Sunday, September 15, 2013

ஊத்துமலை ஜமீன் இருதாலய மருதப்ப பாண்டியன்


ஜமீன்தார்கள் தமிழகத்தின் சிறுசிறு நிலப்பகுதிகளை ஆண்டு வந்த கால கட்டத்தில் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த பல சம்பவங்களை அப்பகுதி கதை சொல்லிகள் இன்றும் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஊத்துமலை சமஸ்தானத்தை ஆண்ட ஜமீன்தார்களுள் இருதாலய மருதப்ப பாண்டியன் மிகுந்த தமிழ் பற்றும் திராவிட இனப்பற்றும் உடையவராகத் திகழ்ந்தார். அவரின் அரண்மனையில் தமிழ்ப் புலவர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட்டார்கள். வீரகேரளம் புதூரை தலைமையிடமாகக் கொண்டே ஊத்துமலை மலை ஜமீனை இருதாலயமருதப்ப பாண்டியன் ஆண்டார்.


அரண்மனைக்குச் சற்று தொலைவில் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் கட்டப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றிலும் அக்ரஹாரம் அமைந்திருந்தது. அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர்கள் கோயில் காரியங்களைப் பார்ப்பது அரண்மனைக் காரியங்களைப் பார்ப்பது என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மருதப்ப பாண்டியர், சிறந்த ரசிகராகத் திகழ்ந்தார். தமிழ்ப்புலவர்கள் பலரையும் ஆதரித்தார். இசைக்கலைஞர்களையும் ஆதரித்தார். மருதப்பரின் அரண்மனையில் அடிக்கடி நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நாட்டியக் கலைஞர்களுக்கு பரிசுகளையும் கொடுத்து மருதப்பர் மகிழ்ந்தார். இரவில் கிட்டத்தட்ட தினசரி பொதுமக்களின் பொழுது போக்கிற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவைகளை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மருதப்பரும், மக்களோடு சேர்ந்து ரசித்து மகிழ்ந்தார்.

கவிதை அரங்கேற்றம், மற்போர் அரங்கம், நாடகம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், சொற்போர், பரத நாட்டியம் என்று அரண்மனைக்கு அருகில் உள்ள அரங்கில் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற வண்ணமிருந்தது. இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த என்றே நிரந்தரமாக அரண்மனைக்கு அருகிலேயே மருதப்பர் ஒரு கலை அரங்கையும் கட்டி இருந்தார். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு, “நாளை என்ன நிகழ்ச்சி நடக்கும்” என்று அறிவிப்பார்கள். கலை நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் தங்குவதற்கு என்று ஒரு இல்லமும், அங்கு தங்குபவர்களுக்குச் சாப்பாடு தயாரித்துக் கொடுக்க என்று சில சமையல்காரர்களையும் மன்னரே ஏற்பாடு செய்திருந்தார். கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப மன்னரே பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார். எனவே, மருதப்பரின் அவையை நாடி, கலைஞர்கள் பலரும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் இருந்தனர். கலை நிகழ்ச்சிகளைக் காண அக்ரஹாரத்துப் பிராமணர்கள் தவறாமல் வந்து ஆஜராகிவிடுவார்கள்.

கலை நிகழ்ச்சிக்கான அரங்கை அழகு படுத்துவது, நடக்க இருக்கும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்ப கலாபூர்வமான வேலைகளைச் செய்யும் பொறுப்பை அக்ரஹாரத்தைச் சேர்ந்த் சிலரிடம் மன்னர் ஒப்படைத்திருந்தார். எனவே, அக்ரஹாரத்துக்காரர்களின் ஆதிக்கம். அங்கு சுற்று தூக்கலாகவே இருந்தது. பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்ட அதிக வாய்ப்புக் கிடைத்தது. மன்னரும், கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குத் தேதி கொடுப்பது போன்ற பொறுப்புகளை அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் தமிழகம் எங்கும் ஜமீன்களைச் சுற்றி இருந்த கலை-இலக்கியச் சூழலே, ஊத்துமலை ஜமீனிலும் இருந்திருக்கிறது. அக்காலத்தில் சொக்கம்பட்டி என்ற ஊரில் ராமசாமி புலவர் என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ்ப்புலமை மிக்கவர். ஆரம்பத்தில் குருவிடமும், அதன்பின் அண்ணாவி மார்களிடமும் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பிறகு தானே முயன்று இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை எல்லாம் கற்றுக் கொண்டார்.

