்டதை அறியலாம். இது போல

குளிபிறையில் ஒரு வகையினர் மாச்சார் வெட்டி தேவர் என்றும் கோட்டூர் மறவர்களில் ஒரு வகையினருக்கு கரிசல் வெட்டி தேவர் என்றும் உள்ள பட்டங்கள் யானை வெட்டி என்ற பட்டத்துடன் தொடர்புடையவை எனலாம் அடுத்து.

"முன்னம்பலமாம் முதல்வகையானவன் முன் வைத்த காலை பின்னே வையான் பொன்னம்பலம் ரெண்டு மதுவினில் பூவும் சிங்காரத்தை பாருங்கடி"

பொன்னம்பல அம்பலகாரர் முதல் வகையை சேர்ந்த இவர் 10 அம்பலகாரர்களுக்கு முன்னவர் ஆவார். முன் வைத்த காலை பின்னே வையான் என பாராட்டபடுகிறார். முன் வைத்த காலை பின்னே வையான் எனபதற்கு போர்களத்தில் எதிரியை கண்டு அஞ்சி பின்வாங்கி செல்லாமல் முன்னேறி சென்று வெற்றி வாகை சூடுவதையே குறிக்கோளாக கொண்டவர் எனலாம். பனையூர் மறவரில் ஒரு வகையினர் கண்டு போகாப் புரையர் என்ற பட்டமுள்ளது. ஆதாவது எதிரியை கண்டு பின் வாங்கி போகாதவன் என்று பொருள்,முன் வைத்த காலை பின்னே வையான் என்பது கண்டு போகா என்பது ஒன்றே எனலாம்.

"மேனாட்டு பூச்சியன் சேனை தளத்தையும் வெட்டி
ஜெயம் பெற்ற சேவகனாம் கானாடு எல்லைக்கு அதிபதியாம்
நல்ல கானாட்டுக் காரிய சேகரனடி தென்பாலும் போலும் இனசன
சேகரன் நல்ல செல்வ மிகுந்த கனயோகனான அம்பலக்காரன்
மது வரும் சந்தோசம் பாருங்கள்"


கானாட்டு புரையர் இரண்டாவது வகை மறவர்களின் தலைவராவார். அவர் கானாட்டு காரியக்காரர். அவர் புதுக்கோட்டை தொண்டைமானுக்கும் மருங்காபுரி பூச்சைய நாயக்கருக்கும் நடந்த எல்லைப் போரில் தொண்டைமான் பக்கம் நின்று பூச்சைய நாயக்கரை வென்றவர் என்பதை இப்பாடல் வரிகள் பெருமை சேர்க்கிறது.

"செம்பொன் நிதி செல்வ முள்ளவனாம் சிங்கடாகை சிவிகை உடையவனாம்
அன்பென்னும் கொம்ப ராச துரைத்தனம் ஆனவனாம் புவி ஆண்டவனாம்
சாயாத செல்வம் படைத்தவனாம் சௌபாக்கியனாம் வெகுயோக்கியனாம்
ஓயாமாறி மதுதான் கொண்டிருந்த உத்தமி வாரதைப் பாருங்கடி"

ஓயாமாறி என்றி சொல்லின் பொருள் எந்த நேரத்திலும் போருக்கு செல்வதை பெருவிருப்பாக கொண்டவர் என்பதை சுட்டுவதாகும், சிங்கடாகை சிவிகை உடையவர் என ஓயாமாறி போற்றப்படுகிறார். சிங்கடாகை சிவிகை என்றால் சிங்கமுகப் பல்லாக்கை குறிக்கும். இவர் சிவகங்கை மாவட்டம் காளையாட் கோவிலருகிலுள்ள புலியடி தம்பம் என்ற ஊரில் பாடி காவல் பார்த்த்ததாகவும் சுமார் 80 வருடங்களுக்கு முன் இவரது வீட்டில் பழைய பல்லாக்கு ஒன்று கட்டிக் கிடந்ததை பார்த்ததாகவும் இன்றைக்கு 80 வயதுக்கு மேற்பட்ட விரையாச்சிலை கா.சுப்பிரமணி தேவர் அவர்கள் கூறுகிறார்கள். விரையாச்சிலை அம்மன் கோவிலுள்ள ஒரு சிலை ஓயாமாறி தேவர் என்ற கல்வெட்டு உள்ளது.

