முற்காலத்தில் ஈழத்தில் மறவர்கள் நெடுந்தீவூ பகுதியில் குடியிருந்தனர். இக்குலத்தவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அதிலும் ஆண் குழவி வந்தால் பிள்ளை பிறந்த முப்பத்தொராம் நாளை வெகு சிறப்பொடு கொண்டாடுவார்கள். உற்றார் உறவோர் நண்பர் முதலானோருக்குத் திருமுகம் போக்கி யாவரும் வரவழைக்கப்பட்டு அக் கொண்டாட்டம் நடைபெறும். இவ் வைபவத்தின் போது நடுவீட்டில் இதற்கென சாணத்தால் மெழுகிடப்பட்ட இடத்தில் மஞ்சள் மாவினால் ஒருசிங்க உருவம் கீறுப்பட்டிருக்கும். அதன்மேல் வயதுமுதிர்ந்த மூதாட்டி ஒருத்தி பிறந்த சிசுவை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாடல் படிப்பாள். அப்பாட்டில் குறிப்பிடும் சாமான்களெல்லாம் பிள்ளைக்கு அன்பளிப்பாக இனசனங்கள் கொண்டுவந்து வைப்பார்கள். அப்பாடல் வருமாறு:
“சோழநாடு கண்டு வந்தீரோ தம்பி
சோழப் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
சேரநாடு கண்டு வந்தீரோ தம்பி
செந்நெல் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
பாண்டிநாடு கண்டு வந்தீரோ தம்பி
பச்சை முத்துக்கொண்டு வந்தீரோ தம்பி
சென்னை நாடு கண்டு வந்தீரோ தம்பி
சீரகம் கொண்டு நீ வந்தீரோ தம்பி
மதுரைநாடு கண்ட வந்தீரோ தம்பி
மஞ்சள்பொடி கொண்டு வந்தீரோ தம்பி
கொங்குநாடு கண்டு வந்தீரோ தம்பி
கொத்தமல்லி கொண்டு வந்தீரோ தம்பி”
இவ்வண்ணம் ஒவ்வொரு நாட்டையும் சரக்குகளையும் சொல்லி முடித்த பின்.
“அப்பாவைப் பார்த்திடவந்தீரோ தம்பி
ஆனைக்குட்டி வாங்கவந்தீரோ தம்பி
ஆச்சியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
ஆட்டுக்குட்டி வாங்க வந்தீரோ தம்பி
மாமனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
மான்குட்டி வாங்கிட வந்தீரோதம்பி
அத்தையைப் பார்த்திட வந்தீரோ தம்பி
அன்னக்குஞ்சு வாங்க வந்தீரோ தம்பி
பாட்டனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பசுக்கன்று வாங்கிட வந்தீரோ தம்பி
பாட்டியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பால் மோர் குடித்திடவந்தீரோ தம்பி”
இப்பாடலைப்பாடும்போது பெற்றார், பேரர்கள், மாமன்மார்கள் முதலானோர்கள் ஆட்டுக்குட்டி, பசுக்கன்று, கோழிக்குஞ்சுகளையும் மாமன், அத்தை முதலானோர் ஆனை, குதிரை, மான் முதலியவைகளை வெள்ளித் தகட்டிலும், செம்பத்தகட்டிலும், சில பணம் படைத்தவர்கள் தங்கம் பொன்னிலும் செய்து அன்பளிப்புச் செய்வர். இவைகள் முடிந்ததும் வயது முதிர்ந்த பெரியவரொருவர் பிள்ளையைத் தூக்கி மடியில்வைப்பர். அப்போது மறவ வாலிபர்கள் மறாட்டியமும்@ சிலம்பும் அடிப்பர் (மறாட்டியம் என்பது ஒரு முளத்தடிகொண்டடிக்கும் கோலாட்டம்) இவர்கள் கோலாட்டம் அடிக்கும்போது, பிள்ளையை வைத்திருக்கும் பெரியவர் கீழ்வரும் பாடலைப்பாடுவர்.
