அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில்
அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில் துரையசபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம். இங்கு சின்ன கருப்பர், பெரிய கருப்பர், முனீஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், குறத்தி அம்மன், யானை குதிரை சிலைகள் உள்ளன.பிரார்த்தனை< திருமணம் தடைபடுபவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டிப் பிரார்த்தனை செய்வார்கள். ஐஸ்வரியம் பெருக இங்கு வித்தியாசமான பிரார்த்தனை நடக்கிறது. பக்தர்கள், தங்கள் சக்திக்கேற்ப பத்து, ஐம்பது என்று ரூபாய் நோட்டை காளியின் மடியில் வைத்து வாங்குகிறார்கள். இப்படி வாங்கும் பணத்தை பயபக்தியுடன் தங்கள் வீட்டில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். காளியின் மடி தொட்ட பணம் வீட்டில் இருந்தால், செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. ஒரு வருடம் கழித்து காளி கோயிலுக்கு மீண்டும் வரும் போது அந்தப் பணத்தை எடுத்துவந்து காளி கோயில் உண்டியலில் போடுகிறார்கள். பின்னர் புதிதாக இன்னொரு ரூபாய் நோட்டை காளியின் மடியில் வைத்து எடுத்துச் சென்று பாதுகாக்கிறார்கள். இந்தச் சுழற்சி முறை தொடர்ந்து நடக்கிறது.நேர்த்திக்கடன்: சித்ரா பவுர்ணமி தினத்தன்று பால்குடம், காவடி எடுத்தல், தீ மிதித்தல் என காதமறவர் காளிக்கு நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
பெரிய மறவர் கொண்டு வந்த காளி என்பதால், காதமறவர் காளி என்று அவளுக்குப் பெயர் சூட்டினர். காலப்போக்கில் காதம் பெரியாள் என்ற பெயரும் அவளுக்கு ஏற்பட்டது. இப்போது காளிக்கு மண் சிலை மட்டுமே இருக்கிறது. வருடந்தோறும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் காதமறவர் காளிக்குத் திருவிழா கூட்டுகிறார்கள். அப்போது காதமறவர் காளியாக இரண்டு மண் சிலைகளை ஊர்மக்கள் சார்பில் செய்து வந்து கோயிலில் பிரதிஷ்டை பண்ணுகிறார்கள். இதைத் தவிர, வேண்டிக் கொண்டவர்களும் நேர்த்திக்கடனாக காளி சிலைகளைச் செய்து வைப்பதுண்டு. அடுத்த வருடத் திருவிழா வரை இந்தச் சிலைகளுக்கு பூஜைகள் நடக்கும். மறு வருடத் திருவிழாவில், பழைய சிலைகளைப் பின்னால் வைத்துவிட்டு, புதிய சிலைகளுக்கு பூஜைகள் நடக்கும். காதமறவர் காளிக்கு, சேலை போடுவதுதான் சிறப்பான காணிக்கை. இப்படி காணிக்கை போடும் சேலைகளை எந்தக் காரணம் கொண்டும் யாருக்கும் விற்பதோ, இனாமாகக் கொடுப்பதோ கிடையாது. மாறாக அத்தனை சேலைகளையும் மூட்டை மூட்டையாகக் கட்டி காளியின் பின் புறமுள்ள பிரகாரத்தில் போட்டு வைக்கிறார்கள். மழையில் நனைந்து வெயிலில் காய வேண்டும் என்பது காளி வாங்கி வந்த வரம் என்பதால், மேல் கூரை இன்றித் திறந்த வெளியிலேயே கோயில் கொண்டுள்ளாள் காதமறவர் காளி. இங்கே காளியைச் சுற்றிப் பெண்கள் யாரும் பிரகாரம் வலம் வரமாட்டார்கள். குழந்தை வரம் கேட்பவர்கள், காளிக்கு எதிரே உள்ள மரத்தில் தங்களது சேலைத் தலைப்பைக் கிழித்துத் தொட்டில் கட்டுகிறார்கள். குழந்தை பிறந்ததும் மறக்காமல் இங்கு வந்து மரத் தொட்டில் கட்டி விட்டுப் போகிறவர்களும் உண்டு.