அடுத்து விரையாச்சிலையில் தொண்டைமான் என்னும் பெயருடைய ஒரு வகை மறவர்கள் உள்ளனர். இவரை

"சண்டப்பிர சண்டனாம் மூவிராஜாக்களில் தம்பியைத் தானிவர் நம்பினவர்
தொண்டைமானென்னும் புரையரடி துரை துலங்கு நகுலன்களின் தீரனடி"

செம்பி நாட்டு மறவர்கலில் தொண்டைமான் என்னும் கிளை ஒன்றுண்டு இவர் செம்பி நாட்டு மறவரில் தொண்டைமான் கிளை ஒன்றுண்டு. இவர் செம்பி நாட்டு மறவரின் கிளையை சேர்ந்தவர். பெண்ணுக்கு தான் கிளைகள் குறிக்கும்அறந்தாங்கி தொண்டைமான் களில் இவர்கள் பெண் எடுத்திருக்க கூடும் அதனாலே இவர்கள் தொண்டைமான் கிளை கூறுகின்றனர்.

அடுத்து மூவி ராஜாக்களில் தம்பியைத் தானிவர் நம்பினவர் என்பதில் பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன்,வீரபாண்டியன் என்ற அண்ணன் தம்பிகளில் இவர்கள் வீரபாண்டியைன் அணியிலே நின்றதை இது காட்டுகிறது.

விரையாச்சிலையில் பாண்டியம்பலகாரன் என்றொரு தலைவன் வழி பங்காளிகள் தங்களை பாண்டியர்களின் வம்சம்(வகை) எனச் சொல்வர். இப் பாண்டியம்பலகாரன்

"காண்டீபன் பாம்பாறு காவல் கொண்டான் கிளை சார்ந்தவனாம் இனம் சேர்ந்தவனாம்
பாண்டியன் சீமையில் பாண்டி மதுவிது பாருங்கள் பாருங்கள் தோழிப் பெண்கள்"

இவர் பாம்பாற்று நாட்டில் பாடிகாவல் செய்ததை இப்பாடல் வரிகாட்டுகிறது இவர் பாண்டியன் என்னும் இயற்பெயர்
கொண்டவர்,ஓயாமாறிக்கும் இப்பாண்டியனுக்கும் விரையாச்சிலை அம்மன் கோவிலில் கற்சிலைகள் உள்ளன்.

"சென்னி மகுட முடிராசன் கொடி செலுத்தும் ராசன் மகாராசன்
மன்னியராசர் மறமன்னர் மகாராசன் அனும-கருட கொடியுடைய ஜெயமுடையோன்
அபிமானம் உள்ளவனாம் நல்ல இலங்கு யோகம் மிகுந்தவனாம்
கண்ணுக்கு கண்ணனான் கொப்புடைய நாயகி காவல் கொண்ட கானாடன்
அன்னதானம் பசுஞ்சொர்ணதானம் செய்ய அஞ்சாத நெஞ்சன் அபிராமன்
கர்ணனெனவே பிறந்தவனாம் இந்த காசினியோர்க்கு உகந்தவனாம்
வேலன் துனை பெற்ற சீலன் அனுகூலன் விரசை நாட்டுக் கதிபதியாம்
மேல வணங்கின தேவனடி வெகு மேன்மை செளந்திர வாகனடி"

இவர் மேல வணங்கின தேவர் என்ற பட்டமுடையதேவர் . மேல வணங்கின தேவர் என்ற பட்டத்திற்கு மேற்க்கு எல்லையான கொப்புடைய நாயகி அம்மன் குடி கொண்டுள்ள காரைக்குடி பாடிகாவல் காத்தவர் என குறிக்கபடுகிறார்.

சேதுபதிகளுக்கு நாயக்க மன்னர்கள் அனும-கருட கொடி வழங்கினர். அதற்குமுன் பாண்டியர் வழங்கிய கயல்கொடி,புலிக்கொடி முதலான பெயர்களில் கயல்கொடி கேதனன், புலிக்கொடி கேதனன், கருட-அனுமக் கொடி கேதனன் முதலிய பெயர்கள் உள்ளன. மேல வனங்கின தேவர் சேதுபதிகளின் முன்னோர்களை சேர்ந்த நேரடி தொடர்பு காரணமாக இவரும் மறமன்னர்,கருட-அனும கொடியுடையவர் எனப்பட்டம் வந்தது.