“ஆனைமுது கேறிவந்தீரோ தம்பி
அரசைப் பிடித்திடவந்தீரோ தம்பி
குதிரை முதுகேறி வந்தீரோ தம்பி
கொடியை உயர்த்திட வந்தீரோ தம்பி
தேரினிலேறி நீ வந்தீரோ தம்பி
தேசம் பிடித்திட வந்தீரோ தம்பி
வேலைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வெற்றியெடுத்திட வந்தீரோ தம்பி
வாளைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வடநாடு வென்றிட வந்தீரோ தம்பி
ஈட்டி சுழற்றி நீ வந்தீரோ தம்பி
ஈழம் பிடித்திட வந்தீரோ தம்பி
படைகள் திரட்டி நீ வந்தீரோ தம்பி
பகைவனை வென்றிட வந்தீரோ தம்பி”
இப்பாடலில் மறவர்களின் வீரமும், அவர்கள் பணி யாற்றும் படைகளின் வரிசையும், பாவிக்கும் ஆயுதநாமங்களும் நாடு பிடிக்கும் திறனும் தொனிக்கிறது. அன்றியும் சிங்கரூபம் கீறி பிள்ளையை வளர்த்திவைத்திருப்பதின் காரணம் இவர்களின் குலதெய்வமான துர்க்கையின் சிங்கவாகனத்தை நினைப்பூட்டுதற்கென எண்ண இடமுண்டு
மறவருக்கமைந்த வடிவத்தைப் “பண்டைத் தமிழர் பண்பாடு” என்னும் நூலில் கூறப்பட்டதைப்போல், “கல்லெனத்திரண்டதோளர், கட்டமைந்த மேனியர், முறுக்கு மீசையர், தருக்குமொழியினர், வீறிய நடையினர், சீறிய விழியினர், முதலாம் அம்சங்கள் இவர்களுக் கிருப்பதையும் பரக்கக்காணலாம்.
மறவர் குலத்தவர்களில் ஒரு பகுதினரான கருங்கை மறவர் போரில்லாக் காலங்களில் காடுகளில் சென்று புலிகளை வேட்டையாடி அப்புலிகளின் பற்களை எடுத்துவந்து தம் மாதர்களுக்கு மாலையாகக் கோர்த்துக் கழுத்தில் அணிவதற்குப் பரிசாகக் கொடுப்பர்.
புலியாட்டம் என்பது விளையாட்டுக்களில் இடம் பெறும் ஒரு வகை விளையாட்டு. ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். திருவிழாகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது
“மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி” என ஒரு பழங்காலக் கவிதை இதன் உண்மையை எடுத்தோதுகிறது.
நெடுந்தீவில் வாழ்ந்த இக்குலத்தவர்களும் சங்கு மணிகளாலும், பொன்னாலும் அணிகலன்களைத் தேடாது, புலிப்பல், புலிநகம் முதலானவைகளையே சிறு நூல்களில் கோர்த்துக் கழுத்தில்கட்டியும், பன்றி முள்ளுகளைக் கொண்டையில் செருகியுமுள்ளார்க ளெனப் பரம்பரைக் கதைகளுமுண்டு.
மணவீடுகளில் புதுமாப்பிள்ளையும், புதுப்பெண்ணையும் வியந்து கூறிப் பெண்கள் வாழ்த்துக்கள் படிப்பது தமிழர் வழக்கம். இவ்வழக்கம் இவர்களுள்ளும் இருந்து வந்தது. ஒரு பெண் மாப்பிள்ளையை வியந்து கூறிப்படிக்கும் பாடலில் ஒன்றைக் கீழே தருகிறேன்.
ஆனைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
ஆலமரம் போதாது
குதிரைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
கொல்லைகளம் போதாது
சிங்கங்களைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
சிறுதோட்டம் போதாது
வேங்கைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
வெளிநிலங்கள் போதாது
வேல் சொருகி வைப்பதற்கோ - பெண்கொடுத்த
வீட்டுவளை போதாது
அம்புவில்லு வைப்பதற்கோ - பெண்கொடுத்த
அரண்மனையோ போதாது
போதாது போதாது - பெண்கொடுத்த சீதனங்கள் போதாது.
இவ்வாழ்த்துப்பா மூலம் இவர்கள் மறவர் குலத்தவர்களென்பதும், புலிவேட்டையாடு வர்களென்பது தெரிகிறது.
அன்றியும் அக்காலம் இக்குலத்தவர்களின் மணக்கோல ஊர்வலங்களில் மணமுரசோடு, கோலாட்டம், மறாட்டியம், புலியாட்டம் முதலாம் விளையாட்டுக்களும் இடம் பெறும். ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். வேறுசாதியாரின் மண்வீடுகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.