காளிக்கு வலப் பக்கமாக முறுக்கு மீசையுடன் கருப்பர் சிலை ஒன்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்தலத்தின் ஆதிக் கடவுளான அடைக்கலம் காத்த ஐயனார், தன் தேவியருடன் அமர்ந்திருக்கும் சன்னதி தனியே இருக்கிறது. இவருக்கு அடுத்தாற் போல் சின்ன கருப்பரும் பெரிய கருப்பரும் இன்னொரு சன்னதியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிரில் உள்ள மைதானத்தில் யானை, குதிரை சிலைகள் கம்பீரமாக நிற்கின்றன. இவற்றைத் தாண்டி வலக் கோடிக்கு வந்தால் இன்னொரு மரத்தடியிலும் காதமறவர் காளி ஆக்ரோஷமாக உட்கார்ந்திருக்கிறாள். இவளுக்குப் பக்கத்தில் பன்னிரண்டு ஐயனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சன்னதிகளும், காளிக்கு நேர் எதிரே குறத்தி அம்மன் சன்னதியும் இருக்கின்றன. அநியாயக்காரர்களைத் தட்டிக் கேட்க காளியிடம் நீதி கேட்டு வருபவர்கள், ஐம்பத்தோரு ரூபாய் படி கட்டுகிறார்கள். படி கட்டிய எட்டு நாட்களுக்குள் அநியாயக்காரர்களுக்கு அதிரடித் தீர்ப்பு வழங்குவாளாம் காளி. காளியிடம் படி கட்டினால், தவறு செய்தவர்களைத் தட்டி எழுப்பிக் கேள்வி கேட்குமாம் குறத்தியம்மன். குறத்தியம்மனுக்கு இடப் பக்கம் நொண்டி சாம்பான் சன்னதி இருக்கிறது. கோயிலின் இடக் கோடியில் முறுக்கு மீசையுடன் கையில் அருவாள் தூக்கி நிற்கிறார் முனீஸ்வரன்.
தல வரலாறு:
ஒரு காலத்தில் கீழ்காத்தி கிராமத்தில் பெரிய மறவர், சின்ன மறவர் என்ற சகோதரர்கள் இருந்தனர். ஊருக்குள் கருப்பர் கோயில் ஒன்று இருந்தது. இந்தக் கோயிலின் கடாவெட்டுத் திருவிழாவில் வெட்டப்படும் கடாவின் மாமிசத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வது பெரிய மறவர் மற்றும் சின்ன மறவரின் வழக்கம். இதில் பெரிய மறவரது வீட்டில் ஆட்கள் குறைவு என்பதால், ஒரு முறை அவருக்குச் சற்றுக் குறைவான மாமிசத்தைக் கொடுத்தார்கள். இதனால் அடுத்த வருட கடாவெட்டின்போது கோயிலுக்கு வரவில்லை பெரிய மறவர். கிடாவை வெட்ட வேண்டிய பெரிய மறவர் வராததால் பூஜை போட முடியவில்லை. அதனால் ஆக்ரோஷமடைந்த கருப்பு பெரிய மறவரது வீட்டு ஓடுகளைப் பிரித்து உள்ளே இறங்கி, அவரை ஆலேக்காகத் தூக்கி வந்து கோயில் வாசலில் போட்டது. இதனால் கருப்பின் மகிமையை உணர்ந்து, மனம் திருந்திய பெரிய மறவர் கருப்புக்கு கடா வெட்டி, பூஜை முடித்து, குறைவான மாமிசத்துடன் வீட்டுக்குத் திரும்பினார். மாமிசம் குறைந்ததால், பெரிய மறவரை ஏளனமாகப் பேசிய அவர் மனைவி, உனக்கு நான் சோறு போட மாட்டேன். ஊரும் சாமியும் உனக்குச் சோறு போடட்டும். நீ அங்கேயே போயிடு! என்று துரத்தியடித்தாள். இதனால் விரக்தி அடைந்த பெரிய மறவர், தெற்குத் திசையில் கால் போன போக்கில் நடந்தவர் சீர்மிகு சேதுச் சீமையை (ராமநாதபுரத்தை) அடைந்தார். கால்கள் தளர்ந்ததால் அதற்கு மேல் நடக்க முடியாமல் ஒரு சீட்டைக்குள் (காடு) படுத்துக் கண் அயர்ந்தார். அப்போது சிறு பெண் குழந்தை வடிவில் வந்த ஓர் உருவம் பெரிய மறவரை தட்டி எழுப்பி, நான் உனக்கு சகாயம் பண்றேம்பா! என்றதாம். தூக்கத்திலிருந்த பெரிய மறவர் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து பார்த்தார். அவரை எழுப்பிய அந்தப் பெண் குழந்தை மறைந்து விட்டாள். ஒருவேளை கனவாக இருக்குமோ! என்று நினைத்து மறுபடியும் கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு அயர்ந்தார் பெரிய மறவர். பின்பு கண்விழித்து எழுந்தபோது அவரது தலைமாட்டில் ஒரு முழம் அளவில் சின்னதாக காளி விக்கிரகம் ஒன்று இருந்தது. இதைப் பார்த்து, உடல் புல்லரித்தது பெரிய மறவருக்கு. அந்த காளி விக்கிரகத்துடன் கீழ்காத்திக்குத் திரும்பி வந்தார்.