"உபரி மந்திரி யோசனை வாசனை யுக்தி புத்தி மதியூகிகள் நகூரி
பூவன் வழிக்கால் நாட்டி மது நாகரிகத்தையும் பாருங்கடி"

விரையாச்சிலை மறவர்கலில் நகரி அம்பலகாரரும் அவரைச்சார்ந்தவரும் நகர காவல் செய்தவர்கள் ஆதலால் நகரி அம்பலம் என பெயர் பெற்றது எனலாம்.

அடுத்ததாக கீழ வணங்கின தேவர் என்ற பெயருடைய ஒரு வகை உண்டு

" காலபய்ங்கரன் கானாடன் இந்தக் காசினியோருக்கு உகந்தவனாம்
கீழ வணங்கின தேவரடி கிளை சார்ந்தவனாம் இனம் சேர்ந்தவனாம்"

எண்கின்ற பாடலில் கீழ வனங்கின தேவர் என்ற பட்டத்திற்கு பொருள் கானாட்டின் கிழக்கு பகுதியினை காவல் செய்தவர்.

"பாந்துவமான் சனக்காரன் கன் பக்கியக்காரன் பதக்காரன்
சாந்திமது தான் அவரும் சந்தோசம் பாருங்கள் தோழிப்பெண்காள்"

எண்கின்ற பாடலில் சாந்தி அம்பலகாரர் என்ற பட்டத்தில் வரும் தலைவரை குறிக்கும்.

"தேனாறு பாயும் மல்லாங்குடியும் செல்வம் செழிக்கும் விராச்சிலையில்
வானாதிராயர் நிலைமையடி நல்வாழ்வு மிகுந்த விவேகனடி".

வானாதிராயர் என்ற வகையின் பங்காளிகள் மல்லாங்குடி(மலையாளங்குடி) என்ற பக்கத்து ஊரில் குடியேரியுள்ளதால் மல்லாங்குடி என்று பேசப்படுது. இந்த வாணாதிராயர் போன்ற பட்டம் மறவர்களுக்கு கி.பி.12,13, ஆம் நூற்றாண்டுகளில் சில அரசியல் தலைவர்கள் வாணவராயர் போன்ற குறுனிலத்தலைவர்கள் இருந்தனர். 

"அங்குசமானவன் வங்குசமானவன் நல்ல அம்பலமான அரசர்களாம்
சிங்கான் மதுவரும் சிங்காரம் நல்ல சென்பக வல்லியே பாருங்கடி"

இந்த சிங்கான் அம்பலகாரரின் வகையினைப் பாராட்டும் வரிகளும்,விராச்சிலைக்கு அன்மையிலுள்ள பனையூர் சிவன் கோவிலில், குளமங்கல மறவர்களில் மழவர்மாணிக்கம் என்ற மழவசக்கரவர்த்தி என்பவரும் மாளுவராய பேரரையர் என்பவரும் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு கல் உத்திரம் கொடுத்ததன் பொருட்டு வெட்டி வைத்துள்ள கல்வெட்டில் "பனையூர் மறவரில் மழவராய சோழ சிங்க பெரியான்" என்றும். இம்மழவராயன் தன்னை மழவராய சோழசிங்கன் என்று கூறிக்கொள்கிறார். கார்காத்த வேளாளருக்கு நிலம் வழங்கிய செப்புபட்டயத்தில் "மறமன்னர் மாளுவிராயப்புரையர் தனி மதிச்சான் உள்ளிட்டாற்கும் அசையாக்கட்டை மதியா வீரனுள்ளிட்டாற்கும் ஊரது புறவில் ஒன்பதிலே ஒரு கரைக்கு வகைப்பிரியல் நஞ்சையில்" என்றும் கூறுகின்றது. இவர் பாண்டிய தொடர்புடைய மழவராயர், இவன் பாண்டிய அரசு அதிகாரத்தில் பாண்டியனால் காளையார்கோவில் பாடிகாப்போனாக நியமிக்கப்பட்டவன்.இவனுக்கு குருவாக விளங்கிய ஈஸ்வர முடையாருக்கு நிலம் வழங்கியதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.இவனுக்கு பாண்டியனால் மழவசக்கரவர்த்தி என்று பட்டம் கொடுக்கபட்டவன்(பாண்டியர் வரலாறு:சதாசிவ பண்டாரத்தார்). இவன் தன்னை சோழசிங்கன் என்று ஆதாவது சோழனுக்கு சிங்கத்தை போன்றவன் என்று பட்டம் கொண்டவனாக இருக்கிறார். இவர் சிங்கான் அம்பலக்காரரின் கரைப்பாட்டு விளக்குகிறது.இவரது குலதெய்வம் வடக்கி வாசல் கருப்பர்.