தான் கற்ற கல்வி வீணாகப் போகக் கூடாதே என்பதால் கிராமம் கிராமமாகச் சென்று இராமாயணம். மகாபாரதம் போன்ற காவியங்களைக் கதாகாலாட்ஷேபமாகப் பாடி மக்களை மகிழ்வித்து, அவர்கள் தரும் எளிய அன்பளிப்பைப் பெற்றுத் தன் காலஜீவனைக் கழித்துக் கொண்டிருந்தார். இராமசாமிப் புலவர், ‘ஆள் பார்க்க கன்னங்கரேர்’ என்று கரிப்பானைத்தூர் நிறத்தில் இருப்பார். ஓங்கல் தாங்கலான முரட்டு உடம்பு வேறு. மேலும் சட்டையும் போட்டிருக்கமாட்டார். இடுப்பில் மல்லுவேட்டி (தறியில் நெய்த பருத்தி வேட்டி) உடுத்தியிருப்பார்.

சம்சாரி மாதிரி தலையில் ஒரு துண்டை தலைப்பாகையாகக் கட்டி இருப்பார். நெற்றியில் இத்துனூண்டு (சிறிதளவே) திருநீறு மட்டும் தீற்றி (பூசி) இருப்பார். திராவிடப் பாரம்பரியத்தின் அச்சு அசலான அங்க அடையாளங்களோடு இருந்த சொக்கம்பட்டி ராமசாமிப் புலவர் ஊத்துமலை ஜமீன்தாரரான மருதப்பாண்டியரின் தமிழ்ப்பற்றைக் கேள்விப்பட்டு மன்னரைத் தரிசித்து வாய்ப்புக் கேட்க வீரகேரளம்புதூர் அரண்மனைக்கு வந்தார். புலவர் வந்த சமயம், மன்னர் அரண்மனையில் இல்லை. வேட்டைக்குச் சென்றிருந்தார். எனவே புலவர், அரண்மனையில் உள்ள மற்ற ஊழியர்களிடம் தான் வந்ததன் நோக்கத்தைக் கூறினார்.

அரண்மனை ஊழியர்கள், “இந்த மாதிரியான விசயங்களை எல்லாம் அக்ரஹாரத்தில் உள்ள இன்னார்தான் கவனிக்கிறார். எனவே, நீங்கள் அவரைப் பேய்ச் சந்தியுங்கள்” என்றார்கள். புலவரும் அக்ரஹாரத்தில் உள்ள அந்தப் பெரியவரின் வீட்டிற்குச் சென்றார். பெரியவரின் வீட்டு வாசலிலேயே, புலவர் அங்குள்ளவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பெரியவர் பூஜையில் இருக்கிறார். ‘ரெண்டு நாழிகை’ கழிச்சி வாரும் என்று புலவரிடம் சொன்னார்கள் அந்த வீட்டில் இருந்ததவர்கள்.

புலவரும் பூஜையில் இருக்கும் பெரியவருக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து அங்கிருந்து சென்று கோயில் மடத்தில் தங்கிவிட்டார். ரெண்டு நாழிகை நேரம் கழித்துச் சென்ற பிறகும் வெகுநேரம் பெரியவரின் வீட்டுத் தாழ்வாரத்தில் புலவர் காத்திருந்த பிறகே, பெரியவரைப் பார்க்க முடிந்தது. புலவர், பெரியவரை வணங்கி, தான் வந்த நோக்கத்தைச் சொன்னார். புலவரின் ஆஜானுபாகமான தோற்றம், கருத்த நிறம், உடை, இவைகள் பெரியவரை முகம் சுளிக்க வைத்தது.

