Wednesday, October 9, 2013

அருள்மிகு மலைவளர் காதலி உடனுறை இராமநாதர்


மரம்: வில்வம்
குளம்: அக்கினி, இராம, இலக்குமண உள்ளிட்ட 64 தீர்த்தங்கள்

பதிகம்: அலைவளர் தண்மதி - 3-10 திருஞானசம்பந்தர்
திரிதரு மாமணி - 3-101 திருஞானசம்பந்தர்
பாசமுங்கழிக்க -4 -61 திருநாவுக்கரசர்

முகவரி: இராமேஸ்வரம் அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம் 623526
தொபே. 04575 221223

இராமேச்சுரம் தொடர் வண்டி நிலையத்திற்கு 1.5 கி.மீ. தொலைவில் உளது. பாண்டி நாட்டுத் தலங்களுள் இது எட்டாவது ஆகும். கீழ்க்கடற்கரையில் அமைந்த இத்தலத்திற்கு தமிழ் நாட்டின் அனைத்துப் பெருநகர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. பேருந்துக் கடற்பாலம் கட்டியபிறகு ஆலயம் வரை பேருந்துகள் செல்லும்.

இராவணனைக் கொன்ற பெரும் பழி நீங்கும் பொருட்டு இராமபிரானால் எழுந்தருளுவித்து வழிபடப்பெற்ற கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது. (இராம + ஈச்சுரம் = இராமேச்சுரம். ஈச்சுரம் = கோயில்.) இச்செய்தி ``தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன், பூவியலும் முடிபொன்றுவித்த பழிபோயற, ஏவியலுஞ் சிலையண்ணல் செய்த இராமேச் சுரம்`` என்னும் இப்பதிக்குரிய ஞானசம்பந்தர் தேவார அடிகளால் இனிது விளங்குகின்றது. சேக்கிழாரும் ``சேதுவின் கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமான்றனைப்பாடி`` எனக் கூறியுள்ளார்.


இறைவரின் திருப்பெயர் - இராமநாதர். இராமேச்சுரத்தில் எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவரக் காசிக்குச் சென்ற அநுமார் திரும்பிவரக் காலந்தாழ்த்தமையால், சீதாபிராட்டியார் மணலால் குவித்துச் செய்த இலிங்கத்தை இராமபிரான் பூசித்தார். அவரே இராமநாதர் எனப் பெயர்பெறுவர். அநுமான் கொண்டுவந்த இலிங்கத்தை மூலலிங்கத்தின் வடபால் எழுந்தருள்வித்தார். அவரே விசுவலிங்கம் எனப் பெயர்பெறுவர்.

இறைவியாரின் திருப்பெயர் - மலைவளர் காதலி. இத்திருப் பெயரை ஞானசம்பந்தப்பெருந்தகையார் ``ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா`` என எடுத்து ஆண்டிருக்கின்றார். தீர்த்தம் - அக்நி தீர்த்தம், ராம தீர்த்தம், இலக்குமண தீர்த்தம், தனுக்கோடி முதலியன.

இது சோதி லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும். இப்பதிக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.

இத்தலத்தைப்பற்றி ``மறவாளிலங்கையிறைமகனை உதைத்த பழியால் மருண்டு, அரியன்று அறவாள் நேமியளித்தவனையருச்சித்தகன்ற அணிநகர்`` எனப் பரஞ்சோதியார், திருவிளையாடற் புராணம் அருச்சனைப்படலத்தில் கூறியுள்ளார்.

இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது என்னும் பெயர்பெறும். அங்கே இராமபிரான் தன் வில்லின் முனையால் தோண்டிய தீர்த்தம் தனுக்கோடியாகும்.

இராமேச்சுரத்திலிருந்து தெற்கே 18 கி.மீ. தூரத்தில் தனுக்கோடி இருக்கின்றது. சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குத்தான் செய்தல் வேண்டும். இத்தீர்த்தத்தில் நீராடச் செல்பவர்கள், தனுக்கோடி தொடர்வண்டி நிலையத்திலிருந்து செல்லுதல் நல்லது. அங்கிருந்து அதன் தூரம் 3 கி.மீ. தூரமாகும்.

இத்தலத்திற்கு நிரம்ப அழகிய தேசிகரால் பாடப்பெற்ற சேதுபுராணம் அச்சிடப்பெற்றுள்ளது.
``நீடுதநுக்கோடியினை நினைந்தாலும், புகழ்ந்தாலும், நேர் கண்டாலும் வீடுபெற லெளிதாகும்``
(சேதுபுராணம், தனுக்கோடிச் சருக்கம்) என்னும் அடிகள் இத்தனுக்கோடியின் பெருமையினை விளக்குவதாகும்.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் வீரபாண்டிய தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன் இவர்கள் காலங்களிலும், விசயநகர மன்னர்களில் விசுவநாத நாயக்கர் வீரப்ப நாயக்கர் காலங்களிலும், வீரபூபதி காலத்தும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவைகள் சகம் 1530 அதாவது கி. பி. 1608 இல் வீரபூபதி நாளில் இராமநாதர் கோயில் கட்டி முடிந்ததையும்; சகாப்தம் 1540 இல் அதாவது கி.பி. 1618இல் சேதுபதிகாத்த தேவர் புத்திரன் தளவாய் தேவன் குலசேகரனான சேதுபதிகாத்த தேவர், இறைவர் திருவிழாவிற்கு எழுந்தருளியிருக்க மண்டபம் ஒன்றைக் கட்டியதையும், சகாப்தம் 1540இல் சேதுபதிகாத்த தேவர் இராம நாதசுவாமி கோயிலின் முதற் பிரகாரம், திருநடமாளிகைப்பத்தி, ஆருட மண்டபம் கட்டியதையும், சகம் 1390 அதாவது 1468இல் பருவதவர்த்தினி அம்மன் கோயிலின் முன்புள்ள கொடிமரம் செய்து நிறுத்தி வைக்கப்பெற்றதையும் உணர்த்துகின்றன.


(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1903 No. 97-105, year 1905 No. 89-90, year 1915 No. 8-9. See also South Indian Inscriptions, Vol. VIII No. 3823 - 91.)

இக் கோயிலிலுள்ள கல்வெட்டுப் பாடல்கள்: (கட்டளைக் கலித்துறை)(1) சேல்கண்ட வாரியிலிங்கேசற் செய்பழி தீரமுன்னாள் மால்கண்ட கோயிலிராமீச ராடல்செய் மண்டபத்தை நூல்கண்ட நற்சக னாயிரத் தோடைந்து நூற்றிருபான் மேல்கண்ட நாளின் முனிராம நாதன் விதித்தனனே.

(2) திருமா லரனுக் கபிடேகஞ் செய்யச் சிலையதனால் வருமாறு கண்டவன் கோடிப் புனற்கு மகாலயத்தைத் தருமாயி ரத்தைந்து நூற்றுமுப் பான்செல் சகன் வருடத் தருமா தவம்செய் முனிராம நாதன் அமைத்தனனே.

(3) பற்றுஞ் சகனிற் பதினைந்து நூற்றுமுப் பான்மருவ நற்றும் புவியினை யாள்வீர பூபதி நாளிற் றொண்டர் குற்றங் கடிந்த வரராம நாயகர் கோயிலன்பான் முற்றுந் தவங்கள் புரிராம நாதன் முடித்தனனே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.