"பொன்னனூர் முற்றிலும் காவல் கொண்டான் வர்ணப்புரவியேறும்
பரிநகுலன் சொர்ணநிதி பெற்ற நஞ்சுண்டான் வாபோசி
சொல்ல சொல்லும் புவிதேசமெங்கும்"

இந்த நஞ்சுண்டான் வாபோசி பற்றிய பாடல்வரியாகும். இவருக்கு பரி நகுலன் நன்சுண்டான் எனும் பட்டம் பாண்டிய ஐவர் சகோதரர்களில் நகுல பெருமாள் பாண்டியனை உணர்த்துகிறது.

"மிக்க புகழ்பெற்ற திக்கு விஜயமும் மேன்மை செலுத்தும் விவேகனடி மொக்கன்
மதுவிது திக்கும் மொய்க்கவே முன்மையாய் பாருங்கள் தோழி பெண்கள்"

மொக்கன் அம்பலக்காரர் வகையைப் பற்றியும் அவரது பங்காளிகளைப் பற்றியும் இப்பாடல் வரிகள் தெரிவிக்கிறது. புதுக்கோட்டை பகுதி மறவர்கள் சிலருகு அதிராப்புலி,செண்டுப்புலி,வீரப்புலி,ஈரப்புலி,கலங்காப்புலி என்ற பட்டப்பெயர்கள் உள்ளது போல இவ்வம்பலக்காரர் மொக்கன்புலி என்றழைக்கபட்டார் இவர் புலியின் வீரத்திற்கு ஒப்பானவர் என கருத்தில் கொள்ளலாம்.

"தாலிக்கு வேய் மணிகட்டியான் சௌபாக்கியனாம் வெகுயோக்கியனாம்
வாலிசுக்கிரிவன் போல் வந்துதித்த மறவர் குலம்"

இந்த மணிகட்டியான் தாலிக்கு வேலி என்பவர் கரையில் இரு சகோதரர்கள் வாலி சுக்கிரீவன் போல இருந்த கதை உள்ளது போல.

10வது வகையாக பல்லவராயர் வகையினைப் பற்றி

"வல்லவனாம் வெகு நல்லவனாம் அவன் மார்கண்டேயன் ஆயுசு
பெற்றவனாம் பல்லவராயன் மதுவரும் வேடிக்கை பார்க்க
வாருங்கள் தோழிப் பெண்காள்"

என்று பல்லவராயர் சுட்டப்படுகிறார்.  பல்லவராயர் என்ற பெயர் இப்பகுதி கள்ளர்,மறவர்,அகம்படியர்,வெள்ளாளர்களுக்கு வழங்கும் பட்டமாகும்.

"சதுராய் பொட்டிட்டு முளை வாட்டி படை தத்தளிக்கும்படி வெட்டியொட்டி எதிர் மிகுதியாக வந்த தளத்தையும் எல்லை கடக்க விரட்டினான் முப்பாடு தானும் கொடுக்காத வாள்வீச்சான் முகமை மதுவீடு பாருங்கடி"

முற்பாடு கொடாத வாள்வீச்சான் என்பது விரையாச்சிலை மறவர்களில் ஒருகரையினரின் பட்டமாகும். மேலப்பனையூர் சிவன் கோயிலில் கல்வெட்டு கூறும் குளமங்கல மறவரை குறிக்கும்போது இந்த உத்திரம் குளமங்கலம் மறவரில் அடைக்கலம் காத்தனான வாள்வீசி காட்டினன் தன்மம்" என்று கூறுகின்றது. தற்போது குளமங்கலம் மறவர்களில் வாள்வாசி என்ற பெயருடைய ஒரு கரையினர் உள்ளனர். வாள்வீச்சான் என்ற பட்டம் வாள்வீசி என்ற பட்டத்தின் திரிபு எனலாம்.இதைப்போல் பூவாலைக்குடி கல்வெட்டில் மறவரில் முற்பாடு கொடாதான் சூரிய தேவன் என ஒரு மறவனை குறிக்கின்றது.