“உம்மைப் பார்த்தால் மலைப்பளினன் (காட்டுவாசி) போல் இருக்கிறது. நீர் எங்கஓய், ராமாயணம், கீமாயணம் எல்லாம் சொல்லப் போகிறீர்? இங்கே, அவையில் இன்னும் ஒரு மாசத்திற்கு நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்கெனவே, முடிவாயிற்று. மகாராஜா வேறு ஊரில் இல்லை. எனவே நீர் ஊருக்குப் போயிட்டு இன்னும் நாலைந்து மாதம் கழித்து வாரும் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டார், பெரியவர். புலவர் ‘இந்தப் பெரியவர், ஆளைப்பார்த்து எடை போடுகிறார். நம் புலமையைப் பற்றி தெரிந்து கெள்ள இவர் முயற்சிக்கவில்லை’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, பெரியவரிடம் மறுமொழி ஏதும் கூறாமல் விடைபெற்றுக் கொண்டு நேரே, கோயில் மடத்திற்குச் சென்றுவிட்டார்.

புலவர், அன்று மாலையில் பக்கத்தில் உள்ள சிற்றூர் ஒன்றிற்குச் சென்று அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து அவ்வூர்ச் சிறுவர்களுக்குத் தமிழ்ப் பாடல்களை எளிய நடையில் இசையோடு பாடி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். புலவரின் இசை இன்பத்தையும், இலக்கியச் சுவையையும் கேட்டு, ஊரில் உள்ள சில, பெரியவர் களும், மரத்தடிக்கு வந்து உட்கார்ந்து, புலவரின் கதாகாலட்சேபத்தைக் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது அந்த வழியாக மருதப்ப பாண்டியன் வேட்டையை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் தன் பரிவாரங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

சற்று தொலைவில் வரும் போதே புலவரின் இசையும், பாடலும் மருதப்பரின் காதில் விழுந்தது. எனவே அங்கேயே நின்று புலவர் பாடுவதை ரசிக்க ஆரம்பித்தார். மகாராஜா நின்றதும். அவரோடு சேர்ந்து வந்த பரிவாரங்களும் நின்றுவிட்டன. புலவரின் இசைப் பாடல்களை மருதப்பரை மயக்கியது. எனவே மன்னர், குதிரையில் சவாரி செய்தபடி, புலவர் பாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார். மகாராஜா வருகிறார் என்றதும், அங்கு குழுமி இருந்த மக்கள் எல்லாம் எழுந்து அவருக்கு வணக்கம் சொன்னார்கள். புலவரும், இவர்தான் மருதப்பர் என்பதைப் புரிந்துகொண்டு மகாராஜாவை வணங்கினார்.

மன்னர் குதிரையில் இருந்து கீழே இறங்கி, அந்த இடத்திலேயே புலவரை ஆரத் தழுவி, ‘புலவரே நான் சற்று தொலைவில் இருந்தே உம் சையையும், தமிழ்ப்புலமையையும் கேட்டு ரசித்தேன். இன்றே இப்போதே தாங்கள் என்னுடன் அரண்மனைக்கு வரவேண்டும்” என்றார். ‘மன்னன் சொல்லுக்கு மறு சொல் ஏது?’ என்பது பழமொழி. எனவே, புலவரும் மருதப்பரோடு அரண் மனைக்கு வந்தார். அன்று இரவு அரண்மனையில் மன்னரின் விருந்தி னராகத் தங்கினார். புலவரைப் பாடச் சொல்லிக் கேட்டு தமிழ் இன்பம் சுவைத்தார் மருதப்பர்.