காளி விக்கிரகத்துடன் வந்த கணவனைப் பார்த்ததும் பனி போல் சாதுவாகிப் போன பெரிய மறவரின் மனைவி அவரை பலமாக உபசரித்தாள். இதை காளியின் மகிமையாக உணர்ந்த பெரிய மறவர் தனது வீட்டருகே இருந்த பனை மரத்தடியில் காளியை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார். அவ்வளவுதான்! அங்கு அமர வைத்ததும் குரூரமடைந்த காளி, தன் உக்கிரப் பார்வையால் கிராமத்தையே சுட்டெரித்தாள். கிராமத்துக்குள் திடீர் திடீரென தீப்பற்றி வீடுகள் எரிந்து நாசமாயின. ஊரில் இருந்தவர்கள் எல்லோருக்கும் வாந்தி, பேதி என கொடிய நோய்கள் தலைவிரித்து ஆடின. தாங்க முடியாத அளவுக்கு உயிர்சேதம் ஏற்பட்டது. காளியால்தான் இப்படி நடக்குது! என்று குறைப்பட்ட கிராம மக்கள், காளி சாந்தம் அடைவதற்காக நெல் மற்றும் தானியங்களை காளியின் காலடியில் காணிக்கையாகக் கொட்டினர். அப்படியும் காளியின் உக்கிரப் பார்வை தணியவில்லை. இனியும் காளியை இங்கு வைத்திருந்தால் ஊரையே அழித்து விடுவாள்! என்ற முடிவுக்கு வந்த ஊர்மக்கள், மலையாள மந்திரவாதிகளைக் கூட்டிவந்து காளியைக் கடத்த வழி கேட்டனர். அப்போது, காளியின் உக்கிரத்தை ஐயனாரால் மட்டுமே குறைக்க முடியும்! என்று உபாயம் சொன்னார்கள் மந்திரவாதிகள். இதன்படி ஊரின் தென்கோடியில் அடைக்கலம் காத்த ஐயனார் கோயிலுக்கு வடக்கே காளியை பிரதிஷ்டை செய்தனர். அதன் பின் கோபம் தணிந்த, காளி அன்று முதல் ஊரைக் காக்கும் தெய்வமாக மாறி விட்டாள்!அதிசயத்தின் அடிப்படையில்:மழையில் நனைந்து வெயிலில் காய வேண்டும் என்பது காளி வாங்கி வந்த வரம் என்பதால், மேல் கூரை இன்றித் திறந்த வெளியிலேயே கோயில் கொண்டுள்ளாள் காதமறவர் காளி. இங்கே காளியைச் சுற்றிப் பெண்கள் யாரும் பிரகாரம் வலம் வரமாட்டார்கள் என்பது சிறப்பு.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து தெற்குத் திசையில் நான்கு கி.மீ. தூரத்தில் துரையசபுரம் உள்ளது. அங்கிருந்து வலப்புறம் 2கி.மீ. தொலைவில் உள்ளது கீழ்காத்தி கிராமம். அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.