இது போக பனையூர் குலமங்கலத்தில் மொத்தம் 18 மறவர்கள் உள்ளனர். அதில் பனையூரில் 1)வைரத்தவன் புறம் 2)சோழயான் கூட்டம் 3)வலஞ்சுவெட்டி பிச்சதேவன் கரை 4) வெள்ளை ஆவுடையாபுறம் 5)ஆதியான் கரை

குளமங்கலத்தில் 1)மழவராயன் புறம் 2)குமுடத்தேவன் புறம்3)கொம்பன் புறம் 4)ராமநாதன் புறம் 5)காலிங்கராயன் கரை 6)வாவாசி கூட்டம் 7)கோடாள் புறம் 8)சின்னழகன் கூட்டம் 9)ராஜராஜ பெரியான் வகை 9)வலங்கி புறம் 11) செல்லத்தேவன் கூட்டம் 12)சோழயான் கரை என பன்னிரண்டு கரை உள்ளது.மொத்தம் 18 கரைகளில் பெருங்கரை 9 ஆக சிறு கரைகள் 18 ஆக கணக்கிட பட்டுள்ளது.

நிலக்கொடயின் பொருட்டு கார்காத்த வெளாளருக்கு மறவர் வழங்கிய செப்பேடுகளில் பனையூர் குலமங்களத்து கரை மறவர்களை குறிக்கும் பொழுது "சேது காவல் பேரரையன் மற மன்னர் வாள்கோட்டை ராயர் சிறுகரை 18க் கும் 9 பெருங்கரைக்கும்" என்ற குறிப்புக்களும் மற்றோரு செப்பேட்டின்ல் "பனையூர் குளமங்கலம் ஊராயமந்த ஊரவர் அனைவர் உள்ளிட்டாரும் கூடி கரப்பிரியல் பட்டயம் வகையாவது வாள்கோட்டைராயன் சேது காவலப் பேரரையர் மறமன்னர் கலங்காத கண்டன் அவராயபுரையர் வைரமதிச்சான் உள்ளிட்டாரும் ஆனைவெட்டி மாலை சூடும் ஐநூற்றுவ பேரரையர் வளஞ்சுவெட்டி உள்ளிட்டாரும் 1 ஊரது புறவில் ஒன்பதிலே ஒரு கரைக்கு ஒன்பது வகைப்பிரியல்" என்று மேலப்பனையூர் ஸ்ரீ கோனட்டு நாயகி அம்மன் கோவில் திருவிழவில் முதல் மண்டகப்படி முதல் குளிபிரை,செம்பூதி,மூலங்குடி ஊர்களின் மறவருக்கு மரியாதை வழங்கும் செய்திகள் அவரவர்க்குரிய செப்பு பட்டயங்கள் மூலம் அறிகிறோம்.

சோழயான் கரை:

சோழயான் என்பது சோழகன் என்று இன்று சோழயான் என வழங்கபடுகின்றது.இது சோழ படைதலைவனின் பட்டம் என விக்கிரமசோழன் உலாவில் மூலம் அறிகின்றோம். இந்த சோழயான் கரையை சார்ந்தவன் பனையூர் சிவன் கோவிலில் கி.பி12. ஆம் நூற்றாண்டில் செய்தமைத்த கல்வெட்டு தனில் தன்னை சோழத்தேவன் என கூறிகொள்கிறான் சோழயா கூட்டத்தில் ஆசிரியன் வீடு,குத்தார வீடு,கோனாட்டன் வீடு,சுந்தாயி வீடு ,குண்டத்தீத்தார் வீடு என்ற பெயர்களில் உடைய குடும்பகளுக்கு கதவங்குடிகண்மாய் கரையிலுள்ள சம்பந்தகருப்பு குலதெய்வமாகும்.