மறுநாள் காலையில் அக்ரஹாரத்தில் இருந்த பெரியவர் மருதப்பரைக் காண வந்தார். மகா ராஜாவோடு தான் நேற்று விரட்டி விட்ட புலவர் சமதையாக (சமமான ஆசனத்தில்) உட்கார்ந் திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். மருதப்பர், அந்த அக்ரஹாரத்துப் பெரியவரைப் பார்த்து, “இன்றைக்கு இரவு முதல் ஒரு வாரத்திற்கு இந்த ராமசாமிப் புலவரின் இராமாயண கதா காலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்யும்” என்றார். பெரியவர்க்கு தலை சுற்றியது. எப்படி இந்தப் புலவர் இங்கு வந்தார் என்ற விபரம் புரியவில்லை. என்றாலும் மகாராஜாவிடம் தைரியமாக, “ராஜா இராமாயண கதா காலட்சேபத்தை எல்லாம் பிராமணர்கள்தான் செய்ய முடியும். இவர் சூத்திரர். ஆளைப் பார்த்தாலே தெரியவில்லையா? இவர் இராமாயன விளக்கம் சொல்லி நாங்கள் உட்கார்ந்து கேட்கவா..- இது அபச்சாரம்” என்றார்.

மருதப்பருக்கு ‘பெரியவரிடம் பொதுப் புத்தி இல்லை. ஜாதிப் புத்திதான் இருக்கிறது’ என்பது ஒரு நொடியில் புரிந்துவிட்டது. மருதப்பர் கோபத்துடன் அந்த அக்ரஹாரத்துப் பெரியவரைப் பார்த்து, ‘சூத்திராள் ராமாயணம் சொன்னால் உங்களுக்கு ஆகாது. நானும் உங்கள் பார்வையில் சூத்ராள்தான். சூத்ராள் சொல்கிற ராமாயணத்தைக் கேட்க விரும்பாத நீங்கள், சூத்ராளாகிய நான் தரும் சம்பளத்தையும், சன்மானத்தையும் மட்டும் எப்படி கை நீட்டி வாங்கிக்கொள்கிறீர்கள்?

கலைகளை ரசிக்க வேண்டுமே தவிர, அது இன்ன ஜாதிக்காரனின் கலை என்று பார்க்கக் கூடாது. ஆளைப் பார்த்து, தோற்றத்தைப் பார்த்து, அவன் பிறந்த ‘குடி’யைப் பார்த்து அவனின் கலையை எடை போடக்கூடாது. இப்போது நான் உத்தரவு போடுகிறேன். “இவர் ஒருவாரம் சொல்லப்போகும் ராமாயணத்தை நீர் உட்பட இவ்வூர் அக்ரஹாரத்தில் உள்ள அனைவரும் கேட்க வேண்டும்” என்றார். மகாராஜாவின் கோபத்தைப் புரிந்துகொண்ட பெரியவர், மகாராஜா உத்தரவுப்படியே ஆகட்டும், ‘புத்தி, புத்தி’ என்று தன் தலையில் தானே கொட்டிக் கொண்டு, புலவரைப் பார்த்ததும ஒரு பெரிய கும்பிடைப் போட்டு விட்டுச் சென்றார்கள்.

அன்று மகாராஜா உத்தரவுப்படி சூத்ராளான ராமசாமிப்புலவர், இராமாணன கதா காலட்சேபதைத் தொடங்கினார். மகாராஜாவின் முன்னிலையில் ஊர் மக்களும், அக்ரகாரத்துக் காரர்களும், கலை அரங்கில் ஒருங்கிருந்து புலவர் பாடிவிளக்கம் சொன்ன ராமாயணத்தைக் கேட்டு ரசித்தார்கள். “முதலில் ஒரு வாரம் மட்டும் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த மருதப்பர் புலவரின் புலமையைக் கண்டு வியந்து பத்து நாட்களுக்கு நிகழ்ச்சியை நடத்தச் சொல்லி ஒவ்வொரு நாளும் தானும் அமர்ந்து புலவரின் கதைபாடல்களைக் கேட்டு ரசித்தார். முடிவில் புலவருக்கு, மருதப்பர் கணிசமான அளவு அன்பளிப்புகளையும் கொடுத்து அவரை மகிழ்வித்தார்” என்று இருதாயல மருதப்பர் காலத்தில் நடந்த இந்நிகழ்வை நினைவு கூர்ந்தார் ஊத்துமலையைச் சேர்ந்த வித்வான் தங்கப் பாண்டியனார். மருதப்பரின் தமிழ்ப் பற்றையும், கலை ரசனையையும் இத்தரவால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது


(தடங்களைத் தேடுவோம்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.