திணியத்தேவன் புறம்:

இவன் திண்மை மிகுந்த மறமன்னாக இருக்கலாம் அதனால் இந்த திண்ணியன் என்ற பெயர் பெற்றவராக இருக்கலாம்.இக்கரையில் சித்திரையன்,கண்டுவான்(கண்டுபோகாதவன்) ஆதாவது எதிரியை கண்டு பின்வாங்கி போகாதவன் குப்பாத்தேவன்,சாத்தப்பன் என்ற குடும்பங்கள் இருக்கின்றது. இது போக "ஆனைவெட்டி மாலைசூடிய ஐநூற்றுபுரையர்" கரையாரைப் பற்றிய மாறவர்மன் குலசேகரனின் கல்வெட்டில்[கி.பி.12-ஆம் நூற்றாண்டு] இவர்களை "விரையாச்சிலை மறவர் நம்பி ஐநூற்றுவ பெரியான்" என கூறுகின்றது.

செல்லத்தேவன் கூட்டம்:

இவர்கள் கோனாட்டில் 3ஆம் கரையை சார்ந்தவர்கள்.இவர்களுக்கு கருப்பர் மற்றும் பட்டனவன் கரையை சார்ந்தவர்கள். சேதுபதிகளில் பலர் செல்லத்தேவன் என இருந்துள்ளனர். இவர்களில் கௌரிப் பாண்டியன்,சேதுராயன்(சேதிராயன்) என்ற பெயர்களில் பலர் இருந்துள்ளனர்.இந்த கௌரியர் பாண்டியர் தொடர்புடையவர்கள். இந்த சேதுராயன் மலையர்க்கு அரசராகி சேதிராயரை குறிக்கும் அல்லது சேதுவேந்தர்களை குறிக்கும் தொடராகும்.

`வீரமே துணையாக` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய இராஜகேசரி வர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் 46 ஆவது ஆட்சியாண்டில் கீழையூர் மலையமான் நானூற்றுவன் மலையமானாகிய இராஜேந்திரசோழ சேதுராயன், இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தியை எழுந்தருளுவித்து, அத் தேவர்க்கு நித்திய வழிபாட்டிற்கும் விளக்கினுக்கும் வீரசோழனல்லூர் நிலங்களின் வரிகளைக் கொடுத்துள்ளான்.

கொம்பையன் புறம்:

இவர்கள் ரண்டன் கொம்பன் என்னும் யானை(கொம்பன்)யை போன்ற வலிமையை உடையவர்கள் என்பதை குறிக்கும் தொடராகும். இவர்களை கொம்பன் பேரரையர் அல்லது கொம்மாயத்தேவர் என குறிப்பிடுகின்றனர்.

இராமநாதன் கரை:

இவர்கள் 4-ஆம் கரையை சார்ந்தவர்கள் இவர்களுக்கு பட்டவன் மற்றும் கருப்பர் தெய்வமாகும்.கி.பி.1553-ம் ஆண்டு கல்வெட்டில் ஊரணிக்கு எல்லை சொல்லும்போது இராமநாத தேவர் பக்கல் என்று இவரது நிலம் குறிப்பிடபட்டுள்ளது.

காலிங்கராயன் புறம்:

மழவராயன் காலிங்கராயன் என்பது பாண்டிய அரசு அதிகாரிகளின் அரியனைக்கு வழங்கிய பெயர்களாகும்.பிற்கால சோழர் படையில் தளபதியாக காலிங்கராயன் என்று ஒருவன் சுட்டபடுகின்றான்.காலிங்கராயன் பெயர் இவரது மூன்னோர்களில் ஒருவனது பெயராக இருக்கலாம். இவர்களுக்கு குலதெய்வம் ஆலடி-கருப்பர்.

கோடாளி புறம்:

கோடாளி கரை அம்பலங்களின் குடும்பங்களுக்கு கோடாளி வகையில்கோடாளியர் கூட்டம் என்ற பெயர் வழங்குகிறது.செப்பேடு ஒன்று "பரியேறு தேவர் கோடாளி புரையர்" என்று குறிப்பிடுகின்றது.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் 72 ஆம்பாட்டு

"படையுன் கொடியுங்க் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிருந்தேரும் தாரும்
முடியும் நேர்வன பிறவும் தெரிவு
கொள் செங்கோல் அரசர்க்குரியன"
மேற்கண்ட 72 ஆம் செய்யுளில் "அரசர்க்குரிய"

என்றதொடருக்கு விளக்கம் தரும்பாது முடி,செங்கோல்,வெண்கொற்றக்குடிய,யானை,குதிரை,தேர் முதலியன குறிப்பிடுகிறார்கள்.

அதைப்போல் 84 ஆம் நூற்பாவில் வரும் "வேலும் கழலும் ஆரமும்தேரும் மாவும்" மன்னருக்கு உரிய வில்,வேல்,வீரக்கழல், குதிரை,மாலை,முரசு,யானை, குறிப்பிடுகின்ற கோட்பாடினை ஒட்டியே பனையூர் குலமங்கலம் மறவர்கள் குதிரை ஏறிவந்தனர் எனத்தெரிகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டத்தை சார்ந்த இடிந்த சிவன் கோவிலில் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறசுவரிலிருந்த கிபி.12 அல்லது 13 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்றில் "குளமங்கல மறவரில் பரியேறு சேவகனான" என சொற்றொடர் காட்டப்படுகின்றது. அதன்பின் 15 ஆம் நூற்றாண்டுகலில் புதுக்கோட்டை பகுதியில் நில பிரபுக்களான கார்காத்த வேளாளர்கள் பனையூர் குலமங்கல மறவர்களுக்கு வழங்கிய செப்புபட்டயத்தில் "பனையூர் குலமங்கலத்துக்கு வந்தவன் தெஷினபூமிக்கு கர்த்தராகிய சேதுக்காவலப் பேரரையர் மறமன்னர் வாள்கோட்டையாரின் பரியேறு தேவர் கோடாளிப் புரையர்" என வருகின்றது.இதில் இருந்து இவர்கள் பாடிகாவல் முதல் திருமணம் வரை பரியேறும் சம்பிரதாயம் அடையாளப்படுத்ஹ்டபடுகின்றது.இவர்கள் திருமணத்தின் போது இவர்களை சார்ந்தோர் குதிரையேறுவதை சடங்காக கொண்டுள்ளனர்.

சின்னழக தேவன் புறம் :

இவர்கள் குலமங்கலத்தில் ஒன்பதாவது கரையினர்.இவர்களுக்கு பட்டவன் மற்றும் கருப்பர் தெய்வமாகும்.

ராஜராஜ பெரியான் கரை:

இவர்கள் குலமங்கலத்தில் பத்தாவது கரைக்காரர். இவர்களுக்கு தெய்வம் ஆலடி கருப்பர்.

வலங்கி புறம்:

இவர்கள் 11வது கரையாகும்.வலங்கை-இடங்கை சண்டையில் இவர்கள் வலங்கை பக்கம் நின்ரதால் வலங்கை ஆண்டான் என வழங்கப்படுகின்றது. இது பின்னாளில் குறுகி வலங்கி என மருவி வலங்கியை வலம்புரியான்.இவர்கள் விரையாச்சிலை,செவலூரில் அதிகமாக வாழ்கின்றனர். பனையூர் கல்வெட்டு ஒன்று ஸ்ரீ உத்தமரான வலங்கை ஆண்டான் என ஒரு மறவனை கூறுவது காண்க.

சோழயான் கரை: இவர்கள் 12வது கரையாகும். இவர்கள் குடும்பகளுக்கு கதவங்குடிகண்மாய் கரையிலுள்ள சம்பந்தகருப்பு குலதெய்வமாகும்.

மேற்கண்ட விராச்சிலை வளந்தானைப்பாடு,வகைப்பாட்டு என்ற நாடுப் புறப் பாடல்களால் விரையாச்சிலை மறவர்களின் வீரதீரச் செயல்,குணநலன்,குலத் தொன்மை,பட்டப் பெயர்களின் சிறப்புகள் ஆகியவை இவர்களின் பண்பாட்டை விளங்கும் காலக் கண்ணாடியாகும் எனலாம்.





நற்றான் பெரியான் என்னும் வீரமழகிய பல்லவராயன் குலோத்துங்க சோழ கடம்பராயன் என்னும் தானவ பெருமாளின் அகம்படிய மறமுதலியாக வேலை பார்த்துள்ளான். அகம்படிய மறமுதலி என்பது மறவர் தலைவர் ஒருவர் அகம்படித்தொழில் செய்தமையாகும்








































 நன்றி:
 கட்டுரை வழங்கியவர்: 
உயர